மத்திய ஐரோப்பிய நாடான போலந்தில் இரு கட்சி கூட்டணியான வலது சாரி அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு கடந்த கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டு செய்திப் பத்திரிகையான வ்ப்ரோஸ்ட் அப்போதைய நிதி அமைச்சர் ராஜினாமா செய்தால் அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாக மத்திய வங்கித் தலைவர் உள்துறை அமைச்சருடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதான ஒரு தகவலை வெளியிட்டது.
இது தவிர அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரடோஸ்லா சிகோர்ஸ்கி அமெரிக்காவுடனான போலந்தின் உறவுகளை பயனற்றவை என்று கூறியதாகவும், இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கேமரூன் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் திறமையாகச் செயல்படவில்லை என்று விமர்சித்ததாகவும் தகவல்களை வெளியிட்டது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரங்களை முன்னிட்டு ஆளும் கட்சி பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினர். அண்டை நாடான உக்ரைனில் ஏற்படுத்தப்படும் நெருக்கடியைத் தொடர்ந்து போலந்தையும் ஸ்திரமற்றதாக மாற்ற மேற்கொள்ளப்பட்ட ஒரு அரசியல் சதி இது என்று கூறி பதவி விலக மறுத்த பிரதமர் டொனால்ட் டஸ்க் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டார்.
நேற்று இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 460 உறுப்பினர்களைக் கொண்ட போலந்து பாராளுமன்றத்தில் 237 உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இந்த நடைமுறை இல்லாமல் தான் அரசின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தியிருக்க முடியாது என்று பிரதமர் டஸ்க் நம்பிக்கை வாக்கெடுப்பிற்குமுன் குறிப்பிட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இன்று பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்லும் டஸ்க் அங்கு ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்பு குறித்து நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றார் என்று அரசு தகவல்கள் தெரிவித்தன.
Post a Comment