காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
இந்த தடை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டார். “எதிர்காலத்தில் காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பிரிவில் சிகரெட் விற்பனை முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்னோடியாகவே ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதற்கான தீர்மானம் காத்தான்குடி நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக நகர சபை தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் கை துடைப்பதற்கு அச்சிட்ட கடதாசிகள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கு பதிலாக வெள்ளை கடதாசிகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணையை மீள பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் குறிப்பிட்டார்.
இந்த தீர்மானத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இந்த அறிவித்தல்கள் காத்தான்குடி பிரிவிலுள்ள சகல ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இதற்காக காத்தான்குடி சுகாதார அலுவலகத்துடன் இணைந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபை ஊழியர்கள் பரிசோதணை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment