எதிர்பார்த்தபடி அளுத்கம விவகாரத்தில் ஒட்டுமொத்த பொறுப்பையும் முஸ்லிம் சமூகத்தின் தலையில் ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இருபகுதியினரும் சேர்ந்த ‘கலவரமாக’ குறித்த சம்பவத்தை சித்தரிக்க விளைந்துள்ள அதேவேளை தற்போது 23 பௌத்த சங்கங்கள் இணைந்து வெளியிடும் ‘உண்மைக் கதை’ என இன்றைய சிலோன் டுடே இது தொடர்பில் நன்கு வடிவமைக்கப்பட்ட விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்பயைில் முஸ்லிம்களே முதலில் பத்திராஜகொட தேரரை தாக்கியதாகவும், அதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் உடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிராக 15.06.2014 அன்று அளுத்கமவில் ராவணபலயவும், பொதுபலசேனாவும் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு பொலிசார் அனுமதி வழங்கியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் கூட்டம் முடிந்து கலைந்து சென்றவர்கள் மீது தர்கா நகர் பள்ளிவாசலில் கூடியிருந்த முஸ்லிம்களே தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் ஒரு பௌத்த பிக்கு மீதும் கல்லெறியப்பட்டு அவர் உடன் மயங்கி விழுந்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியதனாலேயே கலவரம் வெடித்ததாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இச்சம்பவத்தில் சிங்களவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வெலிபன்னையில் சிங்களவர்களது கடைகள் சேதமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்களவர்கள்தான் நூற்றுக்கணக்கில் சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிங்களவர்களுக்கு நடந்தவற்றை ஊடகங்களுக்கு வெளிக்கெணர்வதற்கு தகவல் திணைக்களம் தடை விதிக்கப்பட்டதாகவும், ஆனாலும் சில முஸ்லிம் அரசியவாதிகள் முற்பட்டு இந்தப் பிரச்சினையை ஊடகங்கள் ஊடாக சர்வதேசமயமாக்கிவிட்டதாகவும் 23 பௌத்த இயக்கங்கள் கூட்டாகச் சொல்லியிருப்பதாகக் கூறி அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆக்கத்தில் சேதத்துக்குள்ளான முஸ்லிம்களது கடைகளையே சிங்களவர்களது கடைகள் போன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment