கீவ், ஜூன் 17-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவது தொடர்பான திட்டம் அந்நாட்டின் அதிபரால் தடைப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதாரத் தடைகளை விதித்தன. உக்ரைனுக்கான எரிவாயுத் தேவைகளின் பெரும்பகுதி ரஷ்யாவிலிருந்து வருவதால் ரஷ்ய அரசு நிறுவனமான கஸ்ப்ரோம் கடந்த மார்ச் முதல் அதன் விலையை 80 சதவிகிதம் உயர்த்தியது.
அதுமட்டுமின்றி அதற்கு முன்னால் செலுத்தவேண்டிய பாக்கியையும் உக்ரைன் உடனடியாக செலுத்தாவிட்டால் சப்ளையை நிறுத்திவிடுவதாகவும் அந்நிறுவனம் எச்சரித்தது. பிப்ரவரி, மார்ச் மாத எரிவாயு சப்ளை பாக்கிக்காக உக்ரைன் இதுவரை 786 மில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளது.
இருப்பினும், இன்னும் செலுத்த வேண்டிய பாக்கித்தொகை குறித்தும் அதன்பின்னர் ஏப்ரலில் இருந்து நிர்ணயிக்கப்படும் புதிய விலை குறித்தும் இரு நாடுகளும் இணைந்து தீர்மானிக்க வேண்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரு நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளும் பிரஸ்ஸல்சில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ரஷ்யாவின் கஸ்ப்ரோம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அலெக்சேய் மில்லரும், உக்ரைன் நப்டகோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரி கொபோலேவும் இதில் பங்கு பெற்றனர்.
ஒப்பந்தத்தில் காணப்பட்ட அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டபோதும், சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, உக்ரைனின் ராணுவ விமானத்தை ரஷ்ய ஆதரவு பெற்ற படையினர் சுட்டு வீழ்த்தியதில் 49 உக்ரைன் வீரர்கள் பலியானதால் ரஷ்யா-உக்ரைன் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியது.
இந்நிலையில், உக்ரைனுக்கு எரிவாயு செல்லும் இணைப்பை முன்னெச்சரிக்கை ஏதுமின்றி ரஷ்யா இன்று துண்டித்து விட்டது. இதுவரை எரிவாயு சப்ளை செய்த வகையில் ரஷ்யாவுக்கு உக்ரைன் 1.95 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாக்கி வைத்துள்ளது. அதை உடனடியாக செலுத்துவதுடன், இனி வாங்க விரும்பும் எரிவாயுவின் அளவுக்கு ஏற்ப முன்வைப்பு தொகை செலுத்தினால் மட்டுமே அந்நாட்டுக்கு மீண்டும் எரிவாயு சப்ளை செய்யப்படும் என ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, உக்ரைன் வழியாக செல்லும் குழாய்களின் மூலம் இனி, மாஸ்கோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் எங்களது வாடிக்கையாளர்களுக்கும் எரிவாயு சப்ளை செய்வோம். இதை உக்ரைன் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ரஷ்யா புதிய நிபந்தனை விதித்துள்ளது.
Post a Comment