பொதுவாக பல இனத்தவர்களும் சேர்ந்து வாழும் நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை தான் “மத நல்லிணக்கம்” என்பது. அதிலும் குறிப்பாக பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மத்தியில் சிறுபான்மையாக வாழும் மக்கள் இந்த வார்த்தையை அதிகமதிகம் பயன்படுத்துவார்கள்.
இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள், சச்சரவுகள் வருகின்ற நேரத்தில் அதனை சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதினால் மத நல்லிணக்கம் என்ற தலைப்பிட்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண இனவாத சூழல் காரணமாக நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாத அல்லது இனவாத சிந்தனை கொண்ட ஒரு சிலரினால் பலவிதமான பிரச்சாரங்களும், பிரச்சினைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத நல்லிணக்கத்தின் பேரால்…….
இந்நிலையில் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெறாமல் இருக்கவும், ஏற்கனவே உருவாகிய பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அவாவிலும் சிலர் “மத நல்லிணக்கம்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கு முரனான பலவிதமான காரியங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வளவு காலமாக நமது சமுதாயம் செய்யாத அல்லது செய்யவும் நினைக்காத பல காரியங்களை தற்காலத்தில் சர்வ சாதாரணமாக மத நல்லிணக்கத்தின் பேரால் பலரும் செய்து வருவது கவலைக்குறிய விஷயமாகும்.
- பன்சலைகளை நிறுவிக் கொடுப்பது.
- பன்சலைகளுக்கு தாராளமாக உதவி ஒத்தாசைகள் செய்வது.
- பன்சலைகளுக்கு பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது.
- பௌத்த தேரர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவது.
- வெசாக், பொசன் போன்ற பௌத்த மக்கள் புனிதமாக கருதும் நாட்களில் உணவு (தன்சல்) கொடுப்பது.
- சிங்கள புத்தாண்டு விழாக்களை முஸ்லிம்களே முதன்மைப்பட்டு நடத்துதல்.
போன்ற காரியங்களை மத நல்லிணக்கம் என்று தற்காலத்தில் முன்னுரிமை கொடுத்து நமது சமுதாயம் செய்து வருகின்றதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கலேவெலயில் மத நல்லிணக்கம் என்ற பெயரில் முஸ்லிம்களும், பௌத்த மக்களும் சேர்ந்து பணம் சேகரித்து சிலை ஒன்றை ஸ்தாபித்து திறந்து வைத்த அவலமும் நடந்தேறியுள்ளது.
கலேவல, பட்டிவெல படிகனா புராதன ரஜமகா விகாரையின் விகாராதிபதியான மாவுனாவே சுமனதிஸ்ஸ தேரரின் வழிகாட்டலின் பேரில் பட்டிவெல ‘சக்தி மித்துரு’ நலன்புரி நிலையத்தினால் இந்த புத்தர் சிலை நிர்மான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த சிலையும் விகாராதிபதியான மாவுனாவே சுமனதிஸ்ஸ தேரரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா செலவில் இதனை நிர்மாணித்துள்ளார்கள்.
ஆக மொத்தத்தில் மத நல்லிணக்கத்திற்காக மார்க்கத்தையே விட்டுக் கொடுக்கும் சமுதாயமாக நமது இன்றைய இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயம் மாறிவிட்டது கவலைக்குறிய விஷயமே!
ஒரு நோயாளிக்கு உதவுவதும், வாழ வழியில்லாதவனுக்கு வாழ்வாதார உதவியளிப்பதும் இஸ்லாம் காட்டிய வழி முறைதான் அந்த அடிப்படையில் ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கினாலோ அல்லது நோயாளியாக இருப்பவருக்கு உதவி செய்தாலோ அது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக இதுவரைக்கும் இது தொடர்பாக சிந்தனை கூட இல்லாதவர்கள் மத நல்லிணக்கத்தின் பேரால் பன்சலைகளையும், சிலைகளையும் நிர்மாணித்துக் கொடுப்பதை எவ்விதத்தில் ஏற்றுக் கொள்ள முடியும்?
பன்சலையில் நோன்பு திறந்து, தொழுகை நடத்திய முஸ்லிம் பிரமுகர்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் முற்றிப் போயிருந்த நேரத்தில் சில முஸ்லிம் பிரமுகர்கள் பன்சலைகளில் நோன்பு திறந்தார்கள். இன்னும் சிலரோ பன்சலைகளில் தொழுகையே நடத்தினார்கள்.
என்னே மத நல்லிணக்கம்?
இப்படி இனவாதத்திலிருந்து முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் “மத நல்லிணக்கம்“ என்ற பெயரால் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு குப்ருக்கு செல்லும் இவர்களை யார் நரகத்தை விட்டும் பாதுகாப்பது?
இனவாதத்திலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றுவதை விட மிக மிக முக்கியமானது நரகத்திலிருந்து அனைவரையும் பாதுகாப்பதென்பது. ஆனால் நமது சமுதாயத் தலைவர்களுக்கு மார்க்கத்தை விட மத நல்லிணக்கம் தான் பெரிதாய்ப் போய்விட்டது.
அது போல் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பண்டாரகமயை சேர்ந்த பௌத்தர்கள், அட்டுலுகமயைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இராப்போசன விருந்தளித்திருக்கின்றார்கள். இதில் கலந்து கொண்ட அட்டுலுகம முஸ்லிம் பிரதிநிதிகள் குத்து விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்த செய்தி இந்த வார விடிவெள்ளிப் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
யார் இன்னொரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடக்கின்றார்களோ அவர்கள் அக்கூட்டத்தையே சார்ந்தவர்கள் என்பது நபிமொழி.
இன்னொரு சமுதாயத்தவர்களின் மத கிரியைகளை பின்பற்றுவது நம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்று நபியவர்கள் கூறியிருக்கும் போது நமது சமுதாய பிரமுகர்கள் என்போர் தாராளமாக அவர்களுடன் சேர்ந்து நமது மார்கத்திற்கு முரனான பல செயல்பாடுகளில் பங்கெடுப்பதைக் காண்கின்றோம்.
மத நல்லிணக்கம் என்பது மார்க்கத்தை விட்டுக் கொடுப்பதல்ல!
உண்மையில் மத நல்லிணக்கம் என்பது நாம் ஏற்றுக் கொண்டுள்ள தூய இஸ்லாமிய மார்க்கத்தை விட்டுக் கொடுத்துவிட்டு மற்ற மத சம்பிரதாயங்களை நமது வாழ்வில் ஏற்று நடப்பதல்ல. நமது மார்க்கத்தை நாம் உறுதியாக பின்பற்றுவதுடன் மாற்று மத அன்பர்களுக்கும் நமது மார்க்கத்தை தூய முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தை உண்மையில் தூய என்னத்துடன் ஏற்றுக் கொண்டவர்கள் என்றால் அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கின்ற கூட்டத்தினராகவே இருக்க வேண்டுமே தவிர தீமைக்கு துணை செல்பவர்களாக இருக்கக் கூடாது என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் தெளிவாகவே குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும்சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3 : 104)
இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் போது எவ்வித விட்டுக் கொடுப்பும் காட்டாமல் தெளிவாகவே எடுத்துரைக்க வேண்டும். அது போல் இணை வைக்கின்ற காரியங்களில் ஈடுபடாமல், இணை வைப்பவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று இறைவன் தெளிவாகவே திருமறைக் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக!இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15 : 94)
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் போது நபியை எதிர்த்த கூட்டத்தினர் ஒரு கட்டத்தில் நபியுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய முன்வந்தார்கள். அந்த ஒப்பந்தத்தில் சில நாட்கள் அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதாகவும், சில நாட்கள் சிலைகளை முஸ்லிம்கள் வணங்குங்கள் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
இது தொடர்பாக இறைவன் குர்ஆன் வசனத்தை இறக்கி வைத்து அவர்களின் கோரிக்கையை மறுத்ததுடன், எக்காரணம் கொண்டும் அவர்களின் மார்க்கத்தை முஸ்லிம்கள் உள்வாங்கக் கூடாது என்பதை தெளிவாகவே அறிவித்தான்.
(ஏக இறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் : 109 : 1,2,3,4,5,6)
மேற்கண்ட வசனத்தின் மூலம் எக்காரணம் கொண்டும் “மத நல்லிணக்கம்” என்ற பெயரில் நமது மார்கத்தை விட்டுக் கொடுக்கும் காரியத்தில் ஈடுபடக் கூடாது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
அன்பான அழைப்பு.
அன்பின் சகோதரர்களே! சமுதாய செயல்பாட்டாளர்களே!
முஸ்லிம்களாக வாழுகின்ற நாம் எக்காரணம் கொண்டும் நமது ஏகத்துவக் கொள்கையை விட்டும் வழி தவறிவிடக் கூடாது. மரணிக்கின்ற வரைக்கும் இத்தூய கொள்கையில் உறுதியாக இருந்து மரணிக்க வேண்டும். “மத நல்லிணக்கம்” என்ற பெயரில் நமது கொள்கைகளை விட்டுக்கொடுத்து, ஈமானை இழந்து, நாளை மறுமையிலே நாம் நஷ்டமடைந்து விடக் கூடாது.
ஆகையினால், உண்மை இஸ்லாத்தை பின்பற்றி தூய முஸ்லிம்களாக மரணிக்க வல்ல இறைவன் அருள் புரிவானாக!
Post a Comment