இனவாதத்தின் இரண்டாம் கட்ட நகர்வு - ஆகஸ்ட் மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து


– ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

முப்பது வருட கால கோர யுத்தத்தின் சுடு சாம்பலை மீண்டும் தோண்டியெடுத்து, இலங்கை தேசத்தை அணையாத தீக்குண்டமாய் சதா காலத்திற்கும் எண்ணெய் வார்த்து வளர்க்கும் பணியினை அதிகாரப் பின்புலத்துடன் சில இனவாத அமைப்புகள் முன்னெடுத்து வருவதனை நிதர்சனமாய் காண முடிகிறது.

தமிழினத்தின் மீதான அடக்குமுறையின் கோர நகங்களை யுத்த நிறைவுடன் தற்போது முஸ்லிம்களின் மீது அழுத்தமாய் பாய்ச்சி, அவர்களை குதரித்திண்ணும் குரூர நிலையினை இவ்வினவாத அமைப்புகள் இலங்கையின் ஆங்காங்கே உருவாக்கி வருவதனையும் அவதானிக்க முடிகிறது.

மழைக்கு முன்னரான சாரல் போன்று முஸ்லிம்களை குறிவைத்து அவ்வப்போது தூண்டிவிடப்பட்ட இனவாத முறுகள் நிலைகள் தற்போது அணை கடந்த காற்றாட்டு வெள்ளம் போன்று கடும்போக்கு வாத இனவாத அமைப்புகளினால் பரவலாக்கப்பட்டு, முழுமையான இனச்சுத்திகரிப்புக்கான களத்தை உருவாக்க எத்தனிக்கும் குள்ள நரித்தனம் கண்டிக்க வேண்டியதும் களையப்பட வேண்டியதுமாகும்.

குறிப்பாக ஓர் இனக்கலவரத்திற்கான முஸ்தீபாக எதிர் இனத்தின் உடைமைகளும், வழிபாட்டுத் தலங்களும், இருப்புக்கான அடையாளங்களும் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்படுவதானது வரலாற்று நெடுகிலும் நடந்தேறி வந்துள்ள நடைமுறையாக அமைந்துள்ளதை ஈண்டு குறிப்பிட்டாக வேண்டும். ஈராக், பாலஸ்தீனம், குஜராத் முதல் இவ்வினவாத அழிவுப் படலத்தின் தவிர்க்க முடியாத தடயங்களை காணமுடிகிறது. இதன் இயங்குவியல் இலங்கை விடயத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளமை முஸ்லிம்கள் தங்களை சுதாகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அளுத்கமையில் தீமூட்டப்பட்டு அழிக்கப்பட்ட 5 கோடி பெறுமதியான முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு மாடி வர்த்தக நிலையம், மற்றும் மே மாதம் 18 ஆம் திகதி மாவனல்லையில் கள்ளத்தனமாய் பின் கதவு உடைக்கப்பட்டு எரிக்கப்பட்ட ஹாட்வெயார் கடை, 12.06.2014 அன்று பிக்கு தாக்கப்பட்டதாக சோடிக்கப்பட்ட அவதூறுப் பிரச்சாரமும் போலிஸ் நிலைய முற்றுகையும், அரசு போடும் பதவி எனும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு படியளக்கும் எஜமானர்களுக்கு வாலாட்டிக் கொண்டு  சோரம் போன பெயர் தாங்கி முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்டு சமரசம் என்ற போர்வையில் தாரைவார்க்கப்பட்ட தம்புள்ளை மற்றும் கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல்கள், 15.06.2014 அன்று அளுத்கமை, பேருவளை பகுதிகளில் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனங்களும் இனச்சுத்திகரிப்பு முன்னெடுப்புகளும் உட்பட அனேக விடயங்கள், இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய இனச்சுத்திகரிப்புக்கான சமிக்ஞையாகவே நோக்க வேண்டியுள்ளது. விசாரணைகளில் வீரியம் காட்டாத போலிஸ் அதிகாரிகளினதும், ரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடாத அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் இவ்வினவாத செயற்திட்டங்களுக்குப் பின்னால் அதிகார வர்க்க மறை கரம் அழுத்தமாய் தொழிற்படுகிறது என்பதையே எம்மால் அனுமானிக்க முடிகிறது.

அத்தோடு, இந்தியத் தேர்தலில் இந்து இனவாத கட்சியான  பா.ஜ.கட்சியின் வேற்பாளர் நரேந்திர மோடி பெற்ற வெற்றியானது இலங்கையின் இனவாத தளத்தில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மறுதலிக்க முடியாது. குஜராத்திய முஸ்லிம்களை நர மாமிச வேட்டையாடிய மோடியின் வெற்றியோடு ஏலவே இலங்கையில் வேர்விட்டு படர்ந்து வரும் விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் கிழக்கில் திரைமறைவில் செயற்படும் எள்ளாளன் படை போன்ற பிரிவினர்கள் இந்துத்துவ வாதத்தை முன்வைத்து தங்கள் முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளை வெளிக்காட்ட அதிக வாய்ப்புகள் உண்டு.

மேலும், தனித்து நின்று முஸ்லிம்களை எதிர்ப்பதை விட இந்து மதத்தை காப்பது போன்று நாடகமாடி, இந்துக்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு, பொது எதிரியாய் முஸ்லிம்களை சித்தரித்து தங்கள் இனவாத காய் நகர்த்தல்களை நாசூக்காக நகர்த்துவதே பொதுபல சேனா உள்ளிட்ட இனவாதிகளின் திட்டமுமாகும். இத்திட்டம் கடந்த 24.05.2014 அன்று இந்து சம்மேளனம் மற்றும் பொது பல சேனா அமைப்பினரின் கூட்டிணைப்புடன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நடைபெற்ற மத மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தின் மூலம் வெளிப்பட்டதை கண்கூடாக காண முடிந்தது. இது பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து செயற்பட வேண்டிய காலம். அதிகமான இந்துக்கள் நாளாந்தம் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்படுகிறார்கள். பத்திரிகைகளில் வரும் பெயர் மாற்றங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக தெனியாய, அகுரஸ்ஸ போன்ற பிரதேசங்கள் இன்று முழுமையாக இஸ்லாமிய மதமாற்றத்துக்கு உள்ளாகிவிட்டது. இதை தடுப்பது எமது கடமை. என்று இந்துக்களின் ஊர்வலத்தில் பொது பலசேனாவின் செயலாளர் ஞான சார தேர்ரினால் கக்கப்பட்ட முஸ்லிம் விரோத கருத்தானது கிட்டிய எதிர் காலத்தில் இஸ்லாமியர்களை எதிர்ப்பதற்காய் பொதுபல சேனா போன்ற அமைப்பினர் இந்துத்துவ வாதிகளையும் பகடைக்காய்களாய் பயன்படுத்துவர் என்பதை கட்டியம் கூறி நிற்பதை காணலாம். அத்தோடு, ஏலவே முன்மொழியப்பட்ட மதமாற்ற தடைச்சட்ட மசோதாவினை சட்டமூலமாக்கி, இச்சட்டத்தின் போர்வையில் இஸ்லாமிய பிரச்சார அமைப்புகளையும், பிரச்சாரகர்களையும் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கும் உத்தேசமும் இத்திடீர் இந்து - பௌத்த நெருக்கத்தால் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

இனவாதிகள் தங்கள் கோர முகத்தினை இத்துனை பகிரங்கமாய் வெளிக்காட்டியும் கூட அரச மட்டம் இது குறித்து அசட்டை செய்யாது உறங்கு நிலையில் இருப்பது ஏன்? என்ற அழுத்தமான கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். முஸ்லிம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் போலியான குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் பொது மக்கள் மத்தியிலே ஊடகங்கள் வாயிலாக இனவாத அமைப்பினர்கள் தெரிவிக்கும் போது, அவற்றுக்கான மறுப்பை தெரிவிக்க வாய்ப்புகள் கேட்கப்பட்டால் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விடுகின்ற பட்சத்தில், தப்பான தகவல் பெரும்பான்மை சமுதாயத்தில் பரவாமல் இருப்பதற்காக எம்மீது தொடுக்கப்பட்ட அவதூறுகளுக்கு பதிலளிக்கும் நோக்கில், எம் சக்திக்கு உட்பட்டு, ஜனநாயக வழிமுறைகளைப் பேணி ஒரு மறுப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் அதனைக் கூட கலவர சூழ்நிலையை காரணம் காட்டி அதிகாரிகளால் தடுக்க முடியும் என்றால், ஏன் பகிரங்கமாக முஸ்லிம்களை எதிர்த்து ஊர்வலம் செல்லும் பொது பல சேனாவையும் இன்னுமுண்டான அமைப்புகளையும் போலிஸ் தரப்பினரால் தடுக்க முடியாதுள்ளது? கடந்த 15.06.2014 அன்று அளுத்கமையில்; பொது பல சேனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஏன் அரச அதிகாரிகள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார்கள்? அளுத்கமையிலும், பேருவளையிலும்; இடம்பெற்ற அசம்பாவிதத்தை விசாரிக்க ஏன் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்களினால் இது வரை முன்னெடுக்கப்பட வில்லை?

நடந்தேறும் நிகழ்வுகளுக்குப் பின்னால் அமைச்சர்களையும், போலிஸ் அதிகாரிகளையும் கட்டுப்படுத்தக் கூடிய அரச உயர்மட்ட அழுத்தம் ஒன்று இருந்தால் மாத்திரமே மேற்குறித்த நிகழ்வுகள் கண்டு கொள்ளப்படாமல் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. யுத்தம் கருக்கொண்ட நாட்களில் அதனையே பேசுபொருளாக்கி எப்படி அரசியல் ஆதாயத்தினையும் வாக்கு வங்கிகளையும் அவ்வப்போது ஆட்சி பீடம் ஏறியவர்கள் அடைந்து கொண்டனரோ, அது போன்று தங்கள் ஆட்சிக் கதிரையினை தக்க வைக்க வேண்டுமாயின் ஏதோ ஒரு பேசு பொருள் தொடர்ந்தும் இருந்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் பிரதிபளிப்பாகக் கூட இக்கண்டுகொள்ளாமை இருக்க சாத்தியம் உண்டு. குறிப்பாக, 2015 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வைக்கப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. இத்தருணத்தில் இந்தியாவில் எப்படி மோடி இந்துத்துவ வாதத்தை பேசுபொருளாக்கி ஆட்சி பீடம் ஏறினாரோ, அதே யுக்தியை கையாண்டு அரச தரப்பும் பௌத்த வாதத்தை பேசுபொருளாக்கி, பௌத்தத்தை காக்க வந்த ஒரே அரசு நாமே என்ற தோற்றத்தை பெரும்பான்மை மக்களின் உள்ளங்களில் விதைத்து, அதனடியாக எழும் பௌத்த இன உணர்வினை தனக்கான வாக்குகளை கொள்ளையிடும் யுக்தியாக கையாழ்வதற்கு அரச தரப்பு சிந்திக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் கூட தூபமிடப்படும் முஸ்லிம் விரோத போக்கை கண்டிக்காது விட்டு, பௌத்தர்களின் ஆதரவை தங்கள் மீது ஈர்ப்பதற்கான வாய்ப்பாக அரசு இதனை பயன்படுத்த உத்தேசித்திருக்கலாம்.

அதுமட்டுமின்றி எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று, இலங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் உள்ளன என்றும், அளுத்கமை பிரச்சினைக்கு பெற்றோல் குண்டுகளை வைத்திருந்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்றும், முஸ்லிம்களே தங்களது கடைகளை தீயிட்டுக் கொண்டனர் என்றும், பொது பல சேனா மீது எக்குற்றமும் கிடையாது என்றும், புலிகளுக்கு அடுத்து முஸ்லிம் தீவிரவாதம் சிங்கள மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் தவ்ஹீத் ஜமாஅத் இருப்பதாகவும் அரசோடு ஒத்தூதும் ஜாதிக ஹெல உறுமயின் அமைச்சர் சம்பிக ரணவக்க மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் ஊடக அறிக்கைகள் விடுவதும், அரச தரப்பு அமைச்சர்கள் இதனை எதிர்க்காது அமைதி காப்பதும் கூட நடந்த இனக்கலவர சம்பவத்திற்குப் பின்புலமாக ஜாதிக ஹெல உறுமய உட்பட அரச தரப்பு சம்பந்தப் பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி நிற்பதை காண முடிகிறது.

அசம்பாவிதங்களை கண்டுகொள்ளாத அரசின் அலட்சியப் போக்கும், நடந்த உண்மைகளை இருட்டடிப்புச் செய்து குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முனையும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் அறிக்கைகளும், முஸ்லிம்களின் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆர்ப்பாட்ட தடைகளை விதித்து, மாற்று வழியில்  பொதுபலசேனா அமைப்பினருக்கு திட உறுதி பூஜா’, ‘தலைமைத்துவ நிகழ்ச்சி என்ற போர்வையில் தங்கள் இனவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்திருப்பதும் மியன்மாரின் மறுவடிவம் இலங்கையில் பிரதிபலிக்கப் போகிறது என்பதை மட்டும் அழுத்தமாய் அடையாளப் படுத்தி நிற்கிறது எனலாம்.

எது எப்படியிருப்பினும், முஸ்லிம்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணத்தில் உள்ளார்கள்.  அடக்கு முறைகளைக் கண்டு அடாவடித்தனத்தில் இறங்கிவிடாது, ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு எமது எதிர் நடவடிக்கைகளை கூர்மைப்படுத்த வேண்டியது காலத்தின் அவசியமாகும். தான் சார்ந்திருக்கும் கட்சி, இயக்கம், ஜமாஅத்துக்கள்  என்ற வட்டத்தைத் தாண்டியும், தனக்கு வரவிருக்கும் பதவி, பட்டம். அரசியல் அந்தஸ்து என்ற சுயநல சிந்தனையை கடந்தும் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டிய காலம் கணிந்துள்ளது எனலாம். தெளிவான மார்க்க நிலைப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்களாய், கொள்கையில் கிஞ்சிற்றும் சமரசம் செய்யாதவர்களாய், உம்மத்தின் உரிமைகளை உயிரைக் கொடுத்தேனும் காக்கின்ற உணர்வுகள் நிரம்பியவர்களாய், எந்நிலையிலும் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சக் கூடியவர்களாய் எப்போது எம் சமூகம் மாறுமோ அப்போது தான் எம்மை நோக்கி சூழ்ந்திருக்கும் எதிர்ப்புகளை எம்மால் வென்று வீர நடைபயில முடியும்.


அத்தோடு, ஹூதைபியாவையும், உஹது யுத்தத்தையும், பொறுமையையும் போர்வையாக பயன்படுத்தி உரிமைகள் பறிக்கப்படும் இத்தருணத்தில்  முஸ்லிம்களின் வீர உணர்வுகளை மலுங்கடித்து வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் தொடை நடுங்கிகளாக  இந்த உம்மத்தை மாற்றும் விதத்தில் தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதையிட்டும் ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட ஆன்மீக சார் அமைப்புகள் கரிசணை காட்ட வேண்டும். தனது உடைமைகளை, மானத்தை, உயிரை காக்கும் போராட்டத்தில் ஒருவன் கொல்லப் படின் அவனும் உயிர்த்தியாகியே என்ற நபிகளாரின் தன்மானம் காக்கும் தலைமைத்துவத்தை ஆன்மீக அமைப்புகள் இலங்கை முஸ்லிம்களுக்கு வாரி வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் ஒன்றுக்கு பல விடுத்தும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள். எதிர் கால சந்ததியின் எழுச்சியும் சுதந்திர வாழ்வும் நிகழ்கால மூத்தோரின் தியாகத்திலும், ர்ப்பணத்திலும் தான் தங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் ஆணி அறைந்தாற் போல் உள்ளத்தில் பதிவு செய்தல் வேண்டும். சிந்திக்குமா நம் சமூகம்?
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger