வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே, எமது குறிக்கோள்: சி.வி. விக்னேஸ்வரன்

 

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றுக்காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்த முதலமைச்சர், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஒட்டுசுட்டான்-வாவெட்டி, தட்டையான், கொக்குதொடுவாய் – கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் – புளியமுனை, நாயாறு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை வடமாகாண முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது பொதுமகன் ஒருவரினால் முதலமைச்சரிடம், வடக்கில் மக்களின் பிரச்சினைகள் பல உள்ளபோதும் இராணுவத்தினரை மட்டும் வெளியேற்ற வேண்டும் என ஏன் கூறி வருகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், வடக்கில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளதால் தான் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாமல் இழுபட்டு வருகின்றது.
இன்று நீங்கள் சுட்டிக்காட்டும் நில ஆக்கிரமிப்பு, மீன்பிடித் தொழில் செய்யமுடியாத தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் போன்ற பிரச்சினைகளுக்கு பின்னால் இராணுவத்தினரின் இருப்பே மூலகாரணமாகவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இன்று பாரிய பிரச்சினையாக இராணுவ ஆக்கிரமிப்பே உள்ளது. மக்கள் மீள்குடியமர முடியாமலும் அவர்கள் தமது சொந்த நிலங்களில் தொழில்களைச் செய்ய முடியாமலும் இருக்கின்றனர். இராணுவத்தினர் மக்கள் குடியிருந்த நிலங்களுடன் தொழில்செய்யக் கூடிய வளமான நிலங்களையும் அபகரித்துள்ளனர்.
எனவேதான் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு முதற்படியாக இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறுகின்றேன் என்றார்.
இச் சந்திப்பின்போது வடமாகாண சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், உறுப்பினர்களான வைத்தியக் கலாநிதி சிவமோகன், ரவிகரன், சயந்தன், கனகசுந்தர சுவாமி, சிவயோகம், திருமதி. மேரி கமலா குணசீலன், அஸ்மின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக இன்று காலை ஒட்டுசுட்டான் வாவெட்டி, தட்டையன் மலைப்பகுதிகளுக்கு விஜயம் செய்த முதமைச்சர் அங்குமேற்கொள்ளப்பட்டு வரும் மலையை உடைத்து கருங்கல் எடுக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் நிலைமைகளையும் அவர்கள் எதிர்நோக்கி வரும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளையும் நேரில் பார்வையிட்டார்.
மாலை புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதலமைச்சர், புதுக்குடியிருப்பு பரந்தன்வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கான புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger