தமிழர்களுக்கு எதிரான
தாக்குதல்களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு,
முஸ்லிம்கள் மீதும் தொடர்
தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக்
கவனித்து வருகின்றன.
‘திடீர் என
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் ஏன்? இவ்வளவு
பெரிய பிரச்னை எதனால் நடந்தது?’ என
இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் ரஸ்மினிடம்
கேட்டோம். ”கடந்த சில ஆண்டுகளாகவே
தமிழர்கள் என்றாலோ, முஸ்லிம்கள்
என்றாலோ இங்கு இருக்கும் சிங்களர்களுக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்
பிடிப்பது இல்லை. எங்கள் நிம்மதியை மெள்ள மெள்ள பறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது பிரச்னை வெடித்ததற்குக் காரணமே ஒரு புத்த பிக்குவால்தான். ஒன்றுமே நடக்காத
விஷயத்தைப் பெரிதுபடுத்தி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி,
இதுவரை மூன்று முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டும்
ஆயுதங்களால் தாக்கியும் கொலைசெய்து இருக்கிறார்கள்.

கடந்த 12-ம் தேதி அளுத்கம பகுதியில் ஒரு புத்த பிக்கு வந்த காரும்
ஒரு முஸ்லிம் ஓட்டிவந்த காரும் எதிர்பாராத விதமாக மோதி,
சிறிய விபத்து நடந்தது. இதனால்,
புத்த பிக்குவின் வாகன ஓட்டுநருக்கும் முஸ்லிம் நபருக்கும் இடையில் வாக்குவாதம்
ஏற்பட்டு, இறுதியில் புத்த பிக்குவை அந்த
முஸ்லிம் நபர் தாக்கிவிட்டதாகப் பொய் செய்தியைப் பரப்பி,
பிரச்னையைத் திசைதிருப்பினார்கள். இதனால்,
குற்றமே செய்யாத இரண்டு முஸ்லிம்களை போலீஸ் அதிகாரிகள் கைது
செய்தார்கள். இதைக் காரணமாக வைத்து, ‘பொதுபலசேனா’
என்ற புத்த அமைப்பு, முஸ்லிம்களுக்கு
எதிராக மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தது. இலங்கையில் உள்ள
முஸ்லிம்களைக் கருவறுக்கும் நோக்கில் 1,000-க்கும்
மேற்பட்டவர்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திரட்டினார்கள்.
தமிழர்களுக்கோ,
முஸ்லிம்களுக்கோ பத்து, இருபது பேர் சேர்ந்து சின்ன ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அரசு
அனுமதி வழங்காது. கேட்டால், சட்டம் –
ஒழுங்கு கெட்டுவிடும் என்று சொல்லும். ஆனால்,
இவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்புடன்
ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி தருகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் நடத்திய
ஆர்ப்பாட்டத்துக்கு சுமார் 2,000-க்கும்
மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். சமாதானச் சூழ்நிலை
சீர்கெடுவதற்கு முன்பே சுதாரித்து
ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்திருந்தால், பிரச்னைகள் வளர்ந்து இருக்காது. அவர்கள் ஆர்ப்பாட்டம் என்று
அறிவித்த உடனேயே, அங்கு இருக்கும்
பள்ளிவாசல்களுக்குப் போய் எல்லோரும் தஞ்சம் அடைந்தோம். அளுத்கம தர்கா நகருக்கு
மத்தியில் அமைந்துள்ள சீனவத்த பகுதியில் இருந்த பல முஸ்லிம்களின் வீடுகளை கல்வீசி
தாக்கினர். அதோடு, பள்ளிவாசலில்
குழுமியிருந்த முஸ்லிம்களை அருவருப்பான வசனங்களால் திட்டினார்கள். இதனால்,
இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு,
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
15-ம் தேதி
மாலை 6.45 மணியளவில் அளுத்கம பகுதியைச்
சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர். ஊரடங்கு உத்தரவைத்
தொடர்ந்து பள்ளியில் ஒன்றுகுழுமி இருந்த முஸ்லிம்களால் தங்கள் வீடுகளுக்குக்கூட
செல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இதனைச் சாதமாக வைத்து ‘பொதுபலசேனா’வின் ஆட்கள்
போலீஸ்காரர்கள் இருக்கும்போதே முஸ்லிம்களின் வீடுகள் மீது கல் எறியத்
தொடங்கினார்கள். தீயிட்டுக் கொளுத்தினார்கள். முஸ்லிம்கள் நடத்திவரும் கடைகளையும்
பள்ளிவாசல்களையும்கூட தீயிட்டுக் கொளுத்தினர்.
அதிகார வர்க்கத்தின்
ஆதரவுடன்தான் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை உண்டு செய்கிறார்கள். அளுத்கம,
தர்கா நகர், வெல்பிடிய,
அதிகரிகொட ஆகிய பகுதிகளில் இன்றும் தொடர்ந்து எங்களைத்
தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அளுத்கம நகரம் ஒரு பக்கம் ஆற்றையும்,
இதர மூன்று பக்கங்கள் சிங்கள கிராமங்களாலும் சூழப்பட்ட ஒரு
ஊர். முழுக்க முழுக்க சிங்களர்களின் தாக்குதலால் முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான
ரூபாய்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன.
இந்தக் கலவரத்தைத்
தூண்டிவிட்டது ‘பொதுபலசேனா’
அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் என்பவர். ‘எந்த முஸ்லிமாவது ஒரு சிங்களன் மீது கையை வைத்தாலும்,
அதுவே அவர்களது இறுதி முடிவுக்கு அடையாளம்’
எனப் பேசி பெரும்பான்மை மக்களின் மனத்தில் முஸ்லிம்கள் குறித்த
வெறுப்பு உணர்வை அதிகப்படுத்தி வருகிறார். இவர் பேசிய பேச்சால்தான்,
முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து,
இதுவே மிகப்பெரும் கலவரம் நடக்கவும் காரணமாகிவிட்டது. பல
கடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. பெரும்பாலான வீடுகள் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டு
இருக்கின்றன. பல பள்ளிவாசல்கள் இந்த மதவெறியர்களால் எரிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தமே இல்லாத மூன்று
அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று இருக்கிறார்கள். பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி,
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த வந்திருந்தால்,
பள்ளிகளையும் வீடுகளையும் கடைவீதிகளையும் தாக்கி அழிக்கும்
அளவுக்கு ஆயுதங்களுடன் வந்திருக்க சாத்தியமே இல்லை. எங்களைத் தாக்க வேண்டும்;
எங்கள் உடைமைகளை அழிக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டே
சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. பல முஸ்லிம்கள்
இப்போது பள்ளிவாசலில்தான் வசித்து வருகிறார்கள்.
முஸ்லிம்கள் அச்சத்துடனும்
இருக்கிறோம். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. இந்தக்
கலவர சூழ்நிலையைப் பார்வையிடுவதற்காக சம்பவ இடத்துக்கு வந்த நிதி அமைச்சர் ரவுப்
ஹகீம் போன்றவர்களை நுழைய விடவில்லை. யாரையுமே ஊருக்குள் அனுமதிக்க மறுத்து
வருகிறார்கள். இங்கு இருக்கும் பதற்றமான நிலையை அறிய பத்திரிகையாளர்களையும்கூட
அனுமதிப்பது இல்லை. காவல் துறையின் கண்ணெதிரில்தான் இவ்வளவு அட்டூழியங்களும்
நடத்து இருக்கின்றன. பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
நாங்கள் இப்போது அரசிடம் சில
கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். ‘கலவரத்தில்
ஈடுபட்டவர்களை, கலவரங்களுக்குக் காரணமான
ஞானசார தேரரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். ‘பொதுபலசேனா’ இயக்கத்தை
உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். கேள்விக்குறியாகி இருக்கும் இலங்கை முஸ்லிம்களின்
பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதிசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத்
தேவையான அவசர உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு
அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். சொத்துக்களை இழந்தவர்களுக்கு அரசு உடனடி
நிவாரணம் வழங்க வேண்டும். முக்கியமாக உண்ண உணவின்றித் தவிக்கும் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு, உணவுகளை வழங்குவதற்கு
ஏற்பாடுசெய்ய வேண்டும்’ என்று
சொல்லியிருக்கிறோம்.
ராஜபக்ஷே வெளிநாடு
சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அங்கே
இருந்தே அவர் அறிக்கைவிட்டு இருக்கிறார். ஆனால், இன்னும் நிலைமை சீராகவில்லை. கோத்தபய ராஜபக்ஷே போன்றவர்களை
கையில் போட்டுக்கொண்டு அவர்கள் துணையுடன்தான் இத்தனை தாக்குதல்களையும் அரசாங்க
உதவியுடனே நடத்துகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர்கூட இதுவரை கைது
செய்யப்படவில்லை. இலங்கையில் இனி முஸ்லிம்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது”
என்று வேதனையுடன் சொல்லி முடித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமா-அத்தின் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டோம். ”இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு
வருகிறார்கள். அங்கு இருக்கும் மக்களுக்கு ஒன்று என்றால்,
நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிய
பொதுபலசேனா அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசை வலியுறுத்த சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள
இலங்கை தூதரகத்தை 17-ம் தேதி
முற்றுகைப் போராட்டம் நடத்தி இருக்கிறோம். இந்தக் கலவரத்தை பொதுபலசேனா அமைப்பும்
அதன் பொதுச்செயலாளர் ஞானசார தேரரேயும்தான் முன்நின்று நடத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் மீது நடவடிக்கை தேவை.

இந்தத் தாக்குதலுக்கு இலங்கை
அரசு உடந்தையா? புத்த பிக்குகள் வன்முறையைத்
தூண்டும் விதத்தில் பேசியபோதும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? புத்த
பிக்குகளை முஸ்லிம்கள் தான் தாக்கினார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
அப்படியே இருந்தாலும் சம்பந்தப்பட்டவரைத்தான் கைது செய்திருக்க வேண்டுமே தவிர,
ஒரு இனத்தையே எப்படி தாக்கலாம். அவர்கள் உடைமைகளை சூறையாடி,
மசூதியைக்கூட கொளுத்தியிருக்கிறார்கள். ஜனநாயக வழியில்
ஆர்ப்பாட்டம் என்றவர்களிடம் ஆயுதம் வந்தது எப்படி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, கலவரக்காரர்கள்
மட்டும் சுதந்திரமாக நடமாடியது எப்படி? உயிர்ச்
சேதங்கள், பொருள் சேதங்கள் ஏற்பட்டபோதும்
அதிகார வர்க்கம் கைகட்டி நின்றது ஏன்? முஸ்லிம்களின்
இது போன்ற ஏராளமான சந்தேகங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அதுவரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றார்.
யாருக்கும்
நிம்மதி இல்லாத நாடாக இலங்கை மாறிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
Post a Comment