பலாங்கொடை, ஜெய்லானி முஹைதீன் பள்ளிவாசலை
உடைப்பது தொடர்பில் மறுபரீசிலனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கோரிக்கை தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத்
புஷ்பகுமாரவிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெய்லானி முஹைதீன் பள்ளிவாசலை உடைக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது என தொல்பொருள் திணைக்களம் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு
அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம் தூதுக்குழுவொன்றுக்கும் தேசிய
மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவிற்கும் இடையிலான சந்திப்பு
பத்தரமுல்லையிலுள்ள தேசிய மரபுரிமைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி, மத்திய
மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, குறித்த பள்ளிவாசலின் தலைவி ரொசானா
அபுசாலி, முஸ்லிம் கவுன்ஸின் முக்கியஸ்தர்களாக என்.எம்.அமீன் மற்றும்
ஹில்மி அஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து முஸ்லிம் கவுன்ஸில் ஒப்
ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம். அமீன் கருத்து
தெரிவிக்கையில்,
“ஜெய்லானி முஹைதீன் பள்ளிவாசலுக்கு அருகில் மிகப் பழமை
வாய்ந்த சடலமொன்று அண்மையில் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சடலம்
மீட்கப்பட்ட இடத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள தொல்பொருள் திணைக்களம்
தீர்மானித்துள்ளது.
இதனால் குறித்த பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் எனவும்
தொல்பொருள் திணைக்களம் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்தது. அத்துடன் குறித்த
ஆராய்ச்சி பணிகள் இடம்பெறும் வரை அப்பிரதேசத்தில் வெளியார் அனுமதிக்கப்படமாட்டர்
என்ற விளம்பரப் பலகை காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த விடயம் குறித்து முஸ்லிம் தூதுக்குழுவொன்று தேசிய
மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவை சந்தித்து தெளிவுபடுத்தினோம். அத்துடன்
ஜெய்லானி முஹைதீன் பள்ளிவாசலை உடைப்பது தொடர்பில் மறுபரீசிலனை மேற்கொள்ளுமாறு
கோரிக்கை விடுத்தோம். இது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான
முடிவொன்றை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்” என்றார்.
Post a Comment