வடமாகாண அமைச்சரவையை தீர்மானிக்கின்ற இன்றையதினம் தமிழரசுக் கட்சியால் ஒழுங்கு கூட்டம் இன்று காலை ஆரம்பமானது.
நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தமிழரசுக்கட்சி தலைமையால் அறிவிக்கப் பட்டிருந்த நிலையிலும் அதனைப் பொருட்படுத்தாத வகையில் ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன், சிறிதரன், சரவணபவன், உள்ளிட்டோரும் புளொட் அமைப்பில் தலைவர் திரு.சித்தார்த்தன், பவன் ஆகியோரும், டெலோ அமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், கென்றி மகேந்திரன், சிவாஜிலிங்கம் முதலியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் கூட்டம் சம்பந்தன்,விக்கினேஸ்வரன்,சுமந்திரன் ஆகியோரின் வரவு தாமதமான காரணமாக சற்று தாமதமாகவே ஆரம்பமானது.
கூட்டத்தினை ஆரம்பித்த சம்பந்தர் தாம் ஜனாதிபதியோடு சந்தித்து விட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் முன்னிலையிலே வடமாகாண முதல்வர் சத்தியப்பிரமாண வைபவமும், பதவியேற்பும் நடைபெற தாம் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
சம்பந்தரின் அறிவிப்பை ஏனைய மூன்று கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தமது கருத்துக்களை முன்வைத்தன…
”தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவே வாக்களித்தார்கள், எனவே மக்களின் எண்ணங்கள், அபிலாசைகள் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை மதித்து நடக்க வேண்டும்” எனவும் அவை சுட்டிக் காட்டின.
எனினும் ஏனைய கட்சிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாத சம்பந்தர் எதிர்வரும் 07ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதல்வர் சத்தியப்பிரமாணமும், பதவியேற்பு வைபவமும் நடைபெறும் என அறிவித்தார்.
ஜனாதிபதியின் முன்னிலையில் பதவியேற்பு வைபவம் நடைபெறக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழரசுக் கட்சி செயலாளர் மாவை சேனாதிராஜா இக்கூட்டத்தை புறக்கணித்து இம்முடிவை முற்கூட்டியே எதிர்பார்த்த நிலையில், இந்தியா பயணமானமையால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அமைச்சரவை சம்பந்தமான பரிந்துரைகள் கலந்துரையாடப்பட்டன.
அவற்றில் புளொட் அமைப்பின் சார்பில் “சித்தார்த்தன் அவர்களின் பெயர் புளொட் அமைப்பால் அமைச்சரவைக்கு” பரிந்துரைக்கப் பட்டது.
டெலோ அமைப்பின் சார்பில் “முதல் இரண்டரை வருடத்திற்கு சிவாஜிலிங்கத்தின் பெயரும், மிகுதி இரண்டரை வருடத்திற்கு மன்னார் மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கும் வழங்குவதாக டெலோ அமைப்பால்” தெரிவிக்கப் பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். “தமக்கு எந்த அமைச்சு? தருவதாக கூறப்பட்டதன் பின்னரே, தமது உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்படும் எனவும், ஏனெனில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுக்கு தலா இரண்டரை வருடங்கள் பகிர்தளிக்கப் படவுள்ளதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பால்” குறிப்பிடப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் “தமக்கு இரண்டு அமைச்சரவை தரப்பட வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டதோடு, அவற்றிற்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சத்தியலிங்கம், கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் குருகுலராஜா ஆகியோரின் பெயர்கள் தமிழரசுக் கட்சி அமைப்பால்” பரிந்துரைக்கப் பட்டன.
இவ்வாறு நான்கு கட்சி பிரதிநிதிகளாலும் ஐந்து அமைச்சரவை கேட்கப்பட்ட நிலையானது மிகவும் வேடிக்கையாகவே உள்ளது.
இருப்பதோ நான்கு அமைச்சரவை. அவற்றில் எப்படி ஒரு அமைச்சரவையை மேலதிகமாக பெற்றுக் கொள்வது?
அவற்றிலும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு அமைச்சரவை வழங்கி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் சம அந்தஸ்த்தை பாதுகாப்பதா? அல்லது கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைத்து தமிழரசுக் கட்சிக்கு இரண்டு அமைச்சரவை வழங்குவதா? என்ற வினாவுக்கான விடை சம்பந்தரின் முடிவுகளில் தான் உள்ளது.
இவை தமிழரசுக் கட்சியின் பிடிவாதத்தினால் பெரும்பாலும் குழப்ப நிலையினையே எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்…
இக்கூட்டம் வழமை போல இன்றும் எவ்விதமான முடிவும் எட்டப் படாத நிலையில் கைவிடப் பட்டது.
மறுபடியும் நாளை மாலை 6.00மணிக்கு மீண்டும் கூடி கூட்டமைப்பின் அமைச்சரவை பங்கீடு பற்றிய முடிவுகள் எடுக்கப் பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் உறுதியான ஆணையினை வழங்கிய நிலையிலும் தமிழரசுக் கட்சியின் பிடிவாதம் காரணமாக அமைச்சரவை பங்கீடுகள் குழப்பமான நிலையை தோற்றிவித்துள்ளது. இந்நிலை தமிழ் மக்கள் மத்தியில்வெறுப்பு நிலையினை தோற்றுவித்து வருகின்றன…
Post a Comment