கோத்தாபே ராஜபக்ஷ என்றொருவர் இலங்கை அரசியலினுள் இணைந்தது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்தாகும். அவர் இராணுவ சேவையிலிருந்து விலகிய பின்னர் ஒன்றரை தசாப்த காலம் அமெரிக்காவில்தான் வாழ்ந்து வந்தார். அவர் பிரபல அல்லது பலம் பொருந்திய ஒருவராக அறியப்படுவது தனது சகோதரர் ஜனாதிபதியாக ஆகியதன் பின் இந்நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னணியிலாகும். அப்போது அவருக்கு மிகவும் அதிகாரமிக்க பதவியாக கருதப்படக்கூடிய பாதுகாப்புச் செயலாளர் என்ற அந்தஸ்தும், பதவியும் கிடைக்கப் பெற்றதோடு அதனைத் தொடர்ந்து ஆரம்பித்த நான்காவது ஈழப்போரின் பாதுகாப்பு படைக்கான இணைப்பாளராகவும் அவரே நியமிக்கப்பட்டார்.
மேலும் அவர் தனக்கிருந்த ஆபத்துக்களைக் கூட பொருட்படுத்தாமல் யுத்தத்தை தர்க்கரீதியானதொரு முடிவை நோக்கி கொண்டு செல்வதில் மிகப் பெரிய பணியொன்றை செய்தார். முப்படையினருக்கு அபிமானத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக செயற்படுத்தப்பட்ட பாரிய பிரசார நடவடிக்கையின் பின்னால் பிரதானமாக தொழிற்பட்டவர் இவரோயாகும். யுத்த வெற்றியானது அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தையும் வீர வணக்கத்தையும் கொண்டுவந்து கொடுத்தது. யுத்தத்தினால் உருவாக்கப்பட்ட முப்பெரும் வீரர்களில் ஒருவராக அவர் ஆக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் அரச ஊழியர் என்ற வரையறைக்குள் இருந்த போதிலும் ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் நின்று அதிகூடிய அதிகாரங்களைப் பெற்ற ஒருவராகவும் அனைத்து கெபினட் அமைச்சர்களையும் விட உயர்ந்த அந்தஸ்த்துகளைக் கொண்டவராக மாறினார்.
ஜெனரல் பொன்சேகா நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டதிலிருந்து நாட்டினுடைய பாதுகாப்புச் சேவைகளுடன் சம்பந்தபட்ட பலம் மிக்க மனிதராக மாற்றமடைகின்றார். முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபருக்கும் அவருக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி சாதாரணமானதன்று. வானத்திற்கு பூமி போன்று பாரிய இடைவெளியாக காணப்பட்டது. ஜனாதிபதியைப் போன்று அவரது சகோதரர்களான பசில்,சமல் என்போரை அரசியலில் அனுபவமுள்ளவர்களாக அரசியல் ரீதியாக பதப்படுத்தப்பட்டவர்களாக கருத முடியுமாயினும் கோதாபே ராஜபக்ஷவை அரசியல் பிராணியாக பார்க்க முடியாது. அவர் (மிலிடரி) இராணுவப் பிராணி மாத்திரமே ஆவார். அனைத்து விடயங்களையும் இராணுவ நோக்கிலேயே பார்ப்பதற்கு முயற்சி செய்தார்.
கலகங்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்......
யுத்தத்தை முடித்த பின்னர் தோல்வியைத் தழுவியவர்கள் என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களை பராமரிக்கும் பொறுப்பையும் யுத்தத்தின் போது மாவீரன் என்ற நிலையில் இருந்த கோதாபேயிடமே ஒப்படைத்தனர். கோதாபேயின் மிலிடரி நிழலானது படிப்படியாக வடக்கு மக்கள் மீது மட்டுமல்லாது முழு நாட்டின் மீதும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய நிலையை தோற்றுவித்துள்ளது எனக்கூற முடியும்.
நாட்டினுடைய உள்நாட்டு கலகம் ஒன்றை அடக்கியதன் பிறகு தோல்வியைத் தழுவிய கலகக்காரர்கள் மற்றும் அவர்களின் மக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை வெற்றி பெற்ற பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பதில்லை. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாகும்.
71வது கலகத்தை தோற்கடித்த பின்னர் சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட சிறைக்கைதிகள்18000 பேரையும் கண்காணிக்கும் பொறுப்பை சிரிமா பண்டாரநாயக்க அரசாங்கம் அக்கலகக்காரர்களை தோற்கடித்த பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவில்லை. பதிலாக அவர்கள் அனைவரையும் பராமரிக்கும் பொறுப்பை சிறைச்சாலைகள் திணைக்களத்திடமே ஒப்படைத்தார். சாதாரணமாக பாதுகாப்பு படையை அவர்களது முகாம்களிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவது யுத்த சூழ்நிலையின் போது அல்லது விஷேட அனர்த்தங்கள் நிகழும் போதே ஆகும். யுத்த சூழ்நிலை முடிந்த மறுகணமே சிவில் நிர்வாகத்திற்கு இடமளிக்கும் வகையில் யுத்த கால சட்டங்களை நீக்கி பாதுகாப்புப் படையை மீண்டும் அவர்களின் தங்குமிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாகும்.
L.T.T.E யை தோல்வியடையச் செய்த நிகழ்வை நாட்டினுள்ளே நடந்த முதலாவது சந்தர்ப்பமாக அல்லாது மூன்றாவது நிகழ்வாகவே பார்க்க வேண்டும். (நடந்து முடிந்த J.V.P யின் இரு கலகங்கள்) அப்போது J.V.P கலகத்திற்கு சார்பற்ற தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் மத்தியிலும் கூட பாதுகாப்புப் படை அக்கலகத்தை அடக்கிய முறை குறித்து கடுமையான விமர்சனமும் எதிர்ப்பும் காணப்பட்டது என்பதை ஜனாதிபதி பிரேமதாஸ அறிந்து கொண்டார். எனவேதான் கலகத்தை முடிவுக்கு கொண்டு வந்த உடனே நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இராணுவ முகாம்களை அகற்றிவிட்டு பாதுகாப்பு படையினரை அவர்களது தங்குமிடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்ற கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தியது அதனாலேயே ஆகும்.
அந்த நல்வழிமுறையே வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கும் பொருந்திச் செல்கிறது. ஆனால் அது கடந்த காலங்களைப் போன்று வடக்கு தமிழ் போராட்டத்தை தோல்வியடையச் செய்த பின் நடைமுறைக்கு வராமல் இருந்தமைக்கு கோத்தாபயே காரணமாகும். அவ்வாறு நிகழக் காரணம் அவருக்கு இராணுவ (மிலிடரி) பார்வையைத் தவிர அரசியல் பார்வை இருக்கவில்லை என்பதாக இருக்கலாம். சிலநேரம் கோத்தாபே பாதுகாப்பு செயலாளர் பதவியில் இல்லாமலிருந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் சிறிமா பண்டாரநாயக, ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ போன்றோர் நடைமுறைப்படுத்திய அதே கொள்ளையை நடைமுறைப்படுத்தி இருப்பார். யுத்தத்தின் போது பாரிய பங்களிப்பொன்றைச் செய்து யுத்தத்தை வெற்றிக்கொண்டதால் கோத்தாபேயின் எந்த விவகாரங்களிலும் தான் தலையிடாது அவரின் விடயங்களை அவரின் விருப்பப்படி செய்து கொள்வதற்கு இடமளிக்கும் கொள்ளையைத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் கோத்தாபே விடயத்தில் பின்பற்றினார். இக்கொள்கைதான் பாதுகாப்பு செயளாலருக்கு யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாத அதிகூடிய அதிகாரங்கள் கொடுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனக் கூறலாம். கோத்தாபேக்கு தனது சகோதரனை மீறி செயற்படுவதற்கான தேவை இல்லாதிருந்தபோதிலும் அரசியல் விவகாரங்களை இராணுவக் கோணத்தில் பார்த்து செயற்படுவதன் காரணமாக அவர் தற்போது தனது சகோதரனினது மட்டுமன்றி அவரின் அரசாங்கத்தினுடைய அரசியல் புதைகுழியை வெட்டிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு ஆளாகியுள்ளார் எனக் கூறக்கூடியதாக உள்ளது.
இறந்தோரை நினைவு கூறல்
71வது கலகத்தின் போது இறந்தவர்களினது பெற்றோர்கள்,பிள்ளைகள் அவர்களை நினைவுகூர்ந்தனர். இரண்டாவது கலகத்தின் போதும் அவ்வாறே செய்தனர். இறந்தவர்கள் செய்தவற்றின் சரி பிழை எப்படிப்போயினும் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் இருக்கின்றது. ஆனால் கோத்தாபே ராஜபக்ஷ இதற்கு முன்னர் யாருமே செய்யாத வகையில் வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு தமது இறந்துபோனவர்களை நினைவுகூரும் உரிமையைக் கூட ஏற்றுக்கொள்ளாமைக்கு அவருக்குள்ளே அரசியல் இதயமன்று இராணுவ இதயமே காணப்படுகின்றது என்பதனால் இருக்கலாம்.
அவருக்கு இக்கலகங்களில் காணப்படும் சமூக,அரசியல் பின்புலம் குறித்த எந்தவிதமான புரிதலும் இருப்பதாக தென்படவில்லை. அவரின் இராணுவக் கண்களுக்கு தென்படுவதெல்லாம் கலகக்காரர்களினுள்ளே வாழ்ந்த பயங்கரவாதி மாத்திரமே ஆகும். பயங்கரவாதியொன்று உருவாகுவதற்கு பங்களிப்புச் செய்கின்ற சமூக,பொருளாதார காரணிகள் அவருக்கு விளங்காது. ஆகக்குறைந்த வகையில் தன்னால் தோற்கடிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படையினரல்ல, இந்நாட்டைச் சேர்ந்த மக்களின் பிள்ளைகள் சிலராகும் என்பதைக் கூட புரிந்து கொள்வதில் அவர் தோல்வி கண்டார்.
யுத்தத்தின் போது நிகழ்ந்த வரையறைக்குட்பட்ட செயற்பாடுகளை தேடிக் கண்காணிக்கும் நிலைக்கு அனுமதி வழங்காது தடையாக செயற்பட்டவர் கோத்தாபே ஆகும். நியாயமான உள்ளக கன்காணிப்பு விசாரணை ஒன்றை செய்ய அனுமதித்திருந்தால் அதன் விளைவாக இலங்கைக்கு மிக வேகமான முன்னேற்றப் பயணமொன்றை செல்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது. அந்தக் கண்ணோட்டத்தில் அச்சந்தர்ப்பத்தை இலங்கைக்கு கிடைக்க விடாமற் செய்து இலங்கையை இலகுவாக எழுந்து நிற்க முடியாதளவிற்கான பெரும் சிக்கல் ஒன்றில் தள்ளிவிட்டதற்கான பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது கோத்தாபேயாகும். அண்ணன் ஜனாதிபதி தனது விருப்பத்துக்குரிய தம்பிக்கு விரும்பியதெல்லாம் செய்வதற்கு இடம் கொடுத்துவிட்டு மேலே பார்த்துக் கொண்டிருக்கும் கொள்கையால் நாடு பெரும் சிக்கலுக்குள் சிக்கலாக மாறுவதற்கு அது காரணமாக அமைந்தது எனச் சொல்லலாம்.
கோத்தாபேயினால் நடந்த தவறு.......
கோத்தாபேயின் கைகளால் நிகழ்ந்த நாட்டிற்கு நடந்த மோசமான விடயமாக கருத வேண்டியது நாட்டை இராணுவ முகாம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதாகும். சிவில் அதிகாரிகள் அமர வேண்டிய பொறுப்புகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தார். சரியான பயிற்சி கூட வழங்காது இராணுவ அதிகாரிகள் தொகையளவில் தூதுவராலய சேவைகளுக்கு அமர்த்தப்பட்டனர். கல்வியையும் இராணுவமயப்படுத்தினார். இதனால் நாட்டை இராணுவ பதுங்குகுழி நோக்கி தள்ளுவதற்கு மேலாக சிவில் அரசியல் நிறுவன முறைகளையும் விகாரப்படுத்தினார்.
குற்றவாளிகளை அவர்களது வழக்கை கேட்காது சுட்டுக்கொலை செய்யும் பயங்கர கலாசாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. அதனை உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து சட்ட, ஜனநாயக அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான பாசிச செயற்பாடாக பார்க்க வேண்டியுள்ளது.
அரசியல் ரீதியாக அவரின் கைகளினால் நடந்த பயங்கரமான தவறு, உத்தியோகபூர்வமாகவும் உத்தியோபூர்வமற்ற வகையிலும் பாதுகாப்பு படையுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசியலுக்குள் உள்வாங்கியதாகும். அடையாள முக்கியத்துவம் கொண்ட சிலரை மர்மமாக கொலை செய்து இன்னும் சிலரை மர்மமாக கடத்தினார். சில ஊடக நிறுவனங்கள் பயங்கர தாக்குதலுக்கு உட்பட்டன. இவ்வாறு நிகழ்ந்த சில அவலட்சனமான நிகழ்வுகளின்போது பாதுகாப்புப் படையுடன் சம்பந்தமுடைய குழு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக விளங்கியது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும் அக்கைங்கரியங்களை அவர் நிறுத்தவில்லை. பல்வேறு காரணங்களினால் நாட்டினுள் பல்வேறு பிரதேசங்களில் நடாத்தப்பட்ட ஆர்பாட்டங்களை தடுப்பதற்காகக்கூட உத்தியோகபூர்வமாக மட்டுமல்லாது உத்தியோகபூர்வமற்ற வகையிலும் பாதுகாப்பும் படையுடன் தொடர்பான குழுவை பயன்படுத்தினார். விடயங்களை நன்கு அறிந்து வைத்திருந்த அரசாங்கத்துடன் சம்பந்தபட்ட சிலர் அச்செயற்பாடுகளை ஆதரவாக பார்க்கவில்லை; பெரும் வெறுப்புடன் நோக்கினார். எனினும் அவர்கள் அதனை ஆங்காங்கே கிசு கிசு பேசினார்களே தவிர பகிரங்கமான எதிர்ப்பைத் தெரிவிக்க பயப்பட்டனர்.
தீவிரவாதிகளை போஷித்து வளர்த்தல்.........
பாதுகாப்புச் செயலாளர் சில தீவிரவாத சக்திகளுக்கு பாலூட்டி பெரியவர்களாகும் வரை வளர்த்ததோடு நின்றுவிடாது அவற்றுக்கு பாதுகாப்பும் வழங்கினார். பொதுபல சேனா அமைப்பு இதற்கான சிறந்ததொரு உதாரணமாகும். ஞானசாரதேரர் வெளிக்காட்டும்அவரது துணிவு இயல்பான ஒன்று என்பதை விடவும் பாதுகாப்பு அமைச்சு பின்னணியிலிருந்து கொடுக்கும் அதிகார பலத்தால் உருவாக்கிக் கொண்ட ஒன்றாகும் என்றே கருதவேண்டும். அத்தேரரின் பல்வேறு நடிப்புக்கும் நாடகத்திற்கும் முன்னால் பாதுகாப்பு பிரிவானது அத்தேரர் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு இடமளித்துவிட்டு சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் அத்தேரருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் இருந்த மறைவான நெருக்கத்தை அவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்ததனாலாகும். அரசாங்கத்திலுள்ள அதிகமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அதனை அறிந்து வைத்துள்ளனர். அத்தேரர் நடித்துக் கொண்டிருந்த வீரதீரம்மிக்க பாத்திரத்தை அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பெருந்தொகையினர் அங்கீகரிக்காத போதிலும் அனைவரும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கை ஒன்றை கடைப்பிடித்தமைக்கு அத்தேரர் மீது செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றது கோத்தாபேயின் நிழல் என்பதனாலாகும். நாட்டிலுள்ள பிரபல்யமான பிக்குமார்களும் ஞானசார தேரரின் நடிப்பை அனுமதிக்காவிடினும் அவர்கள் அனைவரும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கும் கொள்கையை கடைப்பித்தமைக்கு காரணமாகும் இதுவே ஆகும்.
ஹலால் பிரச்சினை தொடங்கிய காலப்பகுதியில் நாட்டில் அங்கீகாரமுள்ள முக்கிய பிரபல்யமான சில பிக்குமார்கள் பிரச்சினை முற்ற விடாது தடுத்து சமாதானமாக தீர்த்துக் கொள்வதற்கு முன் வந்தனர். அப்போது அவ்வனைத்து பிக்குமார்களையும் அவர்களது தொலைபேசி ஊடாக ஆபாசமாக திட்டித் தீர்க்கும் ஒழுங்கமைக்கப்பட்ட (ழுசபயnணைநன) நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தினார்கள். இது இப்பிக்குமார்களுக்கு பழக்கப்படாத அனுபவமாக இருந்ததோடு, எந்தளவிற்கு அவர்கள் பயந்தார்கள் எனின் அப்பிக்குமார்கள் குறிப்பிட்ட காலம் வரையில் தமது தொலைபேசிகளின் தொடர்புகளை துண்டித்தனர்.அதன் நோக்கம் என்னவெனில் பிரபல்ய மிக்க பிக்குமார்கள் அனைவரையும் பீதிக்குட்படுத்தி அவர்கள் அனைவரதும் வாய்களை மூடச்செய்வதாகும்.
இந்த முறைகேடான உறவு வெடித்துச் சிதறிய கட்டமே பேருவளை அனர்த்தமாகும்.புத்தசாசன பாதுகாப்பு அதிகார சபை ஒன்று கூட்டிய ஒன்றுகூடலானது பாரிய பிரச்சினையொன்றை தோற்றுவிப்பதற்கு காரணமாக அமையப் போகிறது என்பதை அப்பிரதேச அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருந்தனர். ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மட்டுமன்றி சில சிங்கள அமைச்சர்களும் பொலிஸ் தலைமைகளுக்கு கதைத்து கூட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோரியும் கூட அவர்கள் யாரும் அவ்வேண்டுகோளிற்கு உடன்படாமைக்கு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளையின் காரணமாக இருக்கலாம். அளுத்கம கூட்டத்தின் போது ஞானசார தேரர் தனக்குச் செய்ய முடிந்த அனைத்தையும் செய்தார். முழுப் பிரதேசமும் நனையும் வகையில் பெட்ரோலை ஊற்றிவிட்டு அத்தேரர் அவ்விடத்தைவிட்டும் சென்றார். அதன்பிறகு அந்நிலத்திற்கு நெருப்பு வைத்தவர்கள் பிறிதொரு கூட்டம். குழப்பம் விளைவித்தவர்கள் மத்தியில் சிவில் உடையில் பாதுகாப்புப் படையினரும் இருந்தார்கள் எனப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் கூறுகின்றனர். பேருவலை அனர்த்தத்தை தொடர்ந்து பொதுபல சேனாவின் முக்கிய தலைவரான கிராம விமலஜோதி தேரருக்கு விஷேட அறிவிப்பொன்றை செய்யவேண்டி ஏற்பட்டது. ஞானசார தேரரின் செயற்பாடுகள் புத்தமதத்துடனோ அல்லது பிக்கு அந்தஸ்துக்கோ பொருத்தமற்றதாகும் என தெரிவித்துவிட்டு தான் அவ்வமைப்பின் தலைமைத்துவத்திலிருந்து விரைவில் விலகப் போகிறேன் எனவும் கூறினார்.
நிகழ்ந்த பாரிய அழிவின் பின்னர் பாதுகாப்புச் செயளாலருக்கு குற்றச்சாட்டுக்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து பொதுபல சேனாவிற்கும் தனக்கும் எந்தத்தொடர்புமில்லை என்பதை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிவிக்குமாறு ஞானசார தேரருக்கு பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார் என தோன்றுகிறது. இதுவரையில் ஊடகவியலாளர்கள் மிகச் சிலருக்கு மாத்திரமே தெரிந்த எனக்கு கேட்கக் கிடைத்த ஓர் இரகசியம் இதோ. ஒரு ஊடக நிறுவனமொன்றின் தலைவரை உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியமான ஒருவர் தொடர்புகொண்டு ஞானசார தேரருக்கு ஊடக சந்திப்பொன்றை (பேருவளை அனர்த்தத்தின் பின்னர்) வழங்குமாறு கேட்டுள்ளார். அவ் ஊடக செயலாளரிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்காததனால் சிறிது நேரத்திற்கு பின் பாதுகாப்புச் செயளாலரே அவருடன் தொடர்பை ஏற்படுத்தி ஞானசார தேரருக்கு ஊடக சந்திப்பொன்றை வழங்குமாறு கேட்டுள்ளார். பின்னர் அவ் ஊடக சந்திப்பில் ஞானசார தேரர் திரும்பத்திரும்ப கூறியிருப்பது தனது அமைப்புக்கும் கோத்தாபேயவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதையே ஆகும். அது பூனை சாக்குப் பையிலிருந்து வெளியே பாய்ந்தது போன்ற சந்தர்ப்பமாக பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு ஒரு வரலாற்றுமிக்க சந்தர்ப்பமொன்றின் போது பிரபாகரனை யுத்த ரீதியாக வெற்றிகொள்வதற்காக முக்கியமான பெரும் பணியொன்றை செய்ததன் மூலம் மக்கள் மத்தியில் வீரன் என்ற நிலையை பெற்றுக் கொண்டிருந்த கோதாபே ராஜபக்ஷ இன்று நாட்டின் முன்னோக்கிய பயணத்தை குழப்புகின்ற ஒரு குழப்பவாதி என்ற நிலைக்கு ஆளாகியுள்ளார் என்றே கூறக் கூடியதாவுள்ளது.
Post a Comment