"கச்சதீவு இலங்கையின் கடல் எல்லையின் உள்ளே உள்ளது. தமிழ் நாடு அரசியல்வாதிகள் கூறுவது போலன்றி வேறு நாட்டவருக்கு அதைப் பயன்படுத்தும் உரிமை இல்லை" என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
1974ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு தரையிறங்கும் உரிமை 10 வருடங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். 1974ஆம் ஒப்பந்தப்படி கச்சதீவை அண்டிய கடலில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
இப்போது அவர்களுக்கு கச்சதீவில் இறங்கவோ இலங்கை கடற் படையின் அனுமதியின்றி வலைகளை காயப்போடவோ உரிமையில்லை என அவர் குறிப்பிட்டார். இலங்கை கடல் எல்லையினுள் மீன் பிடிக்கும் ஒவ்வொரு மீனவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவர் என அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
முன்னர் போல இந்திய கடலில் கைது செய்யப்படும் இலங்கை மீனவரை காப்பற்ற நாம் முன்வரமாட்டோம் என அவர் கூறினார்.
"அண்மையில் எல்லை மீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை மீனவரை விடுவிக்க 1.5 மில்லியன் தரும்படி கேட்கப்பட்டது. ஆனால் நாம் இதற்கு பதலளிக்கவில்லை. ஏனைய நாடுகளின் கடல் எல்லையை மீற வேண்டாம் என நாம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளோம். அப்படி மீறினால் இலங்கை அரசாங்கத்தின் உதவியை அவர்கள் எதிர்ப்பார்க்க முடியாது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment