வாஷிங்டன், ஜூன் 17–
ஈராக்கில் தீவிரவாதிகளை குண்டுவீசி தாக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்காக ராணுவ படையையும் அனுப்பியது.
ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த சதாம் உசேனை அதிபர் பதவியில் இருந்து அமெரிக்கா விரட்டியது. அவரை கைது செய்து தூக்கிலிட்டது. அங்கு மைனாரிட்டி ஆக உள்ள ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் அரசு அமைக்க உதவி செய்தது.
அதைத்தொடர்ந்து சன்னி பிரிவை சேர்ந்த போராளிகள் அரசுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அரசுக்கு எதிரான தாக்குதலை தொடங்கினர். அவர்களுடன் அரசு படையும் மோதுகிறது. இதனால் உள் நாட்டு போர் மூண்டுள்ளது. தற்போது மொசூல், திக்ரித், சாதியா, ரமாடி, சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றினர். தலைநகர் பாக்தாத் நோக்கி அதிரடியாக முன்னேறி வருகின்றனர்.
போராளிகளின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக் அரசு படையால் முடியவில்லை. எனவே, அமெரிக்கா உதவியை ஈராக் பிரதமர் மலிகி நாடினார். தொடக்கத்தில் அமைதியாக இருந்த அமெரிக்கா தற்போது ஈராக்குக்கு உதவ முன் வந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா யு.எஸ்.எஸ். ஜார்ஜ், எச்.டபிள்யூ. புஷ் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை நேற்று முன்தினம் ஈராக்குக்கு அனுப்பியது. இக்கப்பல் அரபிக் கடலில் இருந்து புறப்பட்டு சென்றது.
மேலும் ஷியா பிரிவினர் ஆட்சி நடத்தும் ஈரான் உதவியையும் அமெரிக்கா நாடியுள்ளது. அதற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிரவாதிகள் மீது குண்டு வீசி தாக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜான் கெர்ரி, ‘‘இதற்கு எங்களால் முழுமையாக பதிலளிக்க முடியாது. தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதில் குண்டு வீச்சு தாக்குதலும் முக்கியமான ஒரு அம்சமாகத்தான் உள்ளது.
குண்டு வீச்சு நடத்துவதால் போராளிகளுடன் சேர்ந்து பொது மக்களும் கொல்லப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, அது குறித்து ஈரானுடன் பேசி பொது மக்கள் பாதிக்காத வகையில் தாக்குதல் நடத்தப்படும்’’ என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே ஈராக்குக்கு மேலும் 278 ராணுவ வீரர்களை அமெரிக்கா நேற்று அனுப்பியது. அங்கு தங்கியிருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் பாக்தாத்தில் உள்ள தூதரகத்தை காக்கவும் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே 175 வீரர்கள் பாக்தாத்தை சென்றடைந்து விட்டனர். மேலும் 100 வீரர்கள் புறப்பட தயாராக உள்ளனர். இந்த தகவலை அதிபர் ஒபாமா, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈராக்குக்கு அனுப்ப ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு மற்றொரு போரை திணிக்க தயாராக இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Post a Comment