தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக உள்ள தமிழரசுக் கட்சியின் நலன்களை மேம்படுத்துவதிலும், ஏனைய போராட்ட வழி வந்த அரசியல் கட்சிகளையும் ஓரங்கட்டுவதிலும், கூட்டமைப்பின் தலைமையில் இருந்து கொண்டு தமிழரசுக் கட்சியின் தலைமை திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றதோ, என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமையில் தமிழரசுக் கட்சியினரே முக்கியமாக இருக்கின்றார்கள் இவர்களை எஸ்.எம்.எஸ் என்று அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடுகின்றார்கள். சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகிய மூவரையுமே அவ்வாறு அவர்கள் அடையாளப்படுத்து கின்றார்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? – எவருக்கும், எதுவும் புரிந்ததாகவோ தெரிந்ததாகவோ தெரியவில்லை.
வடமாகாண தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் வெளியாகியதும், கூட்டமைப்பு என்று கூடிக் கூடிப் பேசினார்கள். ‘பேசப்பட்ட விடயங்களில் இன்னும் முடிவு காணப்படவில்லை, இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றோம், முடிவுகள் எட்டப்படும்’ என்றார்கள்.
முதலமைச்சராகத் தெரிவாகியுள்ள விக்கினேஸ்வரன் எங்கு, எப்படி சத்தியப் பிரமாணம் செய்து கொள்வது, உறுப்பினர்கள் எப்போது சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள், நான்கு அமைச்சர்களைக் கொண்ட மாகாண அமைச்சரவையை எப்படி அமைப்பது என்பது போன்ற விடயங்கள் பேசப்படுவதாகக் கூறினார்கள். இதற்காக கொழும்பில் கூடினார்கள். பிறகு யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார்கள். திரும்பவும் கொழும்புக்குச் சென்று கலந்துரையாடினார்கள். இப்படி பல தடவைகள் ஓடி, ஓடிப் பேசினார்கள். ஆகவே, நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.
ஆனால், முக்கியமான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியைச் சந்திக்கப் போவதாகத் திடீரென அறிவித்தல் வெளியாகியது. ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்ததும், ஏழாம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார். அடுத்து 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்று சம்பந்தன் கூட்டமைப்புக் கட்சித் தலைவர்களிடம் கூறினார்.
பதவிப் பிரமாணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது, ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டபோது, அதனை மாவை சேனாதிராஜா முழுமையாக எதிர்த்திருந்தார். ஏனைய கட்சித் தலைவர்களுக்கும் அது உடன்பாடாக இருக்கவில்லை.
இதுபற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றிருந்த நிலையிலேயே ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் சம்பந்தன் ஜனாதிபதி முன்னிலையிலான பதவிப் பிரமாணத்திற்கான திகதி குறிக்கப்பட்டிருப்பதைப்பற்றிய அறிவித்தலை வெளியிட்டார். எனவே, கூடிப் பேசியது பேசியது மட்டும்தான். முடிவு எங்கேயோ எப்போதோ எடுக்கப்பட்டுவிட்டது என்பதைத் தான் இது வெளிப்படுத்துகின்றது.
முதலமைச்சரின் பதவிப்பிரமாணம் பற்றிய தீர்மானம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வது பற்றி தெரிவிக்கப்பட்ட உடன் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார். அது உடனடியாகவே இணைய செய்தித் தளங்களில் வெளியாகியிருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வது பற்றி தெரிவிக்கப்பட்ட உடன் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார். அது உடனடியாகவே இணைய செய்தித் தளங்களில் வெளியாகியிருந்தது.
இந்த நேரத்தில்தான், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியில் வந்த தலைவர் சம்பந்தனிடம் செய்தியாளர்கள் விபரம் கேட்டார்கள். அப்போது அவர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பு பற்றிய தகவலை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். ஆனால் ஜனாதிபதி முன்னிலையில் நடைபெறவிருந்த பதவிப்பிரமாணம் குறித்து அவர் சரியான விபரம் தெரிவிக்கவில்லை.
அப்போது செய்தியாளர்களுக்கும் தலைவர் சம்பந்தனுக்கும் இடையிலான உரையாடல் இப்படித்தான் நடைபெற்றது:
சம்பந்தன் : கட்சித் தலைவர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசுவோம். தொடர்ந்து பேசி, எங்களுடைய மக்களுக்குத் திருப்தியளிக்கக் கூடிய முடிவுகளை நாங்கள் எடுப்போம்
செய்தியாளர்: இறுதித் தீர்மானங்கள்……?
சம்பந்தன்: இறுதி என்ற சொல்லில் அர்த்தமில்லை. நாங்கள் அந்தந்த பிரதேசத்திற்குத் தக்க மாதிரி நாங்கள் தகுந்த நடைமுறைகளைக் கையாள்வோம். நாங்கள் பேசுறம். இறுதியில நல்ல முடிவை எடுப்பம். எல்லாருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையில, அந்த முடிவுகள் அமையும்.
செய்தியாளர்: இண்டைக்கு ஜனாதிபதியைச் சந்தித்தீங்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்…..
சம்பந்தன்: ஓம். ஜனாதிபதியைச் சந்தித்தேன். அவர் நாட்டினுடைய ஜனாதிபதி. அவர்….அவருடைய செயலாளர் என்னை அழைத்தார். அந்த அழைப்பின் அடிப்படையில் நான் ஜனாதிபதியைச் சந்தித்தேன். பல முக்கியமான விடயங்களைப் பற்றி பேசியிருக்கின்றோம்……..எமது பேச்சுவார்த்தைகள் தொடரலாம்.
செய்தியாளர்: சத்தியப்பிரமாணம் எப்ப எண்டு சொல்வீர்களா…..?
சம்பந்தன் : ம்ம்……அஅஅ…..திகதி இன்னும் நிர்ணயிக்க… நிச்சயிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் நடைபெறும்.
செய்தியாளர்கள்: இடம்….இடம்…..
சம்பந்தன்: பொருத்தமான இடத்தில் விரைவில் நடைபெறும்….நன்றி.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பைப் பற்றி செய்தியாளர்களுக்குத் தகவல் வெளியிட்ட சம்பந்தன் முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் குறித்து ஏன் செய்தியாளர்களிடம் மறைவாகப் பதிலளித்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. பதவிப் பிரமாணம் குறித்து தீர்மானிக்கப்பட்டு, அந்தத் தகவல் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டதன் பின்னர், அதனை அவர் செய்தியாளர்களிடம் மறைத்துப் பேசியுள்ளார். இந்த நடவடிக்கையானது, தலைவர் சம்பந்தனுடைய வெளிப்படைத் தன்மையுடைய செயற்பாடு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.
தமிழ் மக்களும்சரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும்சரி, சம்பந்தனை மதிப்புக்குரியவராகவே பார்க்கின்றார்கள். அவரையே தமது அரசியல் தலைவராக அவர்கள் கருதியிருக்கின்றார்கள். இதனால் அவர் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். ஆனால் இந்த நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதும், மேம்படுத்திக் கொள்ளவேண்டியதும் சம்பந்தனுடைய தலையாய கடமையும், தவிர்க்க முடியாத பொறுப்புமாகும்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே தமது அரசியல் தலைமையாகவும், தங்களது அரசியல் இரட்சகனாகவும் தமிழ் மக்கள் கருதியிருந்தார்கள். அந்த கருத்து நிலையில் இருந்து இன்னும் அவர்கள் விலகவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களைச் சரியான அரசியல் பாதையில் வழி நடத்திச் செல்லும், தங்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்கள் எப்படியாவது முடிவுகளைத் தேடித் தருவார்கள் என்று அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.
இந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நடந்து கொண்டிருக்கின்றார்களா என்ற கேள்வி அடிக்கடி எழுகின்றது. கூட்டமைப்பினர் மீது பல விடயங்களில் சந்தேகம் எழுகின்றது. மக்களிடம் ஒன்றைக் கூறிவிட்டு வேறு ஒன்றைக் கடைப்பிடிக்கின்ற போக்கினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் தாராளமாகவே காணக் கூடியதாக இருக்கின்றது.
அதி முக்கியமான விடயங்களில், குறிப்பாக, கூட்டமைப்பின் தலைமையிடம் வெளிப்படைத் தன்மையைக் காண முடியவில்லை. ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது தொடக்கம், அமைச்சரவையை அமைப்பது வரையில் வெளிப்படைத் தன்மை சரியான முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண முடிகின்றது. முடிவுகள் எங்கேயோ எடுக்கப்படுகின்றன. ஒப்புக்காக முடிவுகளை எடுப்பதற்கான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்ற தீர்க்கமான முடிவுக்கு வரும் வகையிலேயே கூட்டமைப்புத் தலைமையின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
வடமாகாண சபையின் முதலமைச்சராக வெளியில் இருந்து ஒருவரைக் கொண்டு வருவது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் முன்கூட்டியே கலந்தாலோசிக்கப்படவில்லை. இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டு, விக்கினேஸ்வரனுடன் ஆரம்பப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு, ஓரளவு உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் ஊடகங்களில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.
அப்போது, வடமாகாணசபைக்கான முதலமைச்சராவதற்கு மாவை சேனாதிராஜா விருப்பம் கொண்டிருந்தார். அதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக ஆதரவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய ஒரு நிலைமையில்தான் வடமாகாண முதலமைச்சராக விக்கினேஸ்வரன் கொண்டு வரப்படவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கோ, ஏன், மாவை சேனாதிராஜாவுக்கோ அந்த யோசனை பற்றி சரியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இத்தகைய வெளிப்படைத் தன்மையற்ற நிலையில், குழப்பகரமான ஒரு சூழலில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சராக யாரைத் தீர்மானிப்பது என்பதுபற்றிய விவாதம் நடத்தப்பட்டது. விக்கினேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராகக் கொண்டு வருவது என்று ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்துக்கமைய அந்த விடயத்தை சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் ஏனையவர்களுக்குக் கூறியிருந்தார். இந்தத் தீர்மானத்தை மாவை சேனாதிராஜா உட்பட பலரும் விரும்பவில்லை.
மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக கடும் வாக்குவாதங்கள் அங்கு நடைபெற்றன. அதன் பின்னர் மாவை சேனாதிராஜாவா, விக்கினேஸ்வரனா என்ற நேரடியான கேள்வி எழுந்திருந்தது. அப்போது, கூட்டமைப்பின் ஒற்றுமை, ஐக்கியம், கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதேபோன்று, கூட்டமைப்பு சர்வதேச ரீதியில் பெற்றிருக்கின்ற அங்கீகாரம் என்பவற்றை கருத்திற்கொண்டு, தனது விருப்பத்தைத் தனக்குள்ளேயே முடக்கிக்கொண்டு விக்கினேஸ்வரனுக்கு விட்டுக்கொடுத்தார் மாவை சேனாதிராஜா.
மாவை சேனாதிராஜாவுக்காக வாதாடுவதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் தயாராக இருந்த போதிலும், அவர் விக்கினேஸ்வரனை முதலமைச்சராக ஏற்பதற்கு முன்வந்ததையடுத்து, அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அத்துடன், தமது எதிர்ப்பையும் வலுவாக வெளிக்காட்ட முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
ஆயினும் அவருக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் திரண்டிருந்தவர்களை அமைதிப்படுத்துவதற்கு அவர் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. வடக்கில் சி.வி.கே.சிவஞானம் போன்றவர்கள் மாவை சேனாதிராஜாவையே முதலமைச்சராக்க வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தியிருந்தார்கள். அத்துடன் வெளியில் இருந்து குறிப்பாக கொழும்பில் இருந்து எவரையும் இங்கு வரவிடமாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவதற்குக்கூடத் தயாராகியிருந்தார்கள். இந்த நிலையில் மாவை சேனாதிராஜா அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களை ஆசுவாகப்படுத்தி, தமக்குள்ள பொறுப்பை உணர்த்தியதையடுத்து, அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது.
வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தலைவர் சம்பந்தன் கொண்டிருந்த கருத்து, தீர்மானம் தன்னுடைய அரசியல் செல்நெறி என்பன குறித்து வெளிப்படையாக நடந்துகொள்ளாததன் விளைவாகவே இவ்வளவும் நடந்தேறியது.
சம்பந்தனின் விளக்கம்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில், வன்முறை அரசியல் நடவடிக்கையின் அடையாளமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சர்வதேசம் பார்த்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றத்தைக் காட்டுவதற்கான சரியான அரசியல் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்ற ரீதியில் கட்சித் தலைவர்களுக்கு சம்பந்தன் விளக்கமளித்திருந்தார்.
வடமாகாண முதலமைச்சராக நீதித்துறை அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட, முன்னாள் நீதியரசராகிய விக்கினேஸ்வரனைக் கொண்டு வருவதன் மூலம், தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மென் அரசியல் போக்கில் நகர்த்திச் செல்ல முடியும். ஆயுதப் போராட்டப் பின்புலமற்ற ஒரு தலைமையை முன்னிறுத்தி, இலங்கை அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் அதிகாரத்துடன் கூடிய பலமான நிலையில் இருந்து பேரம் பேச முடியும் என்பதை எடுத்துக் காட்டியிருந்தார்.
அத்துடன், சட்டத்துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த முன்னாள் நீதியரசராகிய விக்கினேஸ்வரனின் வாதங்கள், கோரிக்கைகள், சிபாரிசுகள், ஆலோசனைகன் என்பவற்றை சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் செவிசாய்த்துக் கேட்பார்கள் என்ற நம்பிக்கையையும் சம்பந்தன் வெளியிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே, கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் விரும்பினால் அரசியலில் பிரவேசிக்கலாம் என்று விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். அவருடைய விருப்பத்திற்கு அமைவாகக் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும், விருப்பத்துடன் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அவர் முதலமைச்சர் வேட்பாளராக வடமாகாண தேர்தல் களத்தில் குதித்திருந்தார். அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும், தேர்தல் களத்தில் அவருக்காகப் பாடுபட்டன. பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தன.
மறுபக்கத்தில் துறைசார்ந்தவர்களும், புதிய தலைமைகளும், தேர்தல் களத்தில் வரவேண்டும் என்று தமிழ் மக்களும் விரும்பியிருந்தார்கள். எனவே, விக்கினேஸ்வரனின் வருகையானது காலம் கனிந்த ஒரு சூழலில் அமைந்திருந்தது. அவரும் அமோகமான விருப்பு வாக்குகளுடன் தேர்தலில் வெற்றிபெற்று இப்போது வடமாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக உள்ள தமிழரசுக் கட்சியின் நலன்களை மேம்படுத்துவதிலும், ஏனைய போராட்ட வழி வந்த அரசியல் கட்சிகளையும் ஓரங்கட்டுவதிலும், கூட்டமைப்பின் தலைமையில் இருந்து கொண்டு தமிழரசுக் கட்சியின் தலைமை திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றதோ என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமையில் தமிழரசுக் கட்சியினரே முக்கியமாக இருக்கின்றார்கள் இவர்களை எஸ்.எம்.எஸ் என்று அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடுகின்றார்கள்.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகிய மூவரையுமே அவ்வாறு அவர்கள் அடையளாப்படுத்துகின்றார்கள்.
தமிழரசுக் கட்சியானாலும்சரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பானாலும்சரி முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கின்றார்கள் என்பது ஏனைய கட்சி;த் தலைவர்களினதும், கூட்டமைப்புடன் நெருங்கியவர்களினதும் கருத்தாகும். இவர்கள் எடு;க்கின்ற முடிவுகளே கூட்டமைப்பின் இறுதித் தீர்மானமாகவும், தமிழரசுக் கட்சியின் இறுதித் தீர்மானமாகவும் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் ஒப்புக்காகப் பேசப்பட்டு விடயங்கள் விவாதிக்கப்படுகின்றனவே தவிர, உண்மையில் இவர்கள் எடுக்கின்ற முடிவுகளே இறுதி முடிவுகளாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
விக்கினேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராகக் கொண்டு வந்தது, ஜனாதிபதியின் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது (இதனை மாவை சேனாதிராஜா தீவிரமாக எதிர்த்திருந்தார். அந்த எதிர்ப்பு காரணமாகவே முதலமைச்சருடைய பதவிப்பிரமாண வைபவத்தில் அவர் கலந்துகொள்ளாமல் இந்தியாவுக்குத் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்தார்), மாகாண அமைச்சர்களை நியமிப்பதில் தீர்மானம் எடுத்தது என்று பல உதாரணங்களை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
மாகாண சபைக்கான அமைச்சரவையை அமைப்பதில் முதலமைச்சரே முழுமையாகப் பொறுப்பேற்றுச் செயற்பட்டார் என்று தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கூறுகின்றார்கள். ஆனால், பல சுற்றுப் பேச்சுக்களில் இது விவாதிக்கப்பட்டிருந்த போதிலும், இறுதியாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு முதல்நாளாகிய பத்தாம் திகதி இரவு இந்த எஸ்.எம்.எஸ் குழுவினரும், முதலமைச்சரும் மாத்திரமே கூடி இறுதி முடிவை எடுத்திருந்தார்கள். இங்கும் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இப்போது வலியுறுத்தப்படுகின்றது. ஆனால், ஐந்து கட்சிகள் ஒன்று கூடி முதலமைச்சராகக் கொண்டு வரப்பட்ட விக்கினேஸ்வரன் மாகாணசபையின் நிர்வாகச் செயற்பாடுகளில் சுதந்திரமாகச் செயற்படட்டும், அரசியல் விடயங்களில் அவர் ஐந்து கட்சிகளுடனும் கலந்தாலோசித்துச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.
ஆனால் அவர் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் என்ற ரீதியில் தன்னிச்சையாகச் செயற்பட முயற்சிப்பாரோ, செயற்பட முனைகின்றாரோ என்ற சந்தேகம் இப்போது முளைவிட்டிருக்கின்றது. இதற்கு தலைமையின் ஆதரவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. இந்த நிலையை மாவை சேனாதிராஜாவும் விரும்பவில்லை எனத் தெரிகின்றது.
இந்தச் சூழலில் “எஸ்.எம்.எஸ்” தலைமை என்ற நிலை மாற்றமடைந்து, “எஸ்.வி.எஸ்” என்று மாற்றமடைந்து விட்டது போல தெரிகின்றது என்று முக்கிய அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. ஆனால் ஒரு விடயம் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை நம்பியிருக்கின்றார்கள்.
கூட்டமைப்பின் தலைமை தங்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றார்கள். மக்களுடைய இந்த எதிர்பார்ப்பை எவரும் பாழடித்துவிடக் கூடாது. அவ்வாறு செய்வது வடபகுதி மக்களைப் பொறுத்தமட்டில் தேன்கூட்டிற்குக் கல் எறிந்த கதையாகவே முடியும் என்பதில் சந்தேகமில்லை.
-செல்வரட்னம் சிறிதரன்-
Post a Comment