ஈராக்கில் இருந்து பிரிகிறது குர்திஸ்தான்? விரைவில் தனிநாட்டு பிரகடனம் வெளியீடு?

JUNE 14TH, 2014


எர்பில்: வடக்கு ஈராக்கில் சுயாட்சி பிரதேசமாக இருக்கும் குர்திஸ்தான் விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியிட்டு சுதந்திர நாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஈராக்கின் வடபகுதியில்  குர்து இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 2003ஆம் ஆண்டு சதாம் உசேன் அரசுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்த போது அந்தப் போரை குர்து இன மக்கள் ஆதரித்தனர்.
சதாம் உசேன் அரசு வீழ்ந்த பிறகு அண்டை நாடான துருக்கியுடன் குர்திஸ்தான் விடுதலைப் போராளிகள் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர். அவர்களை துருக்கி ஒடுக்கிய நிலையில் தற்போது குர்திஸ்தான் பகுதியில் துருக்கிதான் பெரிய அளவிலான முதலீடுகளை செய்துள்ளது.
அண்மைக்காலமாக ஈராக் அரசின் சட்டங்களை ஏற்காமல் தன்னிச்சையாக துருக்கி பகுதி வழியே எண்ணெய் ஏற்றுமதியில் குர்திஸ்தான் குதித்தது. இதனால் அதன் பொருளாதார வளமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். படையினரின் படையெடுப்பால் ஏராளமான முக்கிய நகரங்களை ஈராக் அரச படைகள் கைவிட்டு விட்டன. இதில் மிக முக்கியமான எண்ணெய் வளமிக்க கிர்குக் நகரம். இப்போது இந்த நகரத்தை குர்திஸ்தான் அரச படைகள் கைப்பற்றி உள்ளன.
ஈராக்கில் தற்போது உள்நாட்டு குழப்பத்தை முன்வைத்து குர்திஸ்தான் ஒரு சில வெளிநாடுகளின் ஆதரவுடன் தனி சுதந்திர நாட்டுக்கான பிரகனடத்தை வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதன் அடிப்படையிலேயே குர்திஸ்தானின் விடுதலை பிரகடனம் அமையும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger