அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு (முஸ்லிம் பிரிவு ) பிரதேச செயலாளராக சிங்களவரொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த பிரதேச முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.
கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை, அது கல்முனை தொகுதியிலுள்ள அனைத்து முஸ்லிம் கிராமங்களையும் நிலத் தொடர்பற்ற முறையில் இணைத்து உருவான பிரதேசத்தின் சிவில் நிர்வாக மையமாகும்.
அந்தப் பிரதேசத்தில் 99 சத வீதம் முஸ்லிம்கள் வாழ்வதால் இந்தப் பிரதேச நிர்வாக மையம் முஸ்லிம் பிரதேசம் என்று அழைக்கப்படுகின்றது.
தமிழர்களையும் முஸ்லிம்களையும் கொண்ட கல்முனை தொகுதியில் நிலத் தொடர்பற்ற முறையில் தமிழ் கிராமங்களை கொண்டதாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உள்ள போதிலும் முழுமையான அதிகாரத்தை இன்னும் அது பெறவில்லை.
தமது பிரதேச செயலக வரலாற்றில் முஸ்லிம் அல்லாத ஒருவர் பிரதேச செயலகத்தின் தலைமை அதிகாரி பதவியான பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என பிரதேச முஸ்லிம்கள் கூறுகின்றார்கள்.
மஹா ஒயா பிரதிச் செயலாளராக பணியாற்றும் மொகான் விக்கிரம ஆராய்ச்சி என்பவரே கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான பிரதேச செயலாளராக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளாகிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எதிர்ப்பு நிலப்பாட்டையே கொண்டுள்ளது.
இந் நியமனத்திற்கான காரணத்தை தங்களால் அறிய முடியாதிருப்பதாக அக் கட்சியின் செயலாளர் நாயகம் எம். ரி. ஹசன் அலி கூறுகின்றார்.
இது தொடர்பில் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரிரு நாட்களில் பொது நிர்வாகம் மற்றும் உள் நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவை சந்தித்து பேசவிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
Post a Comment