கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் படை வீரர்கள் 9 பேர் உள்பட 24 பேர் பலியாயினர். இதனால், கராச்சியில் பதற்றம் நிலவுகிறது.பாகிஸ்தானில் உள்ள வர்த்தக நகரங்களில் ஒன்று கராச்சி. இங்கு அமைந்திருக்கும் ஜின்னா சர்வதேச விமான நிலையம் மிகவும் பிரபலமானது.
இங்கு தினசரி ஏராளமான விமானங்கள் மூலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.20 மணிக்கு விமான நிலையத்தின் விஐபி கேட் மற்றும் சரக்குகள் செல்லும் வழியாக சுமார் 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உடலில் வெடிகுண்டு நிரப்பிய பைகள், ராக்கெட் லாஞ்சர்கள், ஏகே 47 ரக தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர்.
அவர்கள் உள்ளே நுழையும் போதே வாசலில் இருந்த காவலர்களை கண்மூடித்தனமாக சுட்டு சாய்த்தனர். இதனையடுத்து விமான நிலையம் முழுவதும் பதற்றம் பரவியது. தீவிரவாதிகள் குண்டுகளை வீசியபடியும், துப்பாக்கியால் சுட்டபடியும் விமானத்தின் ரன்வேயை நோக்கி முன்னேறினர்.
அங்கு நின்றிருந்த 2 ஆயில் டேங்கர்களை வெடிவைத்து தகர்த்தனர். உடனடியாக, பாதுகாப்பு படை வீரர்கள் உஷாராகி தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்த துப்பாக்கிச் சண்டை இன்று காலை 8 மணி வரை நீடித்தது. அத்துடன் விமானநிலையம் மாமூல் நிலைக்கு திரும்பியது. எனினும், மீண்டும் 9 மணியளவில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த பயங்கர மோதலில் தீவிரவாதிகள் சுட்டதில் விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் வரை கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். காலை 11 மணிவரை கிடைத்த தகவலின்படி, மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. விமான நிலையத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் விமான நிலையத்தை சுற்றிலும் அவசர கால எச்சரிக்கையும் விடப்பட்டது. அருகில் இருந்த மிலிர் கண்டோன்ட்மென்ட் ராணுவ தளத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கிருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
கராச்சி விமான நிலையம் எப்போதும் பிசியான விமான நிலையம் என்பதால், அதிகாலை அங்கு வரவேண்டிய அனைத்து விமானங்களும் குவெட்டா மற்றும் நவாப்ஷா ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதற்கிடையில் தீவிரவாதிகள் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை தாக்கியதாக செய்திகள் வெளியாகின.
இதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். தாக்குதலின் போது, சுமார் 6 மணி நேரம் தீவிரவாதிகள் விமான நிலையத்தில் இருந்த ஒர்க்ஷாப்பில் இருந்தபடி விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதில் தாக்குதலின் போது ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இது குறித்து, சிந்து மாகாண அமைச்சர் ஷகீர் அகமது கூறுகையில், ‘பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் விமான நிலையத்திற்குள் நுழைந்த 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர். தீவிரவாதிகள் தாக்குதலில், விமான நிலைய பாதுகாப்பு படையினர், ராணுவ படை வீரர்கள், பொதுமக்கள் உள்பட 14 பேர் பலியாயினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
சம்பவ நடந்த தகவல் அறிந்த உடனேயே பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி உத்தரவிட்டார். விடிய, விடிய நடந்த துப்பாக்கிச் சண்டை காலையில் முடிவுக்கு வந்தது. தாக்குதலின் போது, கராச்சி விமான நிலையம் போர்கோலத்துடன் காணப்பட்டது.
ஆங்காங்கே தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீவிரவாதிகள் கொண்டு வந்த 2 ராக்கெட் லாஞ்சர்கள், 12 பெட்ரோல் குண்டுகள், 19 கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.தலிபான்கள் பொறுப்பேற்பு விமான நிலைய தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தினர், இதே கராச்சியில் மெஹ்ரான் கடற்படை விமானதளத்தில் பயங்கர தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் 18 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment