களம் உண்டு! காவலர்கள் எங்கே?

நவம்பர் மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து

எம்.டீ.எம்.பர்ஸான்



அண்மைக் காலமாக, அகில மக்கள் அனைவருக்கும் முழுமைப் படுத்தப்பட்ட அருட்கொடையாய் அல்லாஹ்வினால் அருளப்பட்ட அல்குர்ஆன் எனும் இறைவேதம் இஸ்லாத்தின் எதிரிகளினால் காட்டமாக களங்கப்படுத்தப்பட்டு வரும் நிகழ்வுகளை எங்கும் பரவலாக காணமுடிகிறது. மேற்குலக காழ்ப்புணர்வு கழிசடைகளினால் தூவப்பட்ட இந்நச்சிப் பிரசாரத்திற்கான விதை இன்று ஒட்டு மொத்த உலகிலும் ஆழவிருட்சமாய் வியாபித்தவண்ணம் உள்ளது என்பதே யதார்த்தம்.

இத்தப்பான விமர்சனத்தின் தாக்கம் இன்று இலங்கை மண்ணிலும் புறையோடியவண்ணம் உள்ளமை வௌளிடை மலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இதிகாசத்தின் சொந்தக் காரர்களாய் பெருமைப் பட்டுக் கொள்ளும் இலங்கை முஸ்லிம்கள் இது கால வரை இஸ்லாத்தின் இனிய செய்திகளை எம்மை அண்டி வாழும் அந்நியச்சமுதாய அன்பர்களுக்கு எடுத்துரைத்தோமா என்றால் இல்லை என்ற பதில் எம் இதயத்தை சுள்ளென்று தைப்பதை அனைவரும் உணரலாம்.

கொடுக்கல் வாங்களில் ஈடபட்டிருக்கிறோம், பெருநாளின் போது இனிப்பு வழங்கி அகமகிழ்ந்திருக்கிறோம், நல்லது கெட்டதுகளில் கலந்து சங்கமித்திருக்கிறோம், அரசியல் அபிலாஷைகளுக்காக இரு கரம் கோர்த்திருக்கிறோம். இவ்வாறு உலக விடயங்களில் பரஸ்பரம் உதவிக்கரம் நீட்டி ஒத்தாசை புரிந்த நாம் மறுமை வெற்றிக்கு வழி வகுக்கும் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்ற இஸ்லாத்தின் தாரக மந்திரத்தை மாற்றுமத அன்பர்களின் அகங்களில் வேரூண்டச் செய்வதற்கான எத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறோமா? என்றால் அது கேள்விக் குறியாய் வந்து நிற்பதை காணலாம்.

அண்ட சராசரங்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளையும் படைத்துப் பரிபாலிக்கும் கடவுள் ஒருவன் மட்டுமே! அவனுக்கு இணையில்லை. துணையில்லை. குடும்பமில்லை. பெற்றோர் இல்லை. பிள்ளைகளுமில்லை. உற்றார் இல்லை. உறவினர்களும் இல்லை. மல ஜலம் என்ற அழுக்குகளை வெளியேற்றும் அவஸ்தை அவனுக்கு இல்லை. நோய், துன்பம், களைப்பு, அசதி, மறதி, இயலாமை, முதுமை, பசி, தாகம் போன்ற எந்தவொரு பலவீனத்துக்கும் அப்பாற்பட்டவனே கடவுளாக இருக்க முடியும். இத்தகுதிகள் எவனிடம் மொத்தமாய் இருக்கிறதோ அவனே கடவுளுக்குத் தகுதிவாய்ந்தவன். வழிபாட்டுக்கு ஏற்றவன். கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு உகந்தவன். இத்தனை தகுதிக்கும் உரிய கடவுள் ஒருவனாகத் தான் இருக்க முடியும். அவன் தான் அல்லாஹ். அவனை அன்றி மக்களால் வணங்கப் படும் அனைத்தும் அல்லாஹ் படைத்த படைப்புகளும் அவனது அடிமைகளும் மட்டுமே. படைக்கப்பட்டவை ஒருபோதும் படைப்பாளனாக முடியாது. எனவே, அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. இல்லவேயில்லை! என்ற இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை எம் மாற்றுமத அன்பர்களுக்கு எம்மில் எத்தனை பேர் எத்திவைத்துள்ளோம்? குர்ஆன் சொல்வதை கொஞ்சம் கருத்தூண்டிப் படியுங்கள்:

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? (41:33)
படைப்பாளன் அல்லாஹ்வை இந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும், அவனது சத்திய கொள்கையின் பால் அவர்களை அழைப்பதும் ஒருவன் தன்னை முஸ்லிம் என்று அழைப்பதற்கான தகுதி என்று அல்லாஹ் இங்கு சொல்லவில்லையா? முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்த விரும்பும் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய அல்லாஹ்வை அறிமுகப்படுத்தும் அடிப்படையான பணி இன்று களத்திலே கேட்பார் பார்ப்பாரின்றி அனாதையாகக் கிடக்கிறது.

இனவாதிகளும், எதிரிகளும் இன்று படைப்பாளன் அல்லாஹ்வையும் அவனது வழிகாட்டுதல் குர்ஆனையும் குறித்து கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். இவர்களது விமர்சனங்களுக்கு ஆட்பட்ட பெரும்பான்மை இன மக்கள் இஸ்லாத்தை குறித்தும் அல்குர்ஆனை குறித்தும் அதன் சொந்தக் காரன் அல்லாஹ்வை குறித்தும் ஆவலாக ஆய்வு செய்ய ஆரம்பித்து விட்டனர். அல்லாஹ்வை அறிமுகப்படுத்துவதற்கான அழகிய வழியை இனவாதிகளே தற்போது அகழத்திறந்துள்ளனர். அல்லாஹ் என்றால் யார்? அல்குர்ஆன் என்ன சொல்கிறது? ஜிஹாத் என்றால் என்ன? ஹிஜாப் என்றால் என்ன? ரீஆ சட்டம் என்றால் என்ன? இஸ்லாமிய வங்கி முறைமை எது? இது போன்ற கேள்விகள் பலரது நாவிலிருந்தும் வெளிப்படுவதை சாதாரணமாய் காண முடிகிறது.

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை ஆணித்தரமாய் நிறுவுவதற்கான களம் அற்புதமாய் அமைந்தள்ளது. ஆனால், இக்களத்தைப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களிடம் களப்பணி ஆற்றக் கூடிய இஸ்லாத்தின் காவலர்களை காண்பது அரிதாக உள்ளது. அழகிய உபதேசங்கள், அறிவார்ந்த பதில்கள், ஆய்வு ரீதியான ஆக்கங்கள், தெருமுனை ரீதியான குர்ஆன் இலவச விநியோகங்கள், சிந்தனையைத் தூண்டும் திட்டமிட்ட தனிநபர் சந்திப்புக்கள், கருக்கொண்ட ஐயங்களை களைவதற்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகள், ரீ, ஜிஹாத் குறித்த உள்ளரங்கு விளக்கக் கூட்டங்கள்  என இஸ்லாத்தின் இனிமையை எடுத்துச் சொல்லும் வழிகள் ஏராளம் எம் விழிகளுக்கு முன் வியாபித்து உள்ளன. களம் உண்டு. அதைப் பயன்படுத்தி களப்பணியாற்றும் இஸ்லாத்தின் காலர்கள் எங்கே? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger