நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்பத்துவோம் என்றும் 13 பிளஸ் வழங்குவேன் என்றும் சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இன்று 13 பிளஸ் என்றால் என்ன? நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை என்றால் என்ன? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடகம் ஆடுகிறார். அவரைப்போல் நடிகர் யாருமே இருக்க முடியாது என்று நவசமசமாஜயக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கொழும்பு, பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அஸாத் சாலி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பினர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசியதாவது,
இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், இலங்கைக்கு தேவையில்லையென்று விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் கூறுகின்றார்கள், ஆனால் இந்தியாவினால் இந்து நாட்டுக்குள் பௌத்த மதம் வந்தது என்பதை அவர்கள் அறியவில்லையா, பௌத்தத்தை போற்றி காக்கும் அவர்கள் ஏன் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இந்தியா உள்நாட்டு பிரச்சினையில் தலையீடு செய்யக்கூடாது என கூறுகிறார்களே, உண்மையில் அப்பிரச்சினையில் இந்தியா தலையிடாமல் வேறு யார் தலையீடு செய்வார்கள்? இந்தியாவில் 80 வீதம் இந்துக்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். அந்த மக்கள் இந்த நாட்டில் அநீதியாக நடத்தப்பட்டால் இந்தியா தலையீடு செய்யும், செய்யத்தான் வேண்டும்.
இந்தியாவிலிருந்து அசோக சக்கவர்த்தி காலத்தில் சங்கமித்தை வெள்ளரச மரக் கிளையை கொண்டு வந்ததோடு பௌத்தத்தைத் தழுவினால் நன்மை என்றுதான் கூறினார்கள். ஆனால் தேவ நம்பியதீசன் உடனே பௌத்தத்திற்கு மாறினான். அவரை பின்பற்றிய மக்களும் மாறினார். இன்று தேவ நம்பிய தீசனை உயர்ந்த இடத்தில் வைத்து போற்றுபவர்கள் அதே இந்தியாவின் தலைமையில் வந்த 13 ஆம் திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டுகமென கோருவது கேளிக்கையாகவுள்ளது.
13 ஆவது திருத்தம் என்பது உண்மையில் இந்தியாவினால் இங்கு கொண்டு வரப்பட்டதல்ல, அது வட்ட மேசை மாநாட்டின்போதே முன்வைக்கப்பட்ட ஒரு அம்சம், அது தமிழ்- சிங்கள தலைமைகளின் பேச்சுவார்த்தை மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு இணக்கம், அதற்கு முன்னர் இதுபோல பல ஒப்பந்தங்கள் தமிழ், சிங்கள தலைமைகளுக்கு இடையே ஏற்படுவதற்கான முயற்சிகள் எடுத்தும் இறுதியில் டட்லி, பண்டாரநாயக்க ஆகியோர்
செல்வநாயகத்துடன் செய்து கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தமையாலேயே ஜே.ஆர். ஜெயவர்தன அவ்வாறு செய்துவிட கூடாது என்பதற்காகவே, இந்தியா முன்னின்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தியது. அது இந்த நாட்டுக்கு தேவையான ஒன்று, அதனை இல்லாது செய்ய முயற்சிப்பது அநீதியான துரோக செயல் என்பதை அரசாங்கமும் அரசில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளும் உணர வேண்டும்.
ஒரு பெண்ணை ஆணுக்கு திருமண பொருத்தம் பார்த்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே தேனிலவுக்கு சென்ற பின்னர் மீண்டும் பொருத்தம் பார்க்க வேண்டும் என மணப் பெண்ணின் அப்பா கூறுவதுபோலவே மஹிந்த ராஜபக்ஷவின் செயல் 13 ஆம் திருத்தம் தொடர்பில் உள்ளது. இது மிக வேடிக்கையான முட்டாள்தனமான செயலாகும், எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment