முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆளுங்கட்சிக்குள் உள்வாங்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில் இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக சரத் பொன்சேகாவின் கட்சி பரிணமித்துள்ளது. மேலும் இக்கட்சியின் அரசியல் பிரவேசம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளே பிளவுபட்டுள்ளன. இதன் காரணமாக அண்மையில் நடைபெற்ற மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளுந்தரப்புக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நிலை தொடருமானால் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும் சந்திரிக்காவின் வருகை மேலும் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்பதையெல்லாம் அரசியல் ஆய்வாளர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலைமையை சமாளிப்பதாயின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயக முன்னணியை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதே மாற்று வழியாகும் என்று ஜனாதிபதி மனக்கணக்கு போட்டுள்ளார்.
இதனையடுத்து சரத் பொன்சேகாவுக்கு ஆளுந்தரப்பில் இருந்து நல்லெண்ணத் தூது மற்றும் நேசக்கரம் நீட்டப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகா ஆளுந்தரப்பில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவரது ஜெனரல் அந்தஸ்து, ராணுவத் தளபதிக்கான ஓய்வூதியம், அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பவற்றை திருப்பி அளிக்கும் வகையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மருமகன் தனுன திலக்கரத்தின உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை கைவிடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் மூலமாக சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதுடன், பிரதிப் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை அளிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் சரத் பொன்சேகா தரப்பில் இருந்து இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.
Post a Comment