ஹிட்லர், முசோலினி, பிரபாகரன் படங்களுடன் பிரதமர் மோடி படம் பிரசுரிப்பு! பாலிடெக்னிக் முதல்வர் கைது!!


கேரளாவில் அரசு பாலிடெக்னிக் ஆண்டு மலரில் தீவிரவாதிகள், சர்வாதிகாரிகள் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது.

நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளத்தில் அரசு பாலிடெக்னிக் உள்ளது. இங்கு 2012-13ம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் மலர் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த மலரின் உள்பக்கத்தில் ‘negative faces’ என்ற தலைப்பில் தீவிரவாதிகள் பின்லேடன், அஜ்மல் கசாப், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரது படங்களுடன், பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகாரிகள் மற்றும் தீவிரவாதிகளின் படங்களுடன் பிரதமர் மோடியின் படமும் பிரசுரிக்கப்பட்ட தகவல் குறித்து அறிந்த பா.ஜ.க. தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து குன்னம்குளம் அரசு பாலிடெக்னிக் முன் பா.ஜ.க. மற்றும் யுவ மோர்ச்சா தொண்டர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் மோடியின் படம் வெளியான மலரை தீ வைத்து எரித்தனர். பாலிடெக்னிக் முதல்வர் மற்றும் மோடியின் படத்தை பிரசுரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே குன்னம்குளம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர் உள்பட 7 பேர் மீது பிரதமரை அவமதித்ததின் பேரில் இ.பி.கோ. 153ம் பிரிவின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“பாலிடெக்னிக் முதல்வர் உள்பட இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது தேச துரோக குற்றத்தின் பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என பா.ஜ.க. மாநில தலைவர் வி.முரளீதரன் கூறி உள்ளார்.
நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மலரை உடனடியாக வாபஸ் பெற்றது பாலிடெக்னிக் நிர்வாகம். ஆனால், புத்தகத்தை வாபஸ் பெற்றாலும் வழக்கு நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
“இந்தப் புத்தகம் ஏற்கெனவே பலரது கைகளுக்கும் சென்று விட்டது. பிரதமரை அவமதிக்கும் வகையில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதால் அதன் பின்னணியில் செயல்பட்டவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்கிறது கேரள போலீஸ்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger