தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகக் கருத்துக்கணிப்பு
சரித்திரங்கள் அடுக்கடுக்காக பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன. அது வெறும் கனவு என்று கூறப்பட்ட விடயங்கள் நனவாகியுள்ளன.
இஸ்ரேல் என்ற நாடு உருவாக முடியாது. அது வெறும் கனவு என பல அரசியல் ஆய்வாளர்கள் ஆயிரம் வருடங்களுக்குமேல் புள்ளி விபரங்களுடன் தெரிவித்து வந்தார்கள். ஆனால் பல அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு புள்ளியை யூதர்கள் வைத்தார்கள். அதுதான் இஸ்ரேல் என்றார்கள்.
புலம்பெயர்ந்து வாழ்ந்த இஸ்ரேலியர்கள் வருடத்திற்கு ஒருமுறை ஒன்று கூடுவார்கள். அடுத்த முறை சந்திக்கும்போது நாம் இஸ்ரேல் என்ற எமது தாயகத்தில் ஒன்று கூடுவோம் என்று அதன்போது உறுதி எடுத்துக் கொள்வார்கள்.
பல தலைமுறைகள் தொடர்ச்சியாக அவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவு காலம் இவ்வாறு கனவுலகில் வாழப்போகிறீர்கள் என எள்ளி நகையாடியோர் பலர். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்ட உறுதிமொழி நிறைவேறியதல்லவா மிகப் பலம் பொருந்திய அரபு நாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் உருவாகியது இது கனவல்ல.
இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியின் ஒரு பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. அந்தப்பகுதி கிழக்கு ஜேர்மன் என்று பெயரிடப்பட்டது.
இரண்டும் ஒன்று சேருமா பிரிந்த எம் உறவுகளை நாம் மீண்டும் சந்திப்போமா என்று இரு தரப்பு மக்களும் பலஆண்டுகள் ஏங்கித்தவித்தார்கள். ஆனால் ரஷ்யாவுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையையடுத்து 1989ஆம் ஆண்டு கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது.
ஜேர்மனியின் இணைப்புடன் ரஷ்யாவிலும் மாபெரும் ஜனநாயகப்புரட்சி ஏற்பட்டது. சோவியத் ரஷ்யா என்ற பெரும் தேசம் பல நாடுகளாகப் பிரிந்தது.
அந்நாடுகள் அனைத்தும் இணைந்து ரஷ்யாவின் தலைமையில் அமைப்பொன்றை ஏற்படுத்தின. அதேநேரத்தில் ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த யூகோஸ்லோவியா என்ற நாடும் பிளவுப்பட்டது.

அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது அந்த மக்களால் போராட்டம் நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் பின் ஐரோப்பிய ஒன்றியம் அந்த மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
ஆனால் ரஷ்யாவின் எதிர்ப்பு காரணமாக ஐ.நா. பாதுகாப்புச் சபை கோஸாவோ தனிநாடாகப் பிரிவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஐ.நா. பொதுச் சபையில் ஐரோப்பிய ஒன்றியம் தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்தது.
பெரும்பாலான நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து கொஸாவோ தனி நாடாகியது. தனியான மொழியும் கலாசாரமும் கொண்ட அந்த மக்கள் தமது சொந்த நாட்டில் இன்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
கிழக்கு தீமோர் தென்சூடான் ஆகியவை புதிதாக மலர்ந்த நாடுகளை அங்கும் முதலில் ஜனநாயகப்போராட்டம் பின்பு ஆயுதப்போராட்டம் என தனிநாடு கோரி போராட்டங்கள் இடம்பெற்றன. இறுதியில் ஐ.நா. சபை அந்த நாடுகள் விடயத்தில் தலையிட்டது.
கருத்துக்கணிப்பு நடத்தும் முடிவு எட்டப்பட்டது. ஐ.நா. சமாதானப்படையின் பாதுகாப்பில் கருத்துக்கணிப்பு இடம்பெற்றது. அவற்றில் தனி நாடு தேவை என்றே மக்கள் வாக்களித்தனர். அதனால் புதிதாக இரண்டு நாடுகள் உருவாகின.
ஆனால் கனடாவின் குவிபெத் மாநிலத்தில் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது. ஆனால் அதில் சற்று வித்தியாசமான தீர்ப்பொன்றை மக்கள் வழங்கினார்கள்.
பிரெஞ்சு மொழி பேசும் மாநிலம் அது முழுமையான சுயாட்சி நிர்வாக கட்டமைப்பு அங்கு உள்ளது. காவல்துறை, காணி, கல்வி, வேலைவாய்ப்பு அதிகாரம் கொண்ட மாநிலம் அது.
ஆனாலும் அங்கு தனி நாடு கோரி அரசியல் கட்சிகள் உருவாகின மாநில தேர்தல்களில் மக்கள் அந்தக்கட்சிகளுக்கும் வாக்களித்திருந்தனர். அதனால் கனடா அரசு குவிபெக் மாநில மக்களின் கருத்தை அறிய வாக்கெடுப்பொன்றை நடத்தியது. அதில் பெரும்பான்மையான மக்கள் தாம் கனடா அரசுடன் இணைந்திருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்
தனிநாட்டு கோரிக்கைக்கு குறைந்தளவு வாக்குகளே கிடைத்துள்ளன. எனவே அங்கு தனி நாடு கோரிய கட்சிகள் தற்போது தமது கொள்கைகளை மாற்றி அமைத்துள்ளன.
ஜனநாயகத்தையும் மனித உரிமைகளை யும் மதிக்கும் கனடா போன்ற நாடுகளில் மக்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்படுகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழீழ கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு குறித்து பேசியுள்ளார்.
இவ்வாரம் அவர் புதிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அது அமைந்துள்ளது. முதலில் தமிழக மாநில நலன்குறித்த திட்டங்களையடுத்து இலங்கை பிரச்சினை தொடர்பாகவும் பேசியுள்ளார்.
ஏற்கனவே சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை அவர் பாரதப் பிரதமரிடம் முன் வைத்துள்ளார். ஈழத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை அவசியம்.

முதல்வர் ஜெயலலிதா இவ்விடயத்தில் மிகத்தீவிரமாக இருப்பதையிட்டு உலகத்தமிழர்கள் மிகுந்த அக்கறையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். காலம் நேரம் அறிந்து காய் நகர்த்துவதில் அவர் எப்போதுமே வல்லவர் எனப்பலராலும் குறிப்பிடப்படுபவர்.
அவர் பாரதப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார் என்றசெய்தி இலங்கை அரசில் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தது.
அவர் தமிழீழ மீனவர் பிரச்சினை ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக கண்டிப்பாக பிரதமருடன் பேச்சுவார்த்தை நடாத்துவார் என இலங்கை அரசு எதிர்பார்த்தது. பல இந்திய ஊடகங்கள் இதனை வெளியிட்டிருந்தன. தமிழக முதல்வரின் பேச்சுவார்த்தையை திசைதிருப்பும் விதத்தில் இரண்டு நடவடிக்கைகள் இலங்கை அரசு எடுத்திருந்தது.
1. மீனவர் விடுதலை
2. கூட்டமைப்பிடம் பரிந்துரை கேட்டல்
இவ்விரு நடவடிக்கைகளும் முதல்வரின் பேச்சுவார்த்தையுடன் சம்பந்தப்பட்டது. மேலும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் பேச்சுவார்த்தையை ஊடறுத்துச்செல்லும் முயற்சியாகவ ஊடகங்களினால் கணிக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை 29 மீனவர்கள் திடீரென கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகின்றனர்.
இவ்விரு நடவடிக்கைகளும் முதல்வரின் பேச்சுவார்த்தையுடன் சம்பந்தப்பட்டது. மேலும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் பேச்சுவார்த்தையை ஊடறுத்துச்செல்லும் முயற்சியாகவ ஊடகங்களினால் கணிக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை 29 மீனவர்கள் திடீரென கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகின்றனர்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு முதல் நாளிரவு நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவாக அறிவித்தல் வெளியானது. மீனவர் கைது செய்யப்பட்டதும் முதல்வர் பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுதினார். அவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் பிரதமரை கேட்டுக்கொண்டார்.
அது மாத்திரமல்ல இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டாவது விடயமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்ற வேண்டும் என்ற விடயம் எடுத்தாளப்பட்டது. அமைச்சர் சிறிபாலடீ சில்வா கூட்டமைப்பினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். நீங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவிட்டாலும் தீர்வுத்திட்டத்திற்கான உங்கள் பரிந்துரைகளை அனுப்பிவையுங்கள் என்பதுதான் அவரின் வேண்டுகோள்.
முதல்வரும் பாரதப்பிரதமரும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு முதல்நாள் இதனை அமைச்சர் வெளியிட்டார். ஆனால் கூட்டமைப்பு உடனடியாகவே அதற்கு பதிலளித்துவிட்டது. கூட்டமைப்பு பங்குபற்றாமல் அதன் பரிந்துரைகளை நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என அந்தப்பதிலில் குறிப்பிடப்பட்டது.
இலங்கை அரசு எதிர்பார்த்ததைப்போல் இவ்விரு காய் நகர்த்தல்களும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மீனவர் பிரச்சினை குறித்தும் ஈழத்தமிழர் தொடர்பாகவும் இருதலைவர்களும் சற்று ஆழமாகவே உரையாடியுள்ளனர்.
இதனை இந்திய ஊடகங்கள் மாத்திரமல்ல சர்வதேச ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர் விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறார் என அல் ஜஸிரா தொலைக்காட்சியில் சுட்டிக்காட்டியிருந்தது.
13ஆம் அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பாகவோ அல்லது அதிகாரப்பகிர்வு தொடர்பாகவோ தமிழக முதல்வர் எதுவும் குறிப்பிடவில்லை. நேரடியாக அதே நேரத்தில் தூர நோக்குச் சிந்தனையுடன் தனித்தமிழீழ கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இருப்பினும் தொடர்ச்சியாக ஈழத்தில் தமிழர்கள் பெரும் அவலங்களைச் சந்தித்துவரும் நிலையில் 38 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தமிழீழம் என்ற முடிவு உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
தமிழீழ கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு என்பது ஜனநாயக விதிமுறைகளுக்குட்பட்டது. அதனை ஐ.நா நடாத்துவது என்பது சர்வதேசமும் மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமாக அமைகின்றது.

தமிழக முதல்வரின் ஆலோசனையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு. சுரேஷ் பிரேமசந்திரன் வரவேற்றுள்ளார். போர் முடிந்ததன் பின் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுத்திட்டம் ஒன்றைக் கொண்டு வர நாம் முயற்சித்தோம்.
2011ஆம் ஆண்டு இடைக்கால தீர்வுத்திட்ட யோசனை ஒன்றையும் நாம் சமர்ப்பித்திருந்தோம். ஆனால் அரசு அது தொடர்பாக எவ்வித மேலதிக நடவடிக்கையிலும் ஆர்வம் காட்டவில்லை. சர்வதேசத்திற்கும் அது பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. தொடர்ச்சியாக தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றார்கள். எனவே அவர்களிடம் தமிழீழ கருத்துக் கணிப்பொன்றை ஐ.நா நடாத்தும் யோசனையை நாமும் வரவேற்கின்றோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
புலம்பெயர் தமிழ்மக்களும் தொடர்ச்சியாக இக்கருத்துக்கணிப்பு இடம்பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்கள். ஐ.நா பணிமனைக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் தாயகத்தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வாக அமைய முடியும் எனக்குறிப்பிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஐ.நாமனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கிறார். அவரின் பதவிக்காலம் நீடிக்கப்படலாம் என முன்பு எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் ஓய்வு பெறுவது உறுதியாகி விட்டது. அவரின் இடத்திற்கு புதிய ஆணையாளராக சட்டவாளர் திரு. தருஷ்மன் நியமிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாகவேகாணப்படுகின்றன.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார். அந்தக்குழுவுக்கு திரு. தருஷ்மன் தலைவராகப் பணிபுரிந்தார்.
அந்தக்குழுவின் அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்கள் முதல் தடவையாக வெளிப்பட்டது. இங்கு குறிப்பிடத்தக்கது எனவே அவர் ஆணையாளராக நியமிக்கப்பட்டால் அது இலங்கை அரசுக்கு சாதகமானதல்ல என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது.
அதன் விசாரணைகளை நடாத்த முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் திரு. கோபி அனான் நியமனம் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் அங்கு வருவதற்கு முன்பே இலங்கை அரசிலிருந்து அவருக்கு எதிரான குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
அவர் நாட்டினுள் வர நுழைவு அனுமதி வழங்கப்பட மாட்டாதென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத. ஆனாலும் அவர் தொடர்பாக அரசின் உத்தியோகப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏனெனில் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என இலங்கை அரசு உத்தியோகப்பூர்வமாக ஜெனிவா ஐ.நா பனிமனைக்கு அறிவிக்கவில்லை. அவ்வாறிருக்க கோபி அனானை வர வேண்டாம் என்று இலங்கை அரசினால் குறிப்பிட முடியாது என்றே தெரிவிக்கப்படுகின்றது.
- வீ.ஆர்.வரதராஜா
ஊடகவியலாளர் – ஜேர்மனி
ஊடகவியலாளர் – ஜேர்மனி
Post a Comment