பிரிவினைவாத அதிகாரங்களுடன், அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அதற்கு எதிராக உயிரை துச்சம் என மதித்து போராடப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் முதலாவது மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது நாடு பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. கொலைக்கார பயங்கரவாதிகளை தோற்கடித்து, மூன்று, நான்கு வருடங்களில் பிரச்சினைகள் முடிந்து விட்டது என நாம் நம்பினோம். நாட்டில் பிரச்சினை முடிந்து விட்டது. தற்போது சுதந்திரமான, மகிழ்ச்சியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். எனினும் தோற்கடிக்கப்பட்டது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதம் மாத்திரமே. தமிழ் இனவாத, பிரிவினைவாத அரசியல் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை.
|
வடக்கில் உதயன் பத்திரிகை உள்ளிட்ட ஏனைய தமிழ் பத்திரிகைகள் உருவாக்கும் இனவாத, பிரிவினைவாத தூண்டுதல்கள் நிறுத்தப்படவில்லை. சம்பந்தனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் இனவாத பிரிவினைவாத அரசியல் நிறுத்தப்படவில்லை. புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகள் முன்னெடுத்து வரும் சர்வதேச போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கி கொண்டுள்ளனர். அவர்கள் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரிவினைவாத்தை தூண்டுவதை நிறுத்தவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் பிரிவினைவாத சக்திகளுக்கு உயிர் வாயுவை ஏற்றி வருகின்றன. ஜனாதிபதி ஜப்பானுக்கு சென்றிருந்த போது, எப்போது வட மாகாண சபைத் தேர்தலை நடத்த போகிறீர்கள் எனக் கேட்டனர். ஓபாமாவை சந்தித்திருந்தால் அவரும் இதனையே கேட்டிருப்பார். நவநீதம்பிள்ளையும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையே எனக் கேட்கின்றார். அடுத்து தமிழீழத்தின் பேராயராக நினைத்த ராயப்பு ஜோசப் ஆண்டகை, வட மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய நாடுகளின் கண்காணிப்புடன் நடத்த வேண்டும் என ஜெனிவாவுக்கு கடிதம் எழுதுகிறார். வடக்கு, கிழக்கை ஐக்கிய நாடுகள் பொறுபேற்க வேண்டும் என அவர் கூறுகிறார். ராயப்பு ஜோசப் இங்கிருந்து ஐக்கிய நாடுளுக்கு அழைப்பு விடுப்பது போல் தமிழகத்தில் இருந்து கருணாநிதி அழைப்பு விடுகின்றார்.
வடக்கில் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் இல்லாத குழப்பம் தற்போது தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ளது. தமிழீழத்திற்காக தமிழ் மாணவர் அமைப்புகள் தமிழகத்தில் ஊர்வலம் போகின்றனர். இலங்கையில் ஈழத்திற்காக தமிழ் திரைப்பட நடிகர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் இந்த அணிதிரள்வு சாதாரணமானதல்ல. காஷ்மீரில் ஆளுநராக இருந்தவர்தான் இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். காஷ்மீருக்கு எவ்வாறானவர்களை அனுப்பி வைப்பார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இந்தியாவின் இந்த நடத்தை எதனை காட்டுகிறது. வடக்கில் இருந்து விரட்டப்பட்ட சிங்கள மக்களை குடியேற்றுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்க்கின்றது. வட மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் நடத்துங்கள் என ஏன் கூறுகின்றனர். இவை அனைத்தை ஒன்றிணைத்து பார்த்தால் என்ன நடக்க போகிறது என்பதை யூகிக்க முடியும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மாகாண சபைக்குள்ள அதிகாரங்களுடன் இந்த தேர்தலை நடத்தினால் என்ன நடக்கும். தற்போதுள்ள மாகாண சபைகள் காவல்துறை, காணி அதிகாரங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் பிரிவினைவாத சக்திகள் இல்லை என்பதால், அந்த அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. எனினும் இந்த அதிகாரங்கள் வட மாகாணத்திற்கு கிடைத்தால், மறுநாளே மாகாண காவல்துறை செயற்பட ஆரம்பிக்கும். அதனை தடுக்க முயற்சித்தால் உயர்நீதிமன்றத்திற்கு செல்வார்கள். ஷிராணி பண்டாரநாயக்கவை வைத்து கொண்டுதான் இவர்கள் இதனை செய்யவிருந்தனர். அவர் இன்று இல்லாமல் போயுள்ளார். அவர் இல்லாவிட்டால், தேவையான ஆதரவு கிடைக்காது என்பதை கூறமுடியாது.
வடமாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள அதிகாரங்களுடன் நடத்தினால், காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை பயன்படுத்தும் முதலாவது மாகாணமாக அந்த மாகாண மாறும். காணி அதிகாரங்களை பயன்படுத்தி வடக்கில், இராணுவ முகாம்கள் இல்லாமல் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள். ஆயுதங்களுடன் பிரிவினைவாத அரசியலை செய்தவர்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தை பயன்படுத்தி ஆயுத பலத்தால் செய்ய முடியாததை செய்ய ஆரம்பிப்பார்கள். மாகாண காவல்துறை ஆணைக்குழு நியமிக்கப்படும். அது மாகாண சபையின் முதலமைச்சரின் கீழ் இயங்கும் எனவும் அமைச்சர் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
|
வடக்கில் தேர்தல் நடாத்தப்பட்டால் உயிரை துச்சமென மதித்து போராடுவாராம் விமல் வீரவன்ச!
Labels:
அரசியல் தலைவர்கள்
Post a Comment