சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி உருவாக்கத் திட்டம்


ஐ.தே.க.வின் மாற்றுக் குழுவுடன் இணைந்து தேர்தலில் போட்டி -சரத் / மரணதண்டனையே சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை காப்பாற்ற வழி

சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி உருவாக்கத் திட்டம்-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளனர்.
முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் இந்தப் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்றும் மேலும் தெரிய வருகிறது.
ஐ.தே.க.வின் மாற்றுக் குழுவுடன் இணைந்து தேர்தலில் போட்டி -சரத் பொன்சேகா- 
ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழுவுடன் கூட்டமைப்பாக இணைந்து எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல – உடபொல சபுமல் பண்டார தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆராதனைகளில் ஐனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா கலந்து கெண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மரணதண்டனையே சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை காப்பாற்ற வழி-
பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளை அவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் 24 மணி நேரமும் தங்கள் நேரடிப் பாதுகாப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இழக்காகி வாழ்நாள் பூராவும் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க பெற்றோருக்கு அபாய அறிவித்தல் விடுத்துள்ளார்.
இன்று தொலைக்காட்சிகள், கையடக்கத் தொலைபேசிகள் ஊடாகவும் அனைவருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய ஆபாச வீடியோ காட்சிகளை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சமூகத்தில் தற்போது ஒழுக்கம் சீர்குலைந்து போயுள்ளது. 10 முதல் 12 வயதான சிறுவர்கள் கூட இந்த தொலைக்காட்சி படங்களைப் பார்த்து தங்கள் அயல்வீட்டு தங்கைமாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் அளவுக்கு இன்று நிலைமை மோசடைந்துள்ளது என்றும் திருமதி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்போது நடைமுறையில் உள்ள சட்டம் வலுவில்லாமல் இருப்பதனால் தான் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றது. தற்போதைய சட்டத்தின்படி பாலியல் குற்றமிழைத்த ஒருவர் இரண்டு வாரங்களில் பிணையில் செல்வதற்கு சட்டம் இடமளிக்கிறது.
சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றமிழைத்தவர்களை கைது செய்து அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலதாமதப்படுத்துவதை விட நேரடியாக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு தயவு தாட்சண்யமும் இன்றி மரணதண்டனை விதிக்க வேண்டும்.
அதன் மூலமே எமது நாட்டின் சிறுவர் சமுதாயத்தை நாம் பாலியல் ரீதியில் காமுகர்களிடம் இருந்து காப்பாற்ற முடியும். தற்போது கவனிப்பாரற்ற நிலையில் உள்ள சிறு பிள்ளைகளை பிடித்துச் செல்லும் காமுகர்களின் கொட்டம் அதிகரித்திருக்கிறது என்றும் அவர்களில் இந்தப் பிள்ளைகளை ஏற்றிச் சென்று அவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த பின்னர் பாதைகளில் இறக்கிவிட்டு செல்கிறார்கள் என்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கொடியவர்களிடம் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger