கிளிநொச்சியில் ஒரு விபச்சார கிராமம் (photos)



ஒரு காலத்தில் போரியல் வரலாற்றில் நீண்ட சாதனைகளை நிகழ்த்திய பெண் போராளிகள் வாழ்ந்த பிரதேசமான சாந்தபுரத்தில் இன்று அதிகளவான விபச்சார நிலையங்கள் இரகசியமாக இயங்கி வருகின்றன.


தென்னிலங்கை வாசிகள் படையினரின் ஆதரவுடன் இங்குள்ள தமிழர்களது காணிகளையும் வீடுகளையும் வளைத்துப் போட்டு அதில் விடுதிகளை நடத்தி வருகின்றனர். 18வயது தொடக்கம் 38 வயது வரையான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் பெண்களென்றால் ரூபா 1000 தொடக்கம் 3000 வரையும் சிங்களப் பெண்களென்றால் 1500 தொடக்கம் 5000 வரைக்கும் சிலவேளை அதற்கும் அதிகமாக ரேட் பேசப் பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது.

வயது கூடக்கூட ரேட் குறைக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது. வெளியிலிருந்து பார்த்தால் எல்லாமே சாதாரண வீடுகள் போலத்தான் தெரியும். இப்பகுதியிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது பெட்டிக்கடை வெற்றிலைக்கடை வைத்திருப்பவர்களை அணுகினால் எந்த வீட்டில் என்னவிலைக்கு வியாபாரம் நடக்கின்றதொன்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.


வெளிப்புறமாக உடைந்தும், துப்பாக்கிச் சன்னக் கீறல்களுடன் காட்சி யளிக்கும் வீடுகளுக்குள்ளே சென்று பார்த்தால் அரண்மனைபோன்று அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்காரமிக்க மின்குமிழ்கள், மின் விசிறிகள், கட்டில்கள் காட்சியளிக்கின்றன. அறைகளெல்லாம் குளிரூட்டப் பட்ட அறைகளாக இருக்கின்றன..

படையினருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இருவர் உட்பட பஸ் உரிமையாளர் ஒருவரும் இப்பகுதியில் விடுதி நடத்தி வருகின்றனர். ஓடர் செய்தால் விடுதிக்கே பெண்கள் அழைத்து வரப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது. சில வீடுகளை படை அதிகாரிகள் சிலர் நிர்வகித்து வருவதாக இப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது, சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் படைச்சிப்பாய் ஒருவருடன் சென்றதால் அவரது பிள்ளைகள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு கொடுத்துள்ளனர்.


ஆனால் தனித்துவிடப்பட்ட அவரின் பிள்ளைகள் பொலிஸ் நிலையம் சென்று தமது கண்ணீர் கதையை கூறி தாயாரை மீட்டுத்தரக் கோரியும் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்கமறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தெரிவித்தனர்.

28 வயதுடைய குறித்த பெண் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலின் போது அங்கு கூலி வேலை செய்துள்ளார். அப்போது இரணை மடுக் குளத்தின் பின்பகுதியில் கடமையிலிருந்த சிப்பாய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்தப் பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார். ஆனால் காதலை நிறுத்தவில்லை.


சம்பவம் குறித்து இவருடைய பிள்ளைகளிடம் விசாரித்த போது  ‘அந்த ஆமிக்காரன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து போவான். நாங்கள் சின்னப் பிள்ளைகள். எங்களுக்கு அப்பா இல்லை. அவர் வன்னி போரில் காணாமற் போய்விட்டார். எங்களுக்கு உதவிக்கு யாருமில்லை. அம்மா கூலிவேலை செய்துதான் எங்களை பார்க்கிறா. நாங்கள் ஐந்து பேர் கடைசி தம்பிக்கு ஒன்றரை வயது. அந்த ஆமிகாரன் தான் அம்மாவை திருமணம் முடிப்ப தாகக் கூறி வீட்டுக்கு வந்து போவான். அம்மா இதை எங்களிடம் சொல்லுவா. இப்படித்தான் கடந்த அன்று விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி நின்றுவிட்டு மறுநாள் அவர் செல்லும்போது அம்மாவும் கூடச் சென்றுவிட்டா.என்றாள் 12 வயதான அந்தச் சிறுமி.

இரண்டு நாட்களுக்குப்பின்னர் மதவாச்சியிலிருந்து தொலைபேசிமூலம் அழைப்பெடுத்த தாயார் தன்னை குறித்த படைச்சிப்பாயும் வேறு சிலரும் கடுமையாகத் தாக்கி தான் மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அந்த நம்பர் வேலை செய்யவில்லை. இவை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றபோது அம்மா இருக்கும் இடம் எங்கே? இவரை கூட்டிவாருங்கள் முறைப்பாடு பதிவுசெய்கிறோம் எனத் திருப்பி அனுப்பிவிட்டதாக அவரின் பத்தே வயதான இரண்டாவது மகன் தெரிவிக்கிறார்.

இரு நாட்களுக்கு பின்னர் மாலை வீடுதிரும்பிய தாயார் தான் மைத்துனர் வீட்டுக்கு சென்று வந்ததாக அயலவர்களிடம் தெரிவித்துள்ளார்.


பிள்ளைகள் இவ்வாறு கூறுகின்றனர் என்று கேட்டபோது, தான் குறித்த சிப்பாயுடன் விரும்பியே சென்றதாகவும், அடையாள அட்டை கொண்டு செல்லாததால் ஓமந்தையில் இராணுவத்தினர் திருப்பி அனுப்பி விட்டதாகவும் தொடர்பற்ற விதத்தில் தெரிவித்திருக்கிறார்.

யுத்த்திற்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. சாந்தபுரம் கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சனத்தொகையில் சுமார் 75 வீதமானவர்கள் கணவனின்றி தனித்து வாழ்பவர்களாகவும் கணவனால் கைவிடப் பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இதேவேளை அதிகமான பெண்களின் கணவர்கள் தடுப்பு முகாம்களிலும் சித்திரவதை முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பார்ப்பதற்காக வாரமொருமுறை தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் தமக்கு படையினருடன் ஏற்படும் தொடர்பானது தவிர்க்க முடியாததென இரண்டு பிள்ளைகளின் தாயான சாந்தபுரம் வாசியொருவர் தெரிவிக்கின்றார். தாம் மறுத்தால் நாளை தனது கணவருக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தாம் வேறு வழியின்றி தமது பிள்ளைகளை வாழ வைப்பதற்காக படையினருடன் சிநேகபூர்வமாக இருந்து வருவதாக அவர் தெரிவிக்கின்றார். 

இவற்றை விட இன்று சாந்தபுரம் காராமத்தில் ஆங்காங்கே விபச்சார நிலையங்களும் வீடுகளில் மிக இரகசியமான முறையில் இயங்கி வருகின்றன. அப்பிரதேசத்திலுள்ள ஆட்டோ ஓட்டுனர் சிலரும் இத் தொழிலுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர்.

தென்பகுதியிலிருந்து வந்த சிங்கள இளைஞனொருவர் கிளிநொச்சி பஸ் நிலையத்தில் இறங்கி சாந்தபுரத்தில் விபச்சாரம் இரகசியமாக நடத்தப் படும் இடத்தின் பெயரைக் கூறி இங்கு கூட்டிச்சென்று விடுமாறு கூறியதாகவும். தங்களுக்கே தெரியாத எமது பெண்களின் முகவரிகள் எங்கோ இருக்கும் இவர்களுக்கு எப்படி தெரிகிறது என் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அங்கலாய்க்கிறார்.

படைச்சிப்பாய்களை மகிழ்விக்கும் உல்லாசபுரியாக இருந்து வரும் அநுராதபுரத்திற்கு இரண்டாவதாக கிளிநொச்சி சாந்தபுரம் விளங்குவதாக சர்தபுரத்தில் வசிக்கும் இளைஞர்கள் தெரிவிக்கிறனர்.

கசிப்பு, போதைவஸ்து போன்ற தொழில்களும் இன்று கொடிகட்டிப் பறக்கின்றனவாம். தென்னிலங்கையிலிருந்து வரும் வியாபாரிகள் இங்கு அதிகமாக நடமாடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. காவல்துறையினர் கூட இத்தகைய சமூக விரோத செயல்களை கண்டும் காணாமல் இருப்பது வேதனையான விடயமே.


இப்பிரதேசத்திலுள்ள வீடொன்றில் படைச்சிப்பாயொருவர் வயதான தாயொருவர் உட்பட மூன்று பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக இப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். தனது தாயுடனும் சகோதரிகள் மூவருடனும் தாம் வசித்த வருவதாக இவர் வெளியில் சொல்லி வருகிறாராம். இவர்களுடன் வசிக்கும் ஒரு பெண் இறுதி யுத் தத்தில் தனது உறவுகளைப் பறிகொடுத்த தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்வீட்டில் மாலை 6மணிக்குப் பின்னர் பின்வாசல் வழியாக கள்ளச்சாராய விற்பனையும் அமோகமாக நடந்து வருகின்றதாம்.


சாந்தபுரத்திலுள்ள அநேகமான குடும்பங்கள் இன்று பிரிந்து வாழுகின்றன. புனர்வாழ்வு முடிந்து விடுவிக்கப்படும் கணவன்மார்கள் அதிகமானோர் இன்று தமது குடும்பத்தை விட்டு பிரிந்தே வாழுகின்றனர். புனர்வாழ்வு முடிந்து தமது மனைவி பிள்ளைகளுடன் சந்தேசமாக மீதமிருக்கும் காலத்தையும் கழிக்கலாம் என்ற கனவில் வரும் இவர்கள் அடுத்த கணமே பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இரவுவேளைகளில் நட்புறவுடன் வீடுகளுக்கு வந்து உரிமையுடன் உணவு உண்டுவிட்டுச் செல்லும்  படை அதிகாரிகள் அவர்களை விழுந்து விழுந்து கவனிக்கும் தமது மனைவிமார்களின் உபசரிப்புக்கள், படையினரின் அன்னியோன்யம் என பல சம்பவங்களையும் நேரில்கண்டு வாழ்வின் மீதான நம்பிக்கை இழந்து எங்காவது பிரிந்து சென்று வாழலாம் என்ற நிலைக்குத் தாம் தள்ளப்படுவதாக புனர்வாழ்வு பெற்றுவந்த முன்னாள் போராளியொருவர் தெரிவிக்கின்றார். 

சாந்தபுரத்தில் குடும்பத்தலைவன் உள்ள அதிகமான வீடுகளில் இரவுவேளைகளில் சண்டைகளும் சச்சரவுகளும் கூச்சல்களும் வெகு சாதாரணமாக நடப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலைக்கு முடிவு என்ன?


காலங்காலமாக கட்டுப்பாடும், தமிழர் மரபும் ஒருமித்து வளர்க்கப்பட்ட இத்தேசம் இன்று சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டு போகிறது. அகதியாய் அலைந்து எல்லாவற்றையும் இழந்து விரக்தியுற்று கடைசியில் தன்மானத்தையும் இழந்து இம்மக்கள் இன்று வாழ்கிறார்கள்.


இங்கு எவரையும் குற்றம் சொல்லமுடியாது. போர் இன்று முடிந்தாலும் அதன் விளைவானது எமது சமூகத்துக்குள் புகுந்து ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொருவிதமான வழியில் சிதைத்துக்கொண்டு வருகிறது.

சாந்தபுரம் மட்டுமல்ல வன்னியிலுள்ள எத்தனையோ கிராமங்கள் போருக்குப்பின்னர் இப்படித்தான் மாறிக்கொண்டு வருகின்றன. இதை எப்படி தடுத்து நிறுத்தப்போகின்றோம் என்பதே இன்று எம்முன் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

இந்த நிலையை இனி எப்படி மாற்ற வேண்டுமென்பது இன்றைய இளைஞர்களின் கையிலேதான் இருக்கிறது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

பார்போற்றும் எங்கள் பண்பாட்டையும் வாழ்வியலையும் மீண்டும் மீட்டெடுக்க முன்வாருங்கள்
Share this article :

+ comments + 3 comments

Anonymous
May 8, 2013 at 12:26 AM

பண்பாடாக வாழ்ந்த தமிழர்கள், இன்று நாயை விடவும் கேவலமாக சீரழிந்து போனமைக்கு முக்கிய காரணம் புலிகளே ஆகும்.

Anonymous
May 14, 2013 at 12:46 AM

மிகக் கவலையாக இருக்கிறது. . . . இதனைத்தட்டிக் கேட்க தமிழ் அரசியல் வாதிகள் தயாராக இல்லையா . அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லலாமல்லவா ?

Anonymous
June 2, 2014 at 12:57 PM

Hi

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger