அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட இனவாத மோதல்களின் பின்னர் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே, அழிவடைந்த கட்டிடங்களை சுத்தப்படும் பணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவத்தினரை ஈடுபடுத்தியிருந்தார்.
இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புச் செயலாளர் இந்த பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தியது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவங்கள் நடந்தமைக்கான சாட்சிய தடயங்களை அழிப்பதற்காகவா பாதுகாப்புச் செயலாளர் முன்கூட்டியே சுத்தப்படுத்தும் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்தினார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
தீவைப்பு சம்பவம் ஒன்று நடைபெற்ற பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரசாயன பகுப்பாவாளர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக்கான பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னரே இந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
எனினும் இந்த சட்ட நடவடிக்கை பின்பற்றப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது சாட்சியங்களை மறைக்கும் முயற்சியாக என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில், கடந்த ஜூன் 15 ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் பிரதேசங்களில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட அழிவுகள் சுத்தப்படுத்தப்படுவதற்கு முன்னர் இரசாயன பாகுப்பாய்வு அறிக்கை பெறவேண்டும் எனவும் இதனால் சுத்தப்படுத்தும் பணிகளை நிறுத்துமாறும் மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டார்.
அதேவேளை சம்பவத்தின் கொல்லப்பட்டவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் எனினும் குறுகிய மரண விசாரணையில் வாளால் வெட்டப்பட்டதால் மரணம் சம்பவித்தது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய சட்ட வைத்திய அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment