எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை மாறவேண்டும். நான் ஜனாதிபதியாக இருந்தால் முஸ்லிம் நாடுகளுடன் சேர மாட்டேன். மேலைத்தேய நாடுகளுடன் தான் தொடர்புகளைப் பேணுவேன். இன்னும் 15 வருடங்களில் இந்த நாட்டுக்கு ஏற்படப் போகும் பயங்கரத்தை வைத்தே இதனை நான் சொல்கிறேன் என பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாராந்த பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டுக்கு மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள் எழும்போதெல்லாம், முஸ்லிம் நாடுகளே எம்முடன் இருந்து எமக்கு உதவின. நீங்கள் எடுக்கும் செயற்பாட்டினால், அவர்களது ஆதரவும் இல்லாமல்போய் நாம் இன்னும் ஒதுக்கப்படும் அல்லவா என அவரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டிலுள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் நாட்டின் மீது அன்பு இல்லை. அனைவருக்கும் தேவை அதிகாரம் மட்டுமே. முஸ்லிம் மக்களுக்கும் ஒரு தலைவர் இல்லை. இதனால், தான் ஒவ்வொரு பிரிவிலும் (நிகாயாவிலும்) உள்ள அடிப்படைவாதிகள் சொல்லும் விதமாக ஒவ்வொருவரும் ஆட்டம் போடுகிறார்கள்.
எமது செயற்பாடுகளை சாதாரணமாக நடுநிலையாக நின்று பார்க்கும் ஒரு பிரிவினரும் முஸ்லிம்களுள் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வந்து கருத்துத் தெரிவிக்க அச்சத்தில் உள்ளனர். எங்களுக்கு அவர்களிடமிருந்து செய்திகள் வருகின்றன. சட்டத்தை சரியாக செயற்படுத்திக் கொள்ள முடியாதுள்ள ஒரு நாட்டில் நாம் கொடுக்கும் தகவல்களை சரியாக பயன்படுத்த முடியாதுள்ளது. இறுதியில் பிரச்சினை வந்தவுடன் எங்கள் மீது போடுகிறார்கள். இது எவ்வாறிருப்பினும், இந்த நாட்லுள்ள சகல பௌத்தர்களையும் ஓர் அணியில் ஒன்று திரட்டி எமது வேலைக்கான சக்தியை மிக விரைவில் பெற்றுக் கொள்வோம்.
ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் பௌத்தர்கள். அவர்கள், பௌத்தம் சொல்வது என்னவென்று விளங்கிக் கொள்ள முடியாது போனாலும் பௌத்த கொள்கைக்காக உயிரைவிடவும் மனப் பக்குவம் உள்ளவர்கள். இந்த துணிவுதான் இந்த நாட்டில் 2300 வருடங்கள் பௌத்தம் வாழ்வதற்குக் காரணமாகியது.
உங்களுடைய கட்சிக்குள் தலைமைத்துவப் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறதே என வினவியதற்கு,
எமது கட்சிக்குள் தலைமைத்துவப் பிரச்சினை இல்லை. எமது தலைவர் கௌதம புத்தர்தான் எனவும் தேரர் மேலும் பதிலளித்துள்ளார்.
Post a Comment