வாக்காளர்களே வரம்பு மீறாதீர்கள்!



2015 ஜனவரி மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து



இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள இச்சந்தர்ப்பத்திலே, பட்டி தொட்டியெங்கும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருவதை காண முடிகிறது. தாம் ஆதரிக்கும் வேற்பாளர்கள் ஆற்றிய பணிகளை புகழ்ந்தும், அவர்களின் ஆளுமை பண்புகளை சிலாகித்தும், எதிரணி வேற்பாளர்களின் குறைகளை குத்திக் காட்டியும், அவர்களின் இயலாமைகளை இகழ்ந்தும் கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டுள்ளதனை பளிச்சென்று அவதானிக்க முடிகிறது.

கட்சிகளுக்கிடையில் வெடித்துச் சிதறும் இத்தேர்தல் கள வார்த்தை சமர்களினால் கட்டுடைந்த பெரு வெள்ளமாய் கட்சிகளுக்கிடையிலான கைகலப்புகளும், தேர்தல் கால வன்முறை வெறியாட்டங்களும் கூட நாடு தழுவிய ரீதியில் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றமை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து  67 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக   பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுன் தொடர்புடைய 350 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்துக்கு கிடைத்துள்ளன. இதில்  ஆறு துப்பாக்கிப் பிரயோக  சம்பவங்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார். வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை தேர்தலின் உஷ்னத்தை உணர்வதற்கான ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே! 


தேர்தல் என்றாலே வசை பாடுதலும், வன்முறை வெறியாட்டங்களில் ஈடு படுவதும், மதுக் குவளைகளுடன் இராக் காலங்களில் உலாவித் திரிவதும் தான் என்ற தப்பான பதிவு இந்நாட்டின் பெரும்பான்மையானவர்களின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பதை காணலாம். ஆனால், ர் உண்மை முஸ்லிமைப் பொருத்த வரைக்கும் அவனது அனைத்து செயற்பாடுகளின் போதும் அல்லாஹ் என்னை அவதானிக்கின்றான் என்ற ஈமானிய உணர்வு அவனை வழிநடத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும் என்று இஸ்லாம் எதிர் பார்க்கிறது. இந்த ஈமானிய உணர்வுப் பிரவாகம் தேர்தல் கால நடத்தைகளை செப்பனிடக் கூடியதாக அமைதல் வேண்டும். 

ஆனால், தேர்தல் என்றவுடன் மார்க்கம் தடை செய்த ஏராளமான தீமைகளில் வீழ்ந்து பாவத்துடன் சங்கமிப்பவர்களே இன்று அதிகமாகவுள்ளனர். தான் விரும்பும் தலைவனின் பெயரை நிமிடத்திற்கு பலவிடுத்தம் உச்சாடனம் செய்து, அவரது புகழ்பாடி, ‘இவரைப் போன்ற பரிசுத்தவான் யாரும் உண்டா?’ என்று கருதும் அளவுக்கு தனது வேற்பாளரை உச்சானிக் கொம்பில் வைத்து மேடைகள் தோரும் புகழாரம் சூட்டுவதை காணலாம். இவ்வாறு புகழ் பாடுவதை நபிகளார் கண்டிக்கிறார்கள். ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், “அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்என்று கூறினார்கள். முஸ்லிம் - 5730

அதே போன்று, வேற்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என்ற போர்வையிலே வரம்புகளைத் தாண்டி இணைவைக்கும் வார்த்தைகளை வெளியிடும் அளவுக்கு இன்றைய முஸ்லிம்களின் பிரச்சாரங்கள் அமைந்திருப்பது விசனத்துக்குரியதாகும். அது மட்டுமின்றி, எதிரணி வேற்பாளரின் வெற்றியை எப்படியாவது தட்டிப்பறித்துவிட வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்திய குற்றச்சாட்டுக்களையும், ஆதாரமற்ற அவதூறுப் பிரச்சாரங்களையும் கூட பொது மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அள்ளி வீசுவதை பார்க்கின்றோம். இது இஸ்லாம் தடுத்த மிகப்பெரிய குற்றம் என்பதை உள்ளத்தில் இருத்தி நாவுக்கு கடிவாளம் இடுதல் வேண்டும். அத்துடன், ஒருவன் மீது கொண்ட பகைமை அவனுக்கு நீதி செலுத்துவதைவிட்டும் உங்களை தடுத்துவிட வேண்டாம் என்ற திருமறைக்குர்ஆனின் போதனைகளை கால்களுக்கடியில் மிதித்துவிட்டு, எதிரணி வேற்பாளனுக்கு எதிராய், அவனது தொண்டர்களுக்கு எதிராய் காடைத் தனங்களை கட்டவிழ்த்துவிடும் கழிசடைத்தனங்களை களத்தில் அதிகமாக காணமுடிகிறது. இது தவிர்ந்து கொள்ள வேண்டிய அதிபிரதான அம்சமாகும்.

மேலும், எதிரணியினரின் சொத்துக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் கேடு விளைவிக்கும் எந்தவொரு அசம்பாவிதத்திலும் ஒரு முஸ்லிம் ஈடுபட்டுவிடக்கூடாது. இது மார்க்கம் தடுத்த மகா பாவம் என்பதை நினைவிற்கொள்ளுதல் வேண்டும். அத்துடன், மார்க்கம் ஹராம் ஆக்கிய இசைக் கச்சேரிகள், ஆடல் பாடல்கள், மதுக் கொண்டாட்டங்கள் போன்ற தேர்தல்கால களியாட்டக் கச்சேரிகளில் ஒரு முஸ்லிம் எக்காரணம் கொண்டும் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி பண உதவிகளையும் நல்கக் கூடாது. குறிப்பாக, தேர்தல் என்பது சுயாதீனமாக, மக்கள் விருப்பத்தை பொருத்து ஜனநாயக வழியில் இடம்பெறுதல் வேண்டும். இச்சுமுகமான வாக்களிப்பு முறையை எதிர்த்து தன் கட்சிக்காரருக்கு கள்ளவோட்டுகள் அளிப்பது, அச்சுறுத்தி வோட்டு போடவைப்பது உள்ளிட்ட எந்தவொரு அக்கிரமத்திற்கும் ஒரு முஸ்லிம் துணைபோய்விடக் கூடாது.

மேற்குறிப்பிட்ட ஒழுங்குகள் பேணப்பட்டு, நீதியும், சுதந்திரமானதுமான தேர்தலாய் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger