ஈராக்கின் உள்நாட்டு யுத்தத்தில் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி வெற்றிகளை குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தற்போது மேலை நாட்டு ராஜதந்திரிகளை மிரள வைத்துள்ளது. காரணம், இவர்களது இறுதி இலக்கு ஈராக் மட்டுமல்ல என்பது, தற்போது மேலை நாடுகளுக்கு புரிய தொடங்கியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சிரியாவிலும் சில நகரங்களை கைப்பற்றி, ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிந்து வருகின்றது என்றாலும், சிரியா ராணுவத்தை எதிர்த்து யுத்தம் புரிவது இவர்கள் மட்டுமல்ல. அங்கு பெரிதும், சிறிதுமாக பல இயக்கங்கள் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிகின்றன.
இதனால், சிரியாவை இவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால், சிரியா ராணுவத்தையும் தோற்கடிக்க வேண்டும். அத்துடன் போட்டி இயக்கங்களையும் தோற்கடிக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமானது அல்ல.
இதனால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சிரியாவை கைப்பற்றுவது என்பது, தற்போதைக்கு நடக்க முடியாத காரியம்.
எனவேதான், அமெரிக்கா உட்பட மேலை நாடுகள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக்குக்கு மட்டுமே அச்சுறுத்தல் என இதுவரை நினைத்திருந்தனர். ஈராக் அருகே அமெரிக்கா தமது ஆயுதக் கப்பல்களையும் கொண்டுவந்து நிறுத்திவிட்டு ‘உரிய நேரத்துக்காக’ காத்திருக்கிறது.
இதுதான் கடந்த செவ்வாய்க்கிழமைக்கு முன்பிருந்த நிலைமை.
நேற்று (புதன்கிழமை) நிலைமை, தலைகீழாக மாறியிருக்கிறது. அதுதான், மேலை நாட்டு ராஜதந்திரிகளை மிரள வைத்துள்ளது.அது என்ன திருப்பம்? ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கேயும், மேற்கேயும் உள்ள நகரங்களை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், அடுத்து பாக்தாத் நோக்கி வருவார்கள் என்பதே பலரது எதிர்பார்ப்புமாக இருந்தது.
பாக்தாத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கைப்பற்றினால், தமது தாக்குதலை தொடுக்க காரணம் கிடைத்துவிடும் என அமெரிக்காவும் காத்திருந்தது. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பாக்தாத் நோக்கி வரவில்லை. மாறாக, நேற்று மேற்கு, மற்றும் தெற்கு நோக்கி தமது படைகளை நகர்த்த தொடங்கியது. அந்த பாதையில் உள்ள இலகு இலக்குகளை (softer targets), அடித்துக்கொண்டு முன்னேறுகின்றன அவர்களது படைப்பிரிவுகள்.
இது மிகவும் அபாயகரமான படை நகர்வு. காரணம், இந்த நகர்வு சொல்வது என்னவென்றால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக்கை மட்டும் குறிவைக்கவில்லை. அத்துடன், ஜோர்தானையும், சவுதி அரேபியாவையும் குறி வைத்துள்ளார்கள்.
சுருக்கமாக சொன்னால், ஐ.எஸ்.ஐ.எஸ். வெறும் தீவிரவாத இயக்கம் என்பதைவிட, சம்பிரதாய ராணுவ நகர்வுகளை நன்கு அறிந்த இயக்கம் என்பதை காட்டி, மிரள வைக்கிறது.
இப்போது, அமெரிக்காவும் விழித்துக் கொண்டது. ஜோர்தான், சவுதி ஆகிய நாடுகளும் தத்தமது ராணுவங்களை அலர்ட் செய்துள்ளன. அதற்கிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஜோர்த்தான், மற்றும் சவுதி அரேபிய எல்லைகளுக்கு அருகே நேற்று (புதன் கிழமை) போய் சேர்ந்துவிட்டது.
நேற்று (புதன்கிழமை) இந்த தீவிரவாத இயக்கம் தமது ஆதரவு இணையதளத்தில் புதிய பகுதி ஒன்றை தொடங்கியது.
அதன் பெயர்- ‘சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.’
இது சும்மா பரபரப்புக்காக இணைக்கப்பட்ட வாசகமல்ல. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தென்மேற்கு திசையில் நகர்ந்து, சவுதியின் எல்லையருகே வந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக் உள்ளே பல நகரங்களை கைப்பற்றுகிறது. சிரியாவுக்கு உள்ளேயும் யுத்தம் புரிகிறது. ஜோர்தானிய எல்லையிலும் நிற்கிறது. போதும் போதாதற்கு, சவுதி அரேபியா மீதும் கண் வைக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
தென்மேற்கே நகர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்க படைப்பிரிவுகள், ருத்பா என்ற நகரை நேற்று கைப்பற்றின. இந்த நகரம், சவுதி எல்லையில் இருந்து வெறும் 70 மைல் தொலைவில் உள்ளது.
அதற்கிடையே நாம் முன்பு குறிப்பிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு இணையதளம், ஈராக், ஜோர்தான் மற்றும் சவுதியை உள்ளடக்கிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த மூன்று நாடுகளும் ஒரே நாடாக, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆட்சியின் கீழ் வந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதளம் சொல்வதை பெரிதாக எடுக்க தேவையில்லைதான், ஆனால், ருத்பா பகுதியில் இருந்து சவுதி எல்லை வரையிலான நிலப் பகுதியை கண்காணிக்க தமது உளவு சாட்டலைட்டுகளை அமெரிக்கா திருப்பி விட்டுள்ளது என கூறப்படுகிறது. அது தவிர, இந்த பகுதியில் இஸ்ரேலிய உளவு விமானங்களும் பறக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இஸ்ரேலிய ராணுவ ஆய்வாளர் ஒருவர் ஜெருசலேம் போஸ்ட்டில் இன்று எழுதியுள்ள கட்டுரையில், “ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ருத்பா நகரில் இருந்து சவுதி எல்லை வரை நகர்வது ஒன்றும் ‘பிக்னிக்’ போல இருக்காது. அந்த திசையில் அவர்கள் நகர்ந்தால், ‘அறிவிக்கப்படாத’ அமெரிக்க உளவு விமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடலாம்” என எழுதியுள்ளார்.
ஒரு வகையில் சொன்னால், அவர் எழுதியது பலிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு!
Post a Comment