இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினையினை முழுநாட்டிற்கும் பரப்பி சர்வதேச அளவில் முஸ்லிம்கள் கொண்டு சென்றுவிட்டனர். பொதுபலசேனா மீது எவரேனும் கை வைத்தால் முழுநாடும் கொந்தளிக்கும். எமது தரப்பு நியாயங்களை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளருமே செவிமடுத்தனர். வேறு எவரும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்பினரும் தர்கா நகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்திரித்தனர். ஆனால், தர்கா நகர் என்பது தீவிரவாதத்தின் மையப் பூமியாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதவாதத்தையும் அதனூடாக தீவிரவாதத்தினையும் பரப்பி அப்பகுதி மக்களை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாகவே அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுபலசேனா அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதேஅவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும்
தெரிவித்ததவாது: ஒரு கிராமத்தில் ஏற்பட்ட சிறிய சண்டை இன்று சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அளுத்கம சம்பவம் ஏற்பட்டதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளே காரணம். சிறிய பிரச்சினையாக ஆரம்பித்த விடயம் இறுதியில் இரு இனங்களுக்கிடையிலான கலவரமாக மாற்றப்பட்டுவிட்டது. நடந்த சம்பவம் ஒரு சிறிய சம்பவம். அதை பெரிதுபடுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமின்றி இந்த பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத எம்மீது இறுதியில் குற்றம் சுமத்திவிட்டனர்.
இப்போது ஆளும் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் பொதுபலசேனா அமைப்பினரையே குற்றம் சுமத்தி வருகின்றனர். இது வேடிக்கையாகவும் எமக்கு வேதனையாகவும் உள்ளது. உண்மையிலேயே இந்த சம்பவம் ஏன் ஏற்பட்டது என்பதை எவரும் கேட்கவில்லை. நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்தோம். நாட்டில் முஸ்லிம் மதவாதிகளின் தீவிரவாத செயற்பாடுகள் காணப்படுகின்றது என. அதை எவரும் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்புகளும் பேருவளை, தர்கா நகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்தரித்தனர். ஆனால் தர்கா நகர் என்பது தீவிரவாதத்தின் மையப் பூமியாகும்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதவாதத்தையும் அதனூடான தீவிரவாதத்தினையும் பரப்பி அப்பகுதி மக்களை பயங்கரவாதிகளாக மாற்றி வைத்துள்ளனர். அதன் விளைவாகவே இன்று அப் பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது. கடந்த பொசன் தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பன்சலைக்கு முன்னால் மாடொன்றினை வெட்டி பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் செயற்பட்டிருந்தனர். இது தொடர்பில் ஏன் எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
நாட்டில் இன்று 30 பெளத்த அமைப்புகள் உள்ளன. பெரும்பான்மை சமூகத்தின் எண்ணிக்கையில் இது மிகவும் குறைந்த அளவே. ஆயினும் சிறிய தொகை முஸ்லிம்களுக்கு இலங்கையில் 90 முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. இதில் பல அமைப்புகள் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டவை. இவை தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களும் வாய் திறக்கவில்லை. நாம் பேசினால் எம்மை இனவாதிகள் என சித்தரிக்கின்றனர். அளுத்கம சம்பவத்திற்கு மூல காரணம் நாம் என்றே இன்று அனைத்து முஸ்லிம் தரப்பும், அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளும் குறிப்பிடுகின்றன.
ஆம் இந்த இனக்கலவரத்திற்கு நாம்தான் காரணம். அவ்வாறு பொதுபலசேனா அமைப்பினர்தான் காரணம் என்றால் அதற்காக எம்மை கைது செய்து சட்ட நடவடிக்கைகள் எடுங்கள். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி சிங்கள இளைஞர்களை உடனடியாக விடுவித்துவிட வேண்டும். சம்பவத்தில் ஆயுதமேந்திய முஸ்லிம்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால், கலவரத்தை தடுக்க முயன்ற சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கமும், எதிர்க்கட்சியும், பொலிஸும் நாட்டிற்கு உண்மையாக நடக்க வேண்டும். அதைவிடுத்து பொதுபலசேனா அமைப்பின் மீது எவரேனும் கைவைத்தால் இந்த நாடே கொந்தளிக்கும். பொதுபலசேனா என்பது வெறுமனே ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு அல்ல. பொதுபலசேனா என்பது நாட்டில் உள்ள அனைத்து பெளத்த இனத்தையும் சிங்கள மக்களையும் கொண்ட அமைப்பு. எம்மை அழிக்க நினைப்பது பெளத்த மக்களை அழிப்பதற்கு சமமாகும். இதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மேலும், இந்த நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமும் நாம் எடுத்துக்கூறினோம். ஆயினும் எவரும் இதை கண்டுகொள்ளவில்லை. எனினும், எமது முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளருமே கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். பல சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்டதை கவனத்திற்கொண்டு நாட்டிற்கு எதிராக ஏற்படவிருந்த அசம்பாவிதங்களை தடுத்தனர். எனினும், இதற்காக பாதுகாப்புச் செயலாளருக்கும் எமக்கும் தொடர்புகள் இருக்கின்றதென எவரும் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.
சமில லியனகே
இதில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர் சமில லியனகே தெரிவிக்கையில்;
தமிழ் மக்கள் புத்திசாலிகள், நேர்மையானவர்கள் என்று வட மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தமிழ் மக்கள் நேர்மையானவர்கள், புத்திசாலிகள் என்ற நம்பிக்கை சிங்களவர்கள் மத்தியில் இருந்ததன் காரணத்தினாலேயே இன்றும் தமிழர்களுடன் ஒன்றாக வாழ்கின்றனர். எனினும் விக்கினேஸ்வரன் போன்ற பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளினாலேயே தமிழ் – சிங்கள சமூகத்திடையே பிரிவினை ஏற்பட்டு முரண்பாடுகள் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
டிலந்த விதானகே
பொதுபலசேனா அமைப்பின் ஊடகப் பேச்சாளர் டிலந்த விதானகே இவ் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்;
பாதுகாப்புச் செயலாளர் எமக்கு உதவி செய்ய வேண்டுமென்றோ அல்லது பாதுகாப்புச் செயலாளருக்கு பொதுபலசேனா அமைப்பு உதவ வேண்டுமென்ற அவசியமோ இல்லை. நாட்டில் 30 வருட காலம் இருந்த விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தை தனியாக அழித்த ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளரினால் இப்போது முஸ்லிம் தீவிரவாதத்தினை அழிக்க எமது உதவி தேவையில்லை. அதேபோல் இனப் பிரச்சினையினை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் செய்யப் பார்க்கின்றனர் இதையும் நாம் முழுமையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
வீரகேசரி
Post a Comment