மாத்தளையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் காந்தி மண்டபத்தின் திறப்பு விழாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு முன்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் காந்தி மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கவே இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளையில் காந்தி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் அதனை நிர்மாணித்து முடிப்பதற்கு இந்தியா எதிர்பார்க்கின்றது.
அந்தவகையில் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதியளவில் காந்தி மண்டபத்தை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அதற்கு பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கலாம் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இந்நிலையில் அதற்கு முன்னர் இலங்கையின் நிலைமைகளை ஆராய இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை விஜயம் செய்யவுள்ளார் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருந்தார்.
இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
Post a Comment