இனவாதிகளினால் களுத்துறை மாவட்டத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது தனது உயிரை துச்சமென மதித்து முஸ்லிம்கள் சிலரை காப்பாற்றியவர் எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும. தாக்குதல் நடத்தியவர்களினால் கடுமையாக தாக்கப்பட்ட இவர், தான் காப்பாற்றி வந்த முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேரை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றவர். மிகவும் இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவிய இவர் தற்போது பலராலும் விரும்பப்படுகின்றார்.
தாக்குதலுக்குள்ளான பகதிகளில் ஒன்றான வெலிபிட்டிய பகுதியில் ‘பாலித தெவரப்பெரும சண்டிமல்லிதான், ஆனால் அவர் தங்கமானவர். அவருக்கு தங்கமான மனசு’ என ஒருவர் கூறிய வார்த்தை மனதில் நிலைகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனது உடலுக்கு காயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை மற்றவர்களின் மனக்காயங்களை ஆற்ற நினைக்கும் பாலித தெவரப்பெருமவை நாம் நேர்கண்டோம்.
அவருனான நேர்காணலை இங்கு தருகிறோம்.
கேள்வி :- அளுத்கம – தர்காநகர், பேருவளை சம்பவம் இடம்பெற பிரதான காரணம் என்ன?
பதில் :- இந்த பௌத்த நாட்டில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் மிகவும் நெருக்கமானவர்கள். ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். ஆனால் கடந்த 15 ஆம் திகதி அளுத்கமவில் இதுவரை எனது வாழ்க்கையில் காணாத காட்சிகளை கண்டேன். அச்சம்பவம் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் களுத்துறை மாவட்டத்தில் இடம் பெற்றமையை எண்ணி மிகவும் வருந்துகின்றேன். இவ்வன்முறைக்கு பிரதான காரணம் களுத்துறை நகரில் முஸ்லிம் நபர் ஒருவர் பிக்குவை தாக்கியதாக கூறப்பட்டமையாகும். இந்த பிரச்சினைக்கு மூல காரண கர்த்தா பிக்குவை ஏற்றிச்சென்ற சாரதியாகும். சாரதியின் தவறான செயற்பாட்டின் காரணமாகவே முஸ்லிமானவர் சாரதியை தாக்கியுள்ளார். இருப்பினும் குறித்த பிரச்சினையை தீர்க்க பிக்கு முன்வந்தமையே இக்குழப்பத்திற்கு வழிவகுதிதுள்ளது. இருப்பினும் பிக்கு தாக்கியதாக கூறப்பட்ட நபரை பொலிஸார் உடனடியாக கைது செய்ததுடன் குறித்த நபர் பிக்குவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். பிரச்சினை அத்தோடு முடிவடைந்து விட்டது. இதற்கிடையே பொது பலசேனா குறுக்கிட்டு அளுத்கம நகரில் கூட்டமும் பேரணியும் செய்தமையே கலவரத்திற்கு மூல காரணமாக அமைந்தது.
கேள்வி : இந்த வன்முறையின் போது ஒரு குடும்பத்தை காப்பாற்ற முனைந்த போது உங்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றதே. அதனை பற்றி சற்று விளக்க முடியுமா?
பதில்: உண்மையில் கூறப்போனால் அந்த சம்பவங்களை நினைத்து பார்க்க முடியாது. இதனால் எனக்கு நிம்மதியாக உறங்க முடியவில்லை. இந்த சம்பவம் இடம்பெறுவதாக செவிமடுத்தவுடன் எனது கிராம இளைஞர்களை அழைத்துச் செல்லாமல் நான் மட்டும் மோட்டார் சைக்கிளில் சென்றேன். ஏனென்றால் குறித்த இளைஞர்களின் உயிர்களுக்கு எனக்கு பொறுப்புக் கூற முடியாது. இந்நிலையில் அளுத்கமவிற்கு சென்று கொண்டிருந்த வேளை ஒரு ஆட்டுப் பண்ணையில் தீ மூட்டப்பட்டு எரிவதை கண்டேன். உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற வேளை மூவாயிரம் ஆடுகள் அப்பண்ணையில் காணப்பட்டது. அந்நேரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் திண்டாடினேன். அச்சமயம் மின் துண்டிக்கப்பட்டிருந்தது. இத்தீயினால் ஆடுகள் அச்சத்தில் அங்கும் இங்கும் சென்று கொண்டு ‘மே…! மே…!’ என்று கதறிக்கொண்டிருந்தது.
இதன்போது உடனடியாக தண்ணீரை பாய்ச்சி தீயினை அணைத்து விட்டேன். இதன்போது சிலர் என்னை சூழ்ந்து நீ முஸ்லிமா (தம்பியாவா? – தம்பியா என்பது முஸ்லிம்களை குறிக்க கொச்சையாக பயன்படுத்தும் ஒரு வார்த்தையாகும்) என்று கேட்டதற்கு நான் கூறினேன், நான் முஸ்லிமும் அல்ல. இந்த மிருகங்களும் முஸ்லிம் அல்ல. இது நாட்டின் பொருளாதாரம் என்று கூறினேன். பாராளுமன்றத்தில் காயத்துடன் உரையாற்றிய காட்சி அவற்றை கண்டவுடன் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. இதன்போது மக்கள் மனக்கவலையுடனும் அச்சத்துடனும் காணப்பட்டனர். இந்த மனக்கவலை காரணமாகவே இக்பால் என்பவரும் உயிரிழந்தார்.
இவர் வெலிப்பன்னையை சார்ந்தவர். இவரது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவரது மனைவி கண்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததுடன் குழந்தைக்கும் காயமேற்பட்டிருந்தது. இந்நிலையில் இக்பாலுடைய அம்மா அக்கா சகோதரர்கள் வெலிப்பிட்டியவிலேயே உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இக்பாலின் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்காக வெலிப்பன்னை பொலிஸாருக்கு தொடர்பு கொண்ட போது கெட்ட வார்த்தையினால் திட்டிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்தனர். அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனை அறிந்த நான் நண்பரின் வேனை எடுத்துக் கொண்டு புஹாரி ஹுசைன் என்பவரை ஏற்றிக் கொண்டு அளுத்கமவிற்கு சென்று குறித்த பூதவுடலையும் குழந்தையையும் ஏற்றி பயணிக்க முற்பட்ட போது 450 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எனது வேன் மீதும் என் மீதும் தாக்கினர். எனினும் நான் வாகனம் செலுத்துவதை விடவில்லை. அச்சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பின்பு குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு சடலத்தை வீட்டாரிடம் ஒப்படைத்தேன். இதன் காரணமாக 16 பேர்களின் உயிர்களை முழுமையாக என்னால் காப்பாற்ற முடிந்தது.
கேள்வி: – இந்த கலவரத்தின் போது பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாட்டை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: – இந்த கலவரத்தை பொலிஸாரினாலும் விசேட அதிரடிப் படையினராலும் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. உலகிலேயே அதி பயங்கரவாதமான விடுதலை புலிகள் இயக்கத்தை அழித்து அதன் தலைவர் பிரபாகரனை கொன்ற நமது நாட்டின் பாதுகாப்பு படையினரால் ஏன் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே இதற்கு பொலிஸ் மா அதிபர் கட்டாயம் பொறுப்பு கூறியே ஆக வேண்டும். இதன் போது பாதுகாப்பு படையினர் பக்கச்சார்பாகவே செயற்பட்டனர். இக் கலவரத்தின் போது சட்டத்தை ஒரு குழுவினரே வைத்து கொண்டனர். ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இத்தகைய சம்பவம் இடம்பெற்றமை கவலையளிக்கின்றது. உண்மையிலேயே நான் இனவாதத்தின் மீது வெறுப்படைந்துள்ளேன்.
இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் பண்பானவர்கள். வெலிப்பன்னை மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வேளை முஸ்லிம்களே உதவினர். இதன் போது பொது பல சேனா வரவில்லை. இந்த வெள்ளப்பெருக்கில் வெலிப்பன்னை முழுமையாக மூழ்கியது. முஸ்லிம்களின் உடைமைகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் முஸ்லிம்களே சிங்களவர்களுக்கு உதவினர். இதனை யாரும் மறந்து விட முடியாது. ஆகவே பொலிஸ் மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லையேல் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன்.
கேள்வி: – இந்த சம்பவம் தொடர்பில் அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுகின்றதே. அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: – இந்த சம்பவத்தினை தூண்டி விட்டது பொதுபல சேனாவாகும். ஆனால் அதில் குளிர் காய்ந்தது அரசாங்கமாகும். எனவே அரசாங்கம் இதன் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். மக்களுடைய பிரச்சினையை மூடி மறைக்க அரசு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
கேள்வி: – அளுத்கம பிரச்சினைக்கு பிற்பாடு முஸ்லிம் வியாபார நிலையங்கள் தீயிடப்பட்டும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும் உள்ளது. இது பற்றி உங்களது கருத்து என்ன…?
பதில் :- இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தலையிடாமையே பிரதான காரணமாகும். அரசு இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் தேர்தலினை மையப்படுத்தி இவ்வாறாக கூறவில்லை. மூவின மக்களின் பிரச்சினையின் போதும் அங்கு நான் இருப்பேன். இது என்னுடைய பழக்கம். எனது கொள்கையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. இந்த இனவாத வன்முறைகள் நாடு பூராவும் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. இது மிகவும் பயங்கரமான நிலையாகும்.
கேள்வி: – இலங்கையில் நடைபெறும் இத்தகைய சம்பவங்களினால் அரபு நாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறதா?
பதில்: – அவ்வாறாயின் அரபு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உயிர்களுக்கு அரசாங்கம் பதில் கூறியே ஆக வேண்டும். பொதுபல சேனா வைக்கோலின் மீது மூட்டிய தீயிற்கு அரசாங்கமே பெற்றோல் ஊற்றியது. எனவே இவையனைத்திற்கும் மூல காரணம் பொதுபலசேனாவாகும். அரபு நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு பொதுபல சேனா பொறுப்பு கூறுமா? ஏனென்றால் இது பொலபலசேனா கொள்ளையிடும் நோக்குடன் மூட்டப்பட்ட இனகலவரமாகும். இதுவா கலகொட அத்தே ஞானசார தேரரின் மார்க்கம். ஆகவே தீயினால் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடைமைகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
நன்றி: விடிவெள்ளி
Post a Comment