ஈழ நாட்டிற்கான போராட்டம் முடிவடைந்து இன்று முஸ்லிம் தீவிரவாதிகளுடனான போர் ஆரம்பித்துள்ளது. சிங்கள மக்களை காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாள வேண்டும் என தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஹர்த்தாலை அனுஷ்டிக்க அனுமதித்தது மிகப்பெரிய தவறெனவும் குறிப்பிட்டது.
முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து விடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே அரசாங்கத்தின் முன் கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களும் மதத் தலைவர்களும் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பினை மேற்கொண்டமை தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
தனி ஈழத்திற்கான போராட்டத்தினை நாம் முறியடித்து இன்று நாட்டில் பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம். முப்பது வருடகால போராட்டத்தின் வெற்றி இன்று எமது நாட்டினை சர்வதேச அளவில் சிறந்த நாடாகவும் தீவிரவாதத்தினை அழித்த நாடாகவும் மாற்றியுள்ளது. வடக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து சாதாரண பொது மக்களை ஆயுதம் ஏந்த வைத்து மிகக் கொடுமையான செயற்பாட்டினை அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் செய்தது. அதே நிலைமை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அப்பாவி முஸ்லிம்களை மத அடிப்படையிலும் தீவிரவாத கொள்கைகளை புகுத்தியும் போராட்ட குணம் கொண்ட aஇனமாக மாற்ற ஒரு சிலர் முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம் தீவிரவாதிகளினால் இன்று நாட்டிற்கும் சிங்கள இனத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேற்கத்தேய நாடுகளின் தீய சக்தியும் மத்திய கிழக்கு நாடுகளின் தீவிரவாத சக்திகளும் ஒன்றிணைந்து இலங்கையில் அமைதியை குழப்பி மக்களை சீரழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு செயற்பாடே அளுத்கம கலவரம். முஸ்லிம் சிங்கள மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி முழு நாட்டிலும் இனக் கலவரமொன்றினை ஏற்படுத்தவே முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர்.
அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் தீவிரவாதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இலங்கையிலும் முஸ்லிம் போராட்ட கொள்கையினை பரப்புகின்றனர். இதன் பிரதிபலிப்பே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் சிங்கள முரண்பாடுகள். ஒரு புறம் கலவரத்தையும் தூண்டிவிட்டு மறுபுறம் ஜனாதிபதியிடமும் பாதுகாப்பு செயலாளரிடமும் சென்று கண்ணிர் வடிக்கின்றனர்.
அளுத்கம சம்பவத்தில் முஸ்லிம்களின் தாக்குதலில் பல சிங்கள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் சிங்கள மக்கள் எவரையும் ஹர்த்தால் அனுஸ்டிக்கவோ ஆர்ப்பார்ட்டம் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம்களை மட்டும் ஹர்த்தால் அனுஷ்டிக்க அனுமதித்துள்ளனர். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு ஒரு சட்டத்தையும் ஏனையோருக்கு வேறு சட்டத்தையும் இந்த நாட்டில் பிரயோகிக்க முடியாது.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தின்படியே செயற்படுகின்றனர். அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. அதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளும் போது இலங்கை பௌத்த சிங்கள நாடு இங்கும் ஒரே சட்டம் அதுவும் பௌத்த சட்டமே செயற்பட வேண்டும். ஆனால் இங்கு மூவின மக்களையும் பாதுகாத்து அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை தவறாக பயன்படுத்தி நாட்டில் மத வாதத்தையும் முஸ்லிம் தீவிரவாதத்தையும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment