ஹனோய் கால்பந்து குழுவின் தலைவராக இருந்த நிகுயென் டியுக் கியன் வியட்நாம் கால்பந்து அமைப்பில் நடைபெற்ற ஊழலை விமர்சித்ததன் மூலம் பொதுவாழ்வில் முக்கியத்துவம் பெற்றார். இந்த முன்னேற்றம் அவரை உலகளாவிய வணிக வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியை பங்குதாரராகக் கொண்ட ஆசிய வணிக வங்கிக்கு அதிபராக உயர்த்தியது. ஆனால் நிதி மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத வர்த்தகம் போன்ற குற்றங்களுடன் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டபோது இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆசிய வங்கியின் பங்குகளும் சரிவை சந்தித்தன.
இவருடன் சேர்த்து இன்னும் ஏழு உயர் வங்கி அதிகாரிகளும் விசாரணையை எதிர்கொண்டனர். இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதில் கியனுக்கு 30 வருட சிறைத்தண்டனையும், அவர்கள் நாட்டு பணமதிப்பில் 75 பில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களில் மூத்த அதிகாரியும், வங்கி இயக்குனராகவும் செயல்பட்டு வந்த லை சுவான் ஹைக்கு எட்டு வருடமும், பிற அதிகாரிகளுக்கு இரண்டு முதல் எட்டு வருடம் வரையிலும் சிறைவாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறிக்கையின்படி சட்டவிரோதமான குறுக்கு வங்கி வைப்புகள் மற்றும் முதலீடுகள் மூலம் கியன் 67 மில்லியனுக்கும் மேலான நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே வங்கி ஊழியர் ஒருவர் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் காணப்படும் உட்கட்சிப்பூசல்கள் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டார் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வியட்நாமின் பிரதமர் நிகுயென் டன் டங்கின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் கியன் பிரதமரின் மகளுடனான வர்த்தகத் தொடர்பின் விளைவாக இணையதளச் செய்திகளில் தீவிர விமர்சனத்திற்கு ஆளானார் என்றும் தகவலகள் தெரிவித்துள்ளன
Post a Comment