டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இச்சம்பவம்.
தலைநகரில் நடந்த இத்தகைய கொடுமையால், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்ன என்பது சர்வதேச அளவில் கேள்விக்குறியானது. இத்தகைய தவறுகள் நிகழ்வதற்கு குற்றவாளிகள் மட்டும் காரணமல்ல, தவறு நடக்கிறது என்பதைக் கண்டும், காணாமல் செல்லும் மக்களும் தான் இத்தகைய தவறுகள் அதிகரிக்க முக்கியக் காரணம் ஆகும்.
பொது இடத்தில் பெண்ணொருவருக்கு ஆபத்தென்றால், அதனைத் தடுக்க எத்தனைப் பேர் முன்வருகிறார்கள் என்பது ஒரு நிகழ்ச்சி வாயிலாக அம்பலமாகியுள்ளது.
கேண்டிட் கேமரா…
யூடியூபின் சேனலான ‘யெஸ்நோமேபி’ சமீபத்தில் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில், டெல்லி மக்களின் மனநிலையை படம் பிடிக்கும் விதமாக அந்நிகழ்ச்சி தயாரிக்கப் பட்டிருந்தது.
மர்ம கார்…
அதன்படி, கதவுகள் முழுவதும் மூட்டப்பட்ட கார் ஒன்று டெல்லியின் தெரு ஒன்றில் இரவில் நிறுத்தப்பட்டது. காருக்கு உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது தெரியாவண்ணம் காரின் கண்ணாடிக் கதவுகள் கருப்பு நிறத்தில் இருந்தன.
பெண்ணின் அலறல்…
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெண்ணின் அலறல் வீடியோ ஒன்று காரின் உள்ளே இருந்து ஒலிக்கும் படி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
மக்களின் ரியாக்ஷன்…
காருக்குள்ளிலிருந்து ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என பெண் ஒருவர் கதறினால் வழிப்போக்கர்களின் ரியாக்சன் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
ஆச்சர்யம் ஆனால், உண்மை…
ஆனால், அதிர்ச்சிக்குரிய விசயம் என்னவென்றால் இவ்வாறு காருக்குள்ளிலிருந்து பெண் ஒருவரின் அபயக் குரல்களைக் கேட்ட பலர், கண்டும் காணாமல் விலகிச் சென்றது தான். ஆனால், எல்லாரையுமே அவ்வாறு குறைக் கூற முடியாது. சிலர் பெண்ணொருவருக்கு ஆபத்து எனத் தெரிந்ததும் பொங்கியெழுந்து காரை உடைக்க முற்படுகின்றனர்.

வீரத்திற்கு வயதில்லை…
அதிலும், குறிப்பாக 78 வயது பாதுகாவலர் ஒருவர் ஆவேசமாக காரை உலுக்கும் காட்சி நம்மை புல்லரிக்க வைக்கிறது. வாலிபர்கள் பலர் தட்டிக் கேட்க தயங்கியதை தைரியமாக செய்கிறார் அந்தத் தாத்தா.
பெண்ணைக் காப்பாற்ற முயற்சி…
சில ஹீரோக்கள் கற்களைக் கொண்டும், சிலர் கைகளைக் கொண்டும் கார் கண்ணாடிகளை உடைக்க முற்படுகின்றனர்.

வெறும் செட்டப் தான்…
கார் சேதமாவதற்கு முன்னதாக ஓடி வரும் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினர் இது செயற்கையாக சித்தரிக்கப் பட்டது என விளக்குகின்றனர்.
நிச்சயமாக…
பின்னர், வீரமாக பெண்ணைக் காப்பாற்ற முற்பட்ட ஹீரோக்களிடம் இதே போன்று நிஜத்தில் வேறு பெண் பிரச்சினையில் காத்திருந்தாலும் உதவுவீர்களா எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு, அவர்கள் நிச்சயமாக, சந்தேகமேயில்லை’ எனத் தெரிவித்ததாக தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யார் பொறுப்பு…?
நிகழ்ச்சியின் முடிவில், ‘இத்தகைய குற்றங்களில் காருக்குள் இருப்பவர்கள் மட்டும் குற்றவாளிகளல்ல, கண்டும் காணாமல் செல்லும் பொறுப்பற்ற மக்களும் தான்’ எனக் கூறுகின்றனர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.
இந்தியாவின் நிலைமை…
இந்தியாவில் இருபத்தியிரண்டு நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பல பலாத்காரங்கள் அரசின் கவனத்திற்கு வராமலே மறைந்து விடுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். அவைகளையும் சேர்த்தால் இந்த பலாத்கார விகிதம் அதிகரிக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
பூட்டப்பட்ட காருக்குள் பெண்ணின் அலறல்… பூட்டப்பட்ட காருக்குள் பெண்ணின் அலறல்…
Post a Comment