மோடியுடன் லேடியின் முதல் டீலிங் சக்சஸ்! வழக்கிலிருந்து விடுதலையாகிறார் லேடி!!



வருமான வரி ஏய்ப்பு செய்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது உடன்பிறவா தோழி சசிகலா ஆகியோர் மீது வருமான வரி தொடர்ந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வருகிறது. 17 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் மத்திய பாரதிய ஜனதாவின் அரசால் ஜெயலலிதாவுக்கு விடிவுகாலம் ஏற்படப்போகிறது.

இதன் மூலம் ஜெயலலிதா – மோடியின் முதல் டீலிங் சக்சஸில் முடிந்துள்ளது.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக 1997ம் ஆண்டு வருமான வரித்துறை ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கு விசாரணைக்காக வரும்போதெல்லாம் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆஜராவதில்லை. பல காரணங்களைக்கூறி இழுத்தடித்து வந்தனர்.
கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவுபோட்ட நீதிபதிகூட இடமாற்றம் செய்யப்பட்ட கதையும் நடந்தது உண்டு.
ஜெயலலிதா, சசிகலா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அதற்குப் பதிலாக இரண்டு மனுக்கள் ஆஜராகின. அதில், “இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையிடம் நான் ஒரு மனு கொடுத்திருகிறேன், அது அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. என்னுடைய கோரிக்கைக்கு வருமான வரித்துறை பதிலளிக்கும் வரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதையே சசிகலாவும் தனது மனுவில் கூறியிருந்தார்.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி, இதற்கு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இரு மனுக்களையும் ஏற்று வழக்கு விசாரணையை நீதிபதி தட்சிணாமூர்த்தி ஜூலை 24ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
வாய்தா வாங்கிக்கொண்டே வந்த நிலையில், திடீரென நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு பெரும் பின்னணி உள்ளது.
1989-ம் ஆண்டு சசிகலாவையும் டி.வி. தினகரனையும் பங்குதாரர்களாகக் கொண்டு சசி எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1990-ல் ஜெயலலிதாவையும் சசிகலாவையும் பங்குதாரர்களாகக் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது.
1991-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சசி எண்டர்பிரைசசின் கணக்கில் பணம் கோடி கோடியாகச் சேர்ந்தது. சசி எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனம் கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் எனக் கூறப்பட்டது. அப்படித்தான் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அம்மாவின் சசி என்டர்பிரைஸ் நிறுவனம் எத்தனை கார்களை வாங்கியது? விற்றது? யாருக்காவது தெரியுமா? யாருக்கும் தெரியாது! அப்படியொரு பிசினெஸ்ஸிலேயே அந்த நிறுவம் இல்லை!
ஆனால், பின்னர்தான் தெரிந்தது இந்தக் கம்பெனி தொடங்கப்பட்டதற்கான காரணம். அதாவது ஊழல் மூலம் கிடைத்த பணத்தை இந்த கம்பெனி பெயரில் போட்டு வெள்ளையாக மாற்றியது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஜெயலலிதா 1991, 1992, 1993 ஆண்டுகளுக்கான தன்னுடைய வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. அந்த நிறுவனத்தின் சார்பிலும் அவர்கள் எந்த வருமானவரிக் கணக்கையும் தாக்கல் செய்யவில்லை. இதை மோப்பம் பிடித்த வருமானவரித்துறை 1997-ல் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில், ஜெயாலலிதா, சசிகலா ஆகிய இருவரும் 2006-ல் வழக்கிலிருந்தே தங்களை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அப்பீலுக்காக டெல்லி வரை சென்ற இந்த வழக்கு சுவரில் வீசிய பந்துபோல இறுதியில் எழும்பூருக்கே திரும்பி வந்தது.
கடந்த திங்கட்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான் ஜெயலலிதாவும், சசிகலாவும் ‘வருமான வரித்துறைக்கு நாங்கள் அபராதம் செலுத்தி வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக இருக்கிறோம்’ என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதாவது குற்றம் செய்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளனர்.
அப்போது வாதாடிய வருமானவரித்துறை வழக்கறிஞர் ராமசாமி, “முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள மனுவின் மூலம் வருமான வரித்துறை சட்டப்பிரிவு 279- பிரிவு 2-ன் கீழ் சமரசம் செய்து கொள்ள முடியும். அவர்களின் மனுக்கள் வருமான வரித்துறை, இயக்குநர் ஜெனரலிடம் உள்ளன.
காம்பவுண்டிங் முறையில் (வருமானவரி பாக்கி உள்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்துவது) வருமானவரி பிரச்னையை தீர்க்கத் தயார் என்றும், வருமான வரித்துறையின் பதில் வரும் வரை வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.
வழக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றுதானே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாங்கள் சமரசமாகப் போகிறோம் என்று கூறி இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வருமானவரித்துறையின் வழக்கறிஞரான ராமசாமியின் ஆலோசனையின் பேரிலேயே ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.
சரி வழக்கறிஞர் ராமசாமி இத்தனை ஆண்டுகளாகக் கொடுக்காத ஆலோசனையை இப்போது கொடுத்தது ஏன்? எல்லாம் டெல்லியிலிருந்து வந்த உத்தரவுதானாம்.
17 ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் இடையில் நடந்தது என்ன? ஜெயலலிதா நினைத்திருந்தால் இன்று தாக்கல் செய்த மனுவைப் போல எப்போதோ அவர் தாக்கல் செய்துவிட்டு வழக்கை முடித்துவிட்டுச் சென்றிருக்கலாமே?
அதில்தான் பிரச்னை இருக்கிறது.
வருமான வரி ஏய்ப்பு நடத்திய நபர், தான் வரி ஏய்ப்பு செய்ததாக ஒத்துக்கொண்டாலும் வருமானவரித்துறையாக பார்த்து மன்னித்துவிட்டால்தான் தப்பிக்கலாம். இல்லையென்றால் வழக்கைச் சந்தித்து சிறை, அபராதம் ஆகியவற்றை செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 3 மாதமும் அதிகபட்சம் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்கிறது சட்டம்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் ஜெயலலிதாவால் இந்த மனுவைத் தாக்கல் செய்ய முடியவில்லை.
இப்போது மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்துவிட்டது. தான் எதிர்பார்த்த ஆட்சி அமையாவிட்டாலும் தனக்கு எதிரான ஆட்சி அமையவில்லை என்பதால் ஜெயலலிதா மிகவும் ஆறுதலாக இருந்தார்.
பாரதிய ஜனதாவின் ஒரு மாத கால ஆட்சி முடிந்துள்ள நிலையில் ஜெயலலிதா – மோடி இடையே டீலிங் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம், இந்த வழக்கிலிருந்து தப்பிக்க பாரதிய ஜனதா அரசு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இதற்காக ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சி கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் ஓட்டுப்போடுவார்கள் என கூறப்படுகிறது.
வருமான வரி கட்டாடதற்கு பணம் எவ்வளவு கட்ட வேண்டும் அதை வட்டியோடு சேர்த்துக் கட்டிவிடுகிறோம் என்று பேரம் பேசி அதன் மூலம் இந்த வழக்கிலிருந்து விடுதலையாக வழிதேடிக் கொண்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் விரைவில் இந்த வழக்கில் இருந்து விடுதலையாக உள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger