பிள்ளை பிடிக்க தப்லீக் வருகிறது பப்ளிக் ஜாக்கிரதை!



கோடை காலம் வந்ததும் கடுமையான வெயில் வந்து விடுகின்றது. அந்த வெயிலுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளும் வந்து விடுகின்றன. அவற்றில் முதன்மையானது பள்ளிகளுக்கான விடுமுறை! வளர்கின்ற இளைய தலைமுறையினரில் ஒரு கூட்டம், விடுமுறை விட்ட மாத்திரத்தில் கொதிக்கும் வெயிலில் கிரிக்கெட் மைதானத்தைக் குத்தகைக்கு எடுத்து விடுகின்றது. ஒரு கூட்டம் ஊதாரித்தனமாக இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுகின்றனர். ஒரு கூட்டத்தினர் விடுமுறைக் காலத்தை வீணாக்காமல் மார்க்கக் கல்வி கற்பதில் கழிக்கின்றது. இந்தக் கூட்டம் வரவேற்கப்பட வேண்டிய கூட்டம் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் மார்க்கம் என்ற பெயரில் பல்வேறு இயக்கங்கள் மாணவர்களைப் பிடிப்பதற்கு வலை விரித்து வைத்திருக்கின்றனர். இந்த இயக்கங்களில் சரியான இயக்கத்தைப் பெற்றோர்கள் தேர்வு செய்து தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும். படிக்கின்ற பிள்ளைகளை பிடிக்கின்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தும் ஒன்று! இந்த தப்லீக் ஜமாஅத்தினர் பிள்ளைகளை 40 நாட்களுக்கு ஊர் ஊராக அழைத்துச் செல்கின்றனர். பிள்ளைகள் இந்த தப்லீக் ஜமாஅத்திற்குப் போய் விட்டு வந்தால் மார்க்கப் பற்றுடனும் பயபக்தியுடனும் தலையெடுப்பான் என்று பெற்றோர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கையாகும். தப்லீக் ஜமாஅத்தில் செல்கின்ற பிள்ளைகள் உண்மையான மார்க்கத்தைத் தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றி நடந்தால் சரி என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் தப்லீக் ஜமாஅத்தினரோ மார்க்கத்தைத் தவறாக விளங்கி வைத்துக் கொண்டு மற்றவர்களையும் தவறான பாதையில் வழிகெடுக்கின்றனர். அவற்றை இப்போது பார்ப்போம்.
குர்ஆன், ஹதீஸை வெறுக்கும் கூட்டம்.
தஃலீம் என்ற பெயரில் காலை, மாலை நேரங்களில் ஒரு புத்தகத்தைப் படிப்பார்கள். இதற்குப் பதிலாக குர்ஆன் மொழிபெயர்ப்பையோ, ஹதீஸ் மொழிபெயர்ப்பையோ படியுங்கள் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதை விட லட்சம் மடங்கு இதில் தான் நன்மை அதிகம் என்பதாகப் பிதற்றுவார்கள். அதிகம் வலியுறுத்தினால் கோபத்தில் கொந்தளிப்பார்கள்; கொதிப்பார்கள்.
நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். “இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 22:72)
அல்லாஹ் கூறுகின்ற இந்த அடையாளத்தை இவர்களது முகத்தில் நாம் காணலாம். இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்
(அல்குர்ஆன் 74:49-51)
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று குர்ஆன் என்று சொன்னதும் இவர்கள் வெருண்டு ஓடுவார்கள். இதிலிருந்து இவர்கள் யார் என்று தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
குர்ஆன் வசனங்களை அப்பட்டமாக மறுத்தல்.
இவர்கள் வாசிக்கும் தஃலீம் கிதாபில் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் நேர்மாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும்.
உதாரணத்திற்கு,
ஒரு பெரியார் கப்ரில் நின்று தொழுதார் என்றும் அதை ஒருவர் பார்த்தார் என்றும் கதையளப்பார்கள். இது சுத்தமான பொய் மட்டுமல்ல! குர்ஆன் வசனத்தை நிராகரிக்கின்ற இறை மறுப்பாகும்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அல்குர்ஆன் 23:100)
உலகில் உள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரையைத் தாண்டி கப்ரில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்குள்ளவர்கள் அறிய முடியாது. இங்குள்ளதை அவர்கள் அறிய முடியாது. ஆனால் அல்லாஹ் கூறும் இந்தக் கருத்துக்கு எதிராக அமைந்துள்ள தஃலீம் கிதாப் கதையையும் இதுபோன்ற எண்ணற்ற கதைகளையும் இவர்கள் நம்புகின்றார்கள். இது அல்குர்ஆனை அப்பட்டமாக மறுப்பதாகும்.
தீமையைக் கண்டு ஊமையாய் இருப்பது.
இவர்களது பார்வையில் தப்லீக் என்றால் தொழுகைக்கு அழைப்பது மட்டும் தான். அல்லாஹ்வுக்கு இணையாக “யா முஹ்யித்தீன்’ என்று அழைத்துப் பிரார்த்தனை செய்யும் கொடிய பாவத்தை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தப்லீக் ஜமாஅத்தில் இருப்பவரின் தாய் தந்தையர் இந்தப் பாவத்தைச் செய்தால் கூட அவர்களை அதிலிருந்து இவர்கள் விலக்க மாட்டார்கள். தர்காவுக்குச் செல்வோரிடம், தர்காவுக்குச் செல்லாதீர்கள் என்று தடுக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் செய்தது இதுபோன்ற தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியைத் தான். காரணம், இந்தப் பாவத்தைச் செய்தவர்களுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான்.
“மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.
(அல்குர்ஆன் 5:72)
அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் பாவத்தைச் செய்தவர்களுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அதாவது அவர்கள் நரகத்தில் நிரந்தரமாகக் கிடப்பார்கள். இத்தகைய பாவத்தை விட்டும் மக்களைத் தடுக்கும் பணியை இந்த தப்லீக் ஜமாஅத்தினர் செய்ய மாட்டார்கள். தொழுகைக்கு மட்டும் அழைப்பார்கள்; மற்ற தீமைகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.
தூதர் நபி மீது துணிந்து பொய் சொல்லுதல்.
அந்தப் பெரியார் சொன்னார்; இந்தப் பெரியார் சொன்னார் என்று இல்லாததை எல்லாம் அடித்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் சொல்லாத செய்திகளையெல்லாம் அவர்கள் சொன்னதாகக் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.
அறிவிப்பவர்: முஃகீரா (ரலி) நூல்: புகாரி 1291
நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை தப்லீக் ஜமாஅத்தினர் கொஞ்சம் கூடப் பொருட்படுத்துவதில்லை. கஷ்த் என்ற பெயரில் ஊர்வலம் வருவார்கள். அந்த ஊர்வலத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் லட்சக்கணக்கான நன்மைகள் இருக்கின்றன என்று கதையளப்பார்கள். பத்து, நூறு, ஆயிரம் என்ற இலக்கங்களிலெல்லாம் நன்மைகளை அளக்கமாட்டார்கள். லட்சங்களில் தான் அளப்பார்கள். ஒரு நன்மை உண்டு என்று சொன்னாலும் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் சொல்ல வேண்டும். மார்க்கம் இவர்களது அப்பன் வீட்டுச் சொத்து என்பது போல் இவர்கள் இஷ்டத்திற்குச் சொல்வது, இவர்கள் மார்க்கத்தில் துணிந்து பொய் சொல்பவர்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
காடே, செடியே, கண்ணே, ரஹ்மானே என்று மனைவி மக்களை விட்டு விட்டு, அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று நாற்பது நாட்கள், நான்கு மாதம் பத்து நாட்கள் ஊர் ஊராய் சுற்றக் கிளம்பி விடுவார்கள். மனைவி மக்களுக்கு உழைத்துக் கொடுப்பது மார்க்கக் கடமை என்பதை உணர மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!” என்றார்கள். “தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: புகாரி 1974
இந்த ஹதீஸின் அடிப்படையில் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையை இவர்கள் செய்வதில்லை. மனைவி மக்களுக்காகப் பாடுபட்டு சம்பாதிப்பதற்கும் அல்லாஹ்விடம் கூலி இருக்கின்றது என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதும் ஒரு தர்மம் என்பதை இவர்கள் அறவே சிந்திப்பது கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
சூஃபிகள் என்ற வழிகேடர்கள் திருமணம் முடிக்காமல் சன்னியாசி ஆனார்கள். ஆனால் இவர்கள் திருமணம் முடித்து விட்டு, பிள்ளைகளையும் பெற்று விட்டு அவர்களைக் கவனிக்காமல் அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் அநீதி இழைக்கின்றனர். இத்துடன் இவர்களது அநியாயங்கள் நின்று விடுவதில்லை. தனது பிள்ளை தப்லீக்கில் செல்லவில்லை என்பதற்காக காட்டுமிராண்டித் தனமாக அந்தப் பிள்ளையைத் தாக்கி, சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்ட கொடுமையும் நடந்துள்ளது.
குரல் எழுப்பாத கோழைத்தனம்.
பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டாலும் சரி! குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டாலும் சரி! இந்த அக்கிரமத்திற்கு எதிராக, அநீதிக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள். மாறாக வாய் மூடி வாளாவிருப்பார்கள். வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டிக்காததுடன் மட்டுமில்லாமல் அந்த வரதட்சணைத் திருமணத்தையும் அதில் நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்க மாட்டார்கள். அவ்வாறு புறக்கணிப்பது நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியில் மிக உயர்ந்த தரத்தில் உள்ள செயலாகும்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)
இதைக் கவனத்தில் கொண்டு இத்தகைய திருமண விருந்துகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்பது போன்று சாப்பாட்டிற்கு முதல் ஆளாய் முந்திக் கொள்கிறார்கள். இது தவிர தப்லீக் ஜமாஅத்தில் செல்பவர்கள் பீடி, சிகரெட் புகைப்பதை ஒரு பொருட்டாகக் கருதுவது கிடையாது. இதில் இருப்பவர்கள் பலர் சர்வ சாதாரணமாக பீடி, சிகரெட் புகைப்பதைக் காண முடியும். தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அங்கு தரப்படும் உணவுக்கும் ஓய்வுக்கும் அடிமையாகி படிப்பில் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம்.
அதுபோன்று தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை ஒழுங்காகச் செய்யாமல் 40 நாள், 4 மாதம் 10 நாள் விடுமுறை விட்டுச் செல்வதால் திவாலாகி விடுவதையும், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தப்லீக் செல்வதால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இப்படி தப்லீக் என்ற பெயரில் மார்க்கத்தில் இவர்களது அறியாமையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அவை அனைத்தையும் சொல்வதற்கு இந்த ஆக்கம் போதாது. விரிவான விளக்கங்களுக்குதஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு என்ற நூலைப் பார்க்கவும்.
மேலே நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தப்லீக் என்ற இயக்கம், ஏகத்துவக் கொள்கையிலிருந்து நம்மை விலகச் செய்து, குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் தடம் மாற்றி தஃலீம் புத்தகத்தை மட்டும் வேதமாகி, அறியாமை வழியில் அழைத்துச் செல்லும் ஓர் இயக்கம் என்பதில் சந்தேகமில்லை. சமாதி வழிபாட்டிலிருந்து மக்களைக் காப்பதற்காக இல்யாஸ் மவ்லானா ஆரம்பித்த தப்லீக் இயக்கம் இப்போது தடம் மாறி நிற்கின்றது. நமது பிள்ளைகளை அதில் சிக்காமல் காக்க வேண்டும். எனவே தான், பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பப்ளிக் ஜாக்கிரதை என்று எச்சரிக்கின்றோம்.
நன்றி : ஏகத்துவம் மே மாதம்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger