கடந்த மாதம் ஆரம்பத்தில் பிரான்ஸின் விசேட பொலிஸ் குழுவொன்று இலங்கைக்கு வந்திருந்தது. பிரான்ஸின் பொலிஸ் ஆணையாளர் ஒருவரும் இரு பொலிஸ் பரிசோதகர்களும் அடங்கிய அந்த குழு சுமார் இரு வாரங்களுக்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து மிக முக்கியமான ஒரு குற்றவாளி தொடர்பிலான சாட்சியங்களை சேகரிக்கலானது.
இலங்கை வந்த அந்த பொலிஸ் குழு முதலில் சந்தித்தது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்க கோனையாகும். தாம் இலங்கைக்கு வருவதற்கான நோக்கத்தையும் திட்டத்தையும் இலங்கையின் வெளி விவகார அமைச்சின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் அந்த பொலிஸ் குழு அறிவித்திருந்ததாலும் சம்பிரதாய பூர்வமாக பொலிஸ் மா அதிபரை சந்தித்து தாம் வந்த நோக்கத்தை அந்த பொலிஸ் குழு விளக்கத்தவறவில்லை.
பிரான்ஸில் கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிரபலமான சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி ஒருவர் தொடர்பில் சாட்சியங்களை தேடியே தாம் இலங்கை வந்திருப்பதை பொலிஸ் மா அதிபரிடம் அந்த பிரான்ஸ் பொலிஸ் குழு விளக்கியது.
இதனை அடுத்து பிரான்ஸ் பொலிஸ் குழுவை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் திருமதி அனோமா திஸாநாயக்காவிடம் அனுப்பி வைக்கின்றார்.
அங்கு சென்ற அந்த பிரான்ஸ் பொலிஸ் குழு திருமதி அனோமா திஸாநாயக்கவை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் அனுபவம் வாய்ந்த பொலிஸ் பரிசோதகர் பந்து ஜீவ போபிட்டிகொட தலைமையிலான பொலிஸ் குழுவினருடன் இணைந்து விசாரணைகளை தொடர்ந்து சாட்சியங்களை திரட்டலானது.
பிரான்ஸின் பொலிஸ் குழுவொன்று இவ்வாறு எமது நாட்டுக்கு வந்து குற்றவாளி ஒருவர் தொடர்பில் சாட்சியங்களை திரட்டுவது இதுவே முதல் முறையாகும். எனினும் சிறுவர் துஷ்பிரயோகம் ஒன்று தொடர்பில் வெளிநாட்டு பொலிஸ் குழுவொன்று இலங்கைக்கு வந்து விசாரணை செய்யும் இரண்டாவது சந்தர்ப்பமாகவே இதனை நாம் கண்கின்றோம்.
இதற்கு முன்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர் ஒருவர் தொடர்பிலான சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டை அடுத்து சாட்சியங்களை தேடி ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் இங்கு வருகை தந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அது தொடர்பில் விரிவாக பார்க்க முன்னர் நாம் இப்போது பிரான்ஸ் சம்பவம் குறித்து நோக்கலாம்.
அலெக்ஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு செல்வந்த வர்த்தகர். தற்போது 52 வயதாகும் இந்த பிரஞ்சுப் பிரஜை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அடிக்கடி சுற்றுலா விஸா பெற்று இங்கு வந்து சென்ற ஒரு சுற்றுலா பயணி. இறுதியாக இவர் இலங்கைக்கு வந்து சென்றமை கடந்த 2012 ஆம் ஆண்டாகும்.
இந் நிலையில் அலெக்ஸ் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸாருக்கு சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டொன்று கடந்த 2012 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த அந் நாட்டு பொலிஸார் விசாரணைகளின் ஒரு அங்கமாக அலெக்ஸின் வீட்டை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொள்வது என தீர்மானித்தனர்.
இந் நிலையில் அலெக்ஸ் இறுதியாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு பிரான்ஸ் திரும்பியிருந்த சிறிது நாட்களுக்குள் அவரின் வீடு திட்டமிட்ட படி பிரான்ஸ் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அதாவது பிரான்ஸ் பிரஜை ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் ஓர் அங்கமாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது என்று கூட கூறலாம்.
இதன் போது வீட்டை அதிரடியாக சோதனை செய்த பொலிஸார் அலெக்ஸின் மடிக்கணினியையும் சோதனையிடத்தவறவில்லை. அலெக்ஸின் மடிக்கணினியை சோதனை செய்த போது பொலிஸாரின் அனுமானத்தை மிஞ்சிய, அலெக்ஸின் குற்றச்சாட்டுக்களை வலுவூட்டக்கூடிய தடயங்கள் பிரான்ஸ் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
தெளிவாக சொல்வதென்றால் இலங்கை சிறுவர்களை அதுவும் ஆண் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் புகைப்படங்களும் காணொளிகளுமே அந்த தடயங்கள். காணொளிகள் அனைத்தும் ஓரினச் சேர்க்கையையை அதுவும் சிறுவர்களை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்ட தனி நீலப் படங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
இது பிரான்ஸ் பொலிஸாரை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அலெக்ஸை கைது செய்தனர். சிறுவர்களை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியமை, துஷ்பிரயோகம் செய்தமை, நீலப்படம் தயாரித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை பிரான்ஸ் பொலிஸார் அலெக்ஸ் மீது சுமத்தி நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.
இந் நிலையில் பிரான்ஸ் நீதிமன்றில் தொடரும் இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தடயங்களாக கிடைத்த வீடியோ மற்றும் புகைப்படங்களின் சாட்சியங்களை தேடியே பிரான்ஸ் பொலிஸ் குழு கடந்த மாதம் இலங்கை வந்தது. அந் நாட்டு நீதிமன்றின் அனுமதியுடன் இங்குவந்த அந்த பொலிஸ் குழு சுமார் இருவாரங்களுக்கு மேலாக இங்கு தங்கியிருந்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இந் நிலையில் பல விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன் பல சாட்சியங்களுடன் பிரான்ஸ் பொலிஸாரும் நாடு திரும்பியுள்ளனர் எனலாம்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணந்ததாக செயற்படும் விஷேட பொலிஸ் குழுவினருடன் சேர்ந்து தகவல்களைப் பரிமாற்றிக்கொண்டு சாட்சியங்களை தேடிய போது சுமார் 40 சிறுவர்கள் வரையில் இந்த பிரான்ஸ் பிரஜையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். என்ற உண்மை முதலில் புலப்பட்டது. அது பிரான்ஸ் பொலிஸார் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய இலங்கை பொலிஸ் குழுவினருக்கு வழங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளிலிருந்து தெரியவந்தது.
அத்துடன் 2002 ஆம் ஆண்டு முதல் இந்த பிரஞ்சுப் பிரஜை இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தாலும் அவரின் நோக்கம் சிறுவர்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக இன்பம் கண்டு அது தொடர்பான காணொளிகளை தயாரிப்பதே என்பதை பொலிஸார் அறிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்படவில்லை.
இதனை அடுத்து மிக விரைவாகவும் விவேகமாகவும் செயற்பட்ட பொலிஸார் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்கவின் வழிகாட்டல்களுக்கு அமைய துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள் எந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதை தேடினர். இதன் விளைவாக அந்த சிறுவர்கள் ரத்கம, ஹிக்கடுவை, நீர்கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கே இந்த பிரான்ஸ்பிரஜை அடிக்கடி சென்று வந்துள்ளமையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து மிக விரைவாகவும் விவேகமாகவும் செயற்பட்ட பொலிஸார் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்கவின் வழிகாட்டல்களுக்கு அமைய துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள் எந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதை தேடினர். இதன் விளைவாக அந்த சிறுவர்கள் ரத்கம, ஹிக்கடுவை, நீர்கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கே இந்த பிரான்ஸ்பிரஜை அடிக்கடி சென்று வந்துள்ளமையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனால் குறித்த பிரதேசங்களை சேர்ந்தவர்களும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுமே பெரும்பாலும் இந்த அலெக்ஸ் என்ற நபரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற அனுமானத்தில் விசாரணைகள் தொடர்ந்தன.
அதன்படி மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸ் குழுவுடன் இணைந்து இலங்கை பொலிஸார் ரத்கம பகுதியிலிருந்து ஆரம்பித்தனர். இதன் போது பிரான்ஸ் பிரஜையான அலெக்ஸிடமிருந்து தாம் விசாரணைகளில் பெற்ற தகவல்களை இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கியிருந்தனர்.
அதில் மிக முக்கியமான தகவல் ஒன்று இருந்தது. அது தான் அலெக்ஸ் இங்கு வந்த போது சந்தித்த நபர்களின் பட்டியல்.
அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு அலெக்ஸ் இலங்கை வந்தது முதல் பொலிஸார் சந்தித்தவர்கள் தொடர்பில் பொலிஸாரின் கவனம் திரும்பியது. இதன் போது 2002 ஆம் ஆண்டு அலெக்ஸ் சிறுவர்களுக்கு உதவுபவர் போன்றே நாட்டில் சுற்றித்திரிந்துள்ளமையை பொலிஸார் கண்டறிந்தனர்.
அத்துடன் சிறுவர்கள் மீது அதீத காம வெறி பிடித்திருந்த அலெக்ஸ் டொபி, சொக்லட்டுக்கள் உள்ளிட்ட வெளி நாட்டு இனிப்புக்களை வழங்கியே சிறுவர்களை தமது காமவலையில் வீழ்த்துவதும் பொலிஸாருக்கு புலனானது. அத்துடன் துஷ்பிரயோகத்துக்கு பின்னர் அவர்களின் கைகளில் 2000 முதல் சில ஆயிரம் ரூபா நோட்டுக்களை திணித்து அதனை சரிகண்டுள்ளதும் பொலிஸாரால் அறிய முடியுமான காரணியாக இருந்தது.
இந்த விடயங்கள் அனைத்தையும் பிரான்ஸ் பொலிஸாரின் உதவியுடனேயே இலங்கை பொலிஸ் குழு உறுதிப்படுத்திக்கொண்டது.
இதனை தொடர்ந்தே 2002 ஆம் ஆண்டு அலெகஸுக்கு சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட இலங்கையர் தொடர்பில் பொலிஸாரின் அவதானம் திரும்பியது. உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர். பிரான்ஸ் பொலிஸார் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்ததில் அந்த பிரஞ்சுப் பிரஜைக்கு சிறுவர்களை விநியோகம் செய்ததாக கூறப்படும் நபர் தொடர்பான தகவல்கள் வெளியானது.
அதன் அடிப்படையில் அவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவ்விரு இலங்கையர்களும் 25, 35 வயதுகளை உடையவர்கள். தற்போது இவ்விருவரும் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரியான எதிரிவீர குணசேகர குறிப்பிடுகின்றார்.
அவரின் தகவல்களின் படி அலெக்ஸால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட 40 இற்கும் அதிகமான சிறுவர்களில் பலர் தற்போது வளர்ந்து பெரியவர்கள் ஆகியுள்ளனர். இந் நிலையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 10 சிறுவர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் சிறுவர்களை விநியோகம் செய்து வந்த இவ்விருவருக்கும் அலெக்ஸ் பல்வேறு உதவிகளை செய்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு போக்குவரத்தின் நிமித்தம் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யவும் இன்னொருவருக்கு தொலை தொடர்பு நிலையம் ஒன்றை, அமைக்கவும் இந்த பிரான்ஸ் நாட்டவர் பண உதவிகளை செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை விட சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட நபர்ப் 35 வயதை அடைந்துள்ள போதும் இதுவரை திருமணமாகாதவர். பெரும் பாலும் இவருடைய வீட்டிலேயே அலெக்ஸின் காமக் கூத்துக்கள் அரங்கேறியுள்ளன.
இந் நிலையிலேயே பிரான்ஸ் பொலிஸ் குழு சிறுவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்க முயன்ற போதும் அதில் பலரின் வாக்கு மூலங்களுடன் அந் நாட்டின் நீதிமன்ரில் அலெக்ஸுக்கு எதிரான சாட்சியங்களை சமர்பிக்க விரைந்துள்ளனர். இதனூடாக அலெக்ஸுக்கு மிக உயர்ந்த பட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே இவ்வாறு வெளி நாட்டு பொலிஸ் குழுவொன்று இலங்கை வருவது இரண்டாவது தடவை என மேலே குறிப்பிட்டிருந்தோம். ஆம் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரித்தானிய தொலைக்காட்சி நடிகரான கெலீ மத்தியூ என்பவர் மீது சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை ஞாபகம் இருக்கும்.
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரபல பொப் இசை பாடகர் ஜொனதன் கிங் என்பவரை விசாரணை செய்தபோதே கெலீ மெத்தியூ தொடர்பான விபரங்கள் அம்பலமானதாக கூறப்பட்டது. இந் நிலையில் விசாரணைகளை தொடர்ந்த அந் நாட்டு பொலிஸார் கெலீ மெத்தியூவினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானமையானது இலங்கையிலேயே இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு அப்போது இங்கு வந்திருந்தனர். அப்போது இலங்கை வந்த ஸ்கொடலண்யார்ட் பொலிஸாருக்கு அது தொடர்பில் பல விடயங்கள் மற்றும் சாட்சியங்கள் கிடைந்திருந்ததாகவும் அறிய முடிகின்றது.
குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் முதலில் கெலீ மெத்தியூ கைது செய்யப்பட்டபோதும் சாட்சிகள் இன்மையால் விடுதலையானார்.இதனை தொடர்ந்தே 2003 ஜனவரி மாதம் ஸ்கொட்லன்யார்ட் பொலிஸார் இலங்கை வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளானர் .
இதனை அடுத்து நீர் கொழும்பில் உள்ள மெத்தியூவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் சொகுசு வீடொன்றை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுடன் இணைந்து சுற்றிவளைத்த ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் அந்த வீட்டில் சல்லடை போட்டு தேடி சாட்சியங்களை திரட்டியிருந்தனர்.
அப்போது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக பேராசிரியர் மஹேன்ந்திர சில்வா கடமையாற்றியிருந்தார். இந் நிலையில் பல சாட்சியங்களுடன் இலங்கையிலிருந்து திரும்பிய ஸ்கொட்லான்ட்யார்ட் பொலிஸார் கெலீ மெத்தியூவிற்கு சிறுவர்களை விநியோகித்த நபர்களையும் கைது செய்ய உதவியதன் பின்னரேயே திரும்பியிருந்தனர்.
அப்போது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக பேராசிரியர் மஹேன்ந்திர சில்வா கடமையாற்றியிருந்தார். இந் நிலையில் பல சாட்சியங்களுடன் இலங்கையிலிருந்து திரும்பிய ஸ்கொட்லான்ட்யார்ட் பொலிஸார் கெலீ மெத்தியூவிற்கு சிறுவர்களை விநியோகித்த நபர்களையும் கைது செய்ய உதவியதன் பின்னரேயே திரும்பியிருந்தனர்.
இது போன்ற சிறுவர் பாலியல் விவகாரங்களில் நாட்டம் கொண்ட ஒருவகையான மனப்பாங்கு கொண்ட சுற்றுலாப் பயணிகள் இன்னும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர். பல நாடுகள் ஓரினச் சேர்க்கைக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் அவ்வாறான நாட்டமுள்ளவர்கள் ஓரினச் சேர்க்கை என்ற போர்வையில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய முனைகின்றனர்.
இந் நிலையில் இவ்வாறான மறைமுக காமுகர்களின் பிடியிலிருந்து எமது நாட்டின் சிறுவர்களை மீட்கவேண்டிய பாரிய கடப்பாடு சுற்றுலா துறை அபிவிருத்தியடைந்துள்ள நிலையில் எமது சமூகத்தவர்களிடம் உள்ளது. பிடிபட்டவர்கள் ஒரே ஒரு அலெக்ஸ் ஆகவும் ஒரே ஒரு மத்தியூவாகவும் இருக்கலாம். பிடிபடாமல் பல ஆசாமிகள் இவ்வாறு நடமாடிக்கொண்டும் இருக்கலாம். அவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவது மிக அவசியமாகும்.
இலங்கையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 5 முதல் 6 சிறுவர்கள் வரை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார். இதன்படி வருடத்துக்கு 2000 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதாக குறிப்பிடும் அவர் அவர்களில் 90 வீதமானோர் 16 வயதுக்கு கீழ் பட்டோர் என குறிப்பிடுகின்றார்.
அதுவும் அவர்களில் பெரும்பான்மையானோர் உறவினர்களாலேயே துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் பெரும்பாலும் அவற்றுக்கு சிறுவர்களின் அப்பாவித்தனம் சம்மதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக்வும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
பொலிஸாரின் தகவல்களின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு 1463 சிறுவர்கள் இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தொகையானது 2012 ஆகும் போது 1759 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அது 2000 வரை அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் பாலியல் ரீதியாக சிறுவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களின் பட்டியலே.
பொதுவாக சிறுவர்களுக்கு எதிரான அனைத்து துஷ்பிரயோகங்களையும் எடுத்து நோக்கும் போது இந்த தொகையானது 2012 ஆம் ஆண்டில் 5000 யும் தாண்டுவதாக புள்ளி விபரங்கள் விபரிக்கின்றன. இந் நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உறுதியான திட்டம் ஒன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து பொலிஸார் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் நேரடி கட்டுப்பாட்டில் சுமார் 41 சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான விஷேட பொலிஸ் பிரிவின் காரியாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகத்தினை முற்றாக கட்டுப்படுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் உள்ள பொலிஸ் பிரிவை போன்றே ஏனைய பிராந்திய பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரிவூடாக விஷேட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றிப்பிடும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கயவர்களின் பிடியில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கும் முகமாக பாடசாலை மட்டத்தில் அறிவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.
எனினும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்தபாடில்லை. உறவுகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சமூக மட்டத்தில் இதற்கு தீர்வு தேடினால் மட்டுமே இவ்வாறான துஷ்பிரயோகங்களை முற்றாக ஒழிக்கலாம் என்பது மட்டும் உறுதி.
– எம்.எப்.எம்.பஸீர்–
Post a Comment