சவூதி அரேபியாவில் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி / அம்பாறை மாவட்ட செயலகத்தின் தனி அலுவலகம் கோரல்


 

saudi.vellamசவூதி அரேபியாவில் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி
சவூதி அரேபியாவில் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் 13 பேர் பலியானதாகவும், நான்கு பேரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் கார்கள் தத்தளிப்பதையும், மக்கள் மரங்களின் அடியில் ஒதுங்கியிருப்பதையும், தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மக்கள் வெட்டவெளிகளில் ஒதுங்கவேண்டாம் என்று மக்கள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைநகர் ரியாத், பாகா, ஹெயில் ஆகிய இடங்களில் மக்கள் மழையில் பலியாகி உள்ளனர். ஞாயிறு அன்று சவுதியின் உள்துறை அமைச்சர், இளவரசர் முகமது பின் நயெப், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறு கூறியுள்ளார். நிலைமையை அவர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதுபோல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஜெட்டாவில் 123 பேர் இறந்தனர். பின்னர், 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் பலியானார்கள். இதுபோன்ற அவசர நிலைமைகளுக்கு சவூதி அரசு தயார் நிலைமையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
அம்பாறை மாவட்ட செயலகத்தின் தனி அலுவலகம் கோரல்-
முஸ்லிம் மற்றும் தமிழ் பகுதிகளின் நிர்வாக தேவைகளை நிறைவேற்றும் வகையில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் தனி அலுவலகம் ஒன்று கல்முனையில் வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளி கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை கைப்பற்ற ஆதரவளித்த போது இந்த கோரிக்கையை தனது கட்சி முன்வைத்ததாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். கல்முனை அலுவலகத்திற்கு பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதால் தனது கட்சிக்கு வாக்களித்த மக்கள் வெறுப்படைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எமக்கு மக்களின் முன் செல்லசங்கடமாக உள்ளது. அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. நாம் அவர்களிடமிருந்து ஆணையை கோரினோம். அவர்கள் எமக்கு ஆணையை வழங்கினர்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உறுதியளித்த அரசாங்கத்துடன் சேர்ந்தோம். ஆயினும், அரசாங்கம் எமக்கு அளித்த வாக்குறுதிகளை அலட்சியம் செய்து வருகின்றதுடன் இங்கு கடுமையான நிலப்பிரச்சினை உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger