ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதிக்கு எதிராக குழிபறிக்கும் நோக்கில் இரகசிய காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் எனும் பிரபல சிங்கள இணையத்தளமே இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் கோத்தபாயவின் இலக்காக இருப்பதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இணையத்தளத்தில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கை நீதித்துறை சட்டக்கோவையின் பிரகாரம் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்த எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இது தொடர்பாக அரசியலமைப்பின் 111 (சீ) விதி தெளிவாக விளக்குகிறது.
இவ்வாறான நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை அலட்சியம் செய்து சிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில் ஜனாதிபதி செயற்பட்டிருந்தார். மேலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிராணி பண்டாரநாயக்க நீதிமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதை வலுக்கட்டாயமான முறையில் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்நிலையில் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான நீதிமன்றத் தீர்ப்புகள் அப்படியே இருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ச, மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது. அப்படி அவர் போட்டியிட முடிவெடுத்தாலும் அதற்கெதிராக வழக்குத் தொடரப்படக்கூடிய நிலை காணப்படுகிறது.
இதனைத் தவிர்ப்பதாயின தமக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை ரத்துச் செய்விக்க வேண்டும். ஆனால் அதற்கும உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் பெரும்பான்மையானவர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியப்படும் நிலையில் இல்லை.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று ஒரு சட்டவிதி இருக்கின்ற போதிலும், 35 (2) சட்டவிதிகளின் பிரகாரம் இரண்டு தடவைகள் பதவிக்காலம் (12 ஆண்டுகள்) பதவியில் இருக்கும் வரை மட்டுமே ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று வரையறை செய்யப்பட்டுளளது.
அப்படியே ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதிலிருந்து சட்ட விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடர்வதற்கு எந்தத் தடையும் இல்லை.
இவ்வாறான நிலையில் சட்டவிதிகளின் பிரகாரம் அடுத்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ தடுக்கப்படும் பட்சத்தில், தான் போட்டியிட வேண்டும் என்பதே கோத்தபாய ராஜபக்சவின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கேற்றவாறு அவர் காய்நகர்த்தி வருகின்றார்.
அதற்காகவே தன்னை கடும்போக்கு சிங்களவராக காட்டிக் கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். பொது பல சேனா போன்ற தீவிர சிங்கள அமைப்புகளை ஆதரித்து, அவர்களின் மூலம் அடுத்த ஜனாதிபதிக்கு பதவிக்கு பொருத்தமானவர் கோத்தபாய என்று சொல்ல வைக்கின்றார்.
இப்படியான செயற்பாடுகள் மூலம் எப்படியும் தான் அடுத்த ஜனாதிபதியாகி விட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு யாரேனும் தடையாக இருக்கும் பட்சத்தில் இராணுவம் மற்றும் பொலிசை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, இராணுவ ஆட்சியைத் தொடரவும் அவர் தயங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
மறுபுறத்தில் ஜனாதிபதியைப் பலவீனப்படுத்தும் வகையிலான அரசியல் செயற்பாடுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஈடுபட்டு வருகின்றார். முன்னைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இதையெல்லாம் உணர்ந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த, சரத் பொன்சேகாவைத் தன் பக்கம் இழுத்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி மற்றும் அரசயலில் ஈடுபடுவதற்கான உரிமைகள், ஓய்வூதியம் என்பவற்றை திரும்ப வழங்கும் வகையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பொன்றை வழங்குவது குறித்து தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்.
இதன் மூலம் சந்திரிகாவின் அரசியல் செயற்பாடுகளை அப்படியே முடக்கிப் போடுவதுடன், தனது சகோதரர் கோத்தபாயவின் இராணுவ ரீதியிலான ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்றும் இது தொடர்பான மேலதிக தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.
Post a Comment