அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே நேற்று நள்ளிரவு கருப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த காரை ஒரு பெண் ஓட்டி வந்தார்.
அக்கார் வந்த வேகத்தில் வெள்ளை மாளிகை முன்பு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கேட்டில் மோதியது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால், அக்கார் நிற்காமல் திரும்பி மீண்டும் அதிவேகமாக பாய்ந்து சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அக்காரை விரட்டி சென்றனர்.
பின்னர் பாராளுமன்ற கட்டிடம் அருகேயுள்ள கேபிடால் கட்டிடம் அருகே சென்றபோது அக்காரை போலீசார் சுற்றி வளைத்தனர். இருந்தும் அந்த கார் நிற்காமல் மீண்டும் புறப்பட்டது.
அதை தொடர்ந்து காரை ஓட்டிச்சென்ற பெண் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் அப்பெண் படுகாயம் அடைந்தார். அவர் அருகே காரில் ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. அதை போலீசார் மீட்டனர்.
இதற்கிடையே காயம் அடைந்த அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் மரியம் கேரே (34). கானக்டிகட் நகரை சேர்ந்தவர்.
இவர் அருகில் காரில் இருந்த பெண் குழந்தை இவருக்கு சொந்தமானது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர் ஆயுத எதுவும் வைத்திருக்கவில்லை. ஆனால், ஏன் இதுபோல் நடந்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதற்கிடையே, காரை பின் தொடர்ந்து கொண்டே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் குண்டு தவறுதலாக பாய்ந்ததில் 2 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் நடந்தபோது பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பட்ஜெட் நிறைவேறாததால் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர். இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்தின் அருகேயுள்ள கேபிடால் கட்டிடம் சிறிது நேரம் மூடப்பட்டது.
அதை தொடர்ந்து அங்கு இயங்கும் சில அலுவலகங்களும் சிறிது நேரம் இயங்கவில்லை. கடந்த மாதம் (ஆகஸ்டு) இதே கேபிடால் கட்டிடம் அருகேயுள்ள கடற்படை தளத்தில் காண்டிராக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய வம்சாவளி அமெரிக்கர் உள்பட 12 பேர் பலியாகினர். 3 பேர் காயம் அடைந்தனர்.
தற்போது, அதே பகுதியில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment