வலிமைமிக்க சக்தியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக, பா.ஜ.க. தலைமையில் தமிழக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் பா.ஜ.க. வெற்றியும் பெற்றது. எனவே, தமது குறிக்கோள் பா.ஜ.க. மூலம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் கூட்டணிக் கட்சிகள் இருந்தன. ஆனால் நடந்தது என்ன?
எது நடைபெறக்கூடாது என்று அந்தக் கட்சிகள் எதிர்பார்த்தனவோ அது நடந்துகொண்டிருக்கின்றது. அதாவது எந்தக் காரணம் கொண்டும் ஜெயலலிதாவுக்கும், பா.ஜ.க. பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நல்லுறவு ஏற்படக்கூடாதென்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, தற்போது பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்துப் பேசியமை பெரும் கலக்கத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் வைகோவின் ம.தி.மு.க., விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகியன பா.ஜ.க அணியில் இணைந்து போட்டியிட்டன. இந்த கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒரு ஆசனமும், பா.ம.க.வுக்கு ஒரு ஆசனமும் மட்டுமே கிடைத்தன.
எனவே இந்தக் கூட்டணி தமிழகத்தில் பெருந்தோல்வியை சந்தித்தாலும், அகில இந்திய ரீதியில் பா.ஜ.க.வுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. எனினும் தமிழகத்தில் தன்னுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளை தம்முடன் அரவணைத்துச்செல்ல பா.ஜ.க. உறுதி கொண்டுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் 37 தொகுதிகளில் பெரும் வெற்றிபெற்று அ.தி.மு.க. தமது பலத்தை உயர்த்திக்கொண்டுள்ளது.
மற்றுமொரு கூட்டணியான தி.மு.க. கூட்டணியும் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்தக் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி போன்றவை இணைந்து போட்டியிட்டன.
லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தமிழகக் கட்சிகளுக்கிடையில் கூட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்குமிடையில் கூட்டணி ஏற்படக்கூடும் என்றும் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு கூட்டணி எதுவும் ஏற்படவில்லை.
இதனால் இரண்டு கட்சிகளும் தத்தமது வழியில் சென்று தேர்தலில் போட்டியிட்டன. பா.ஜ.க. கூட்டணியில் ஜெயலலிதாவுக்கு எதிரான கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதனால் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிரதமரானார். எனவே மோடியை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கித்தருமாறு கேட்பதற்கு ஜெயலலிதா தீர்மானித்தார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லி சென்று பிரதமரை சந்தித்தார்.
அத்துடன் 64 பக்கங்கள் அடங்கிய மனு ஒன்றையும் பிரதமரிடம் ஜெயலலிதா வழங்கினார். அத்துடன் மத்திய அமைச்சர்களான பொன். ராதாகிருஸ்ணன், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஜெயலலிதாவை டில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் ஜெயலலிதா சந்தித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டில்லியில் தங்கியிருந்து முயற்சி செய்தார். ஆனால் பிரதமரை சந்திப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர் பா.ஜ.க. கூட்டணியிலுள்ள முக்கிய கட்சியொன்றின் தலைவராக இருக்கிறார்.
மோடியை சந்திப்பதற்கு விஜயகாந்துக்கு கிடைக்காத சந்தர்ப்பம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது. இது அ.தி.மு.க.வினரிடம் மகிழ்ச்சியையும், தே.மு.தி.க.வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வைகோவும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில்லை என்று பகிரங்கமாக அறிவித்த பின்னரே பா.ஜ.க.கூட்டணியில் இணைந்து கொண்டார். அதேபோன்று திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில்லை என்று ஏற்கனவே அறிவித்த நிலையிலேயே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துக்கொண்டது. தற்போதைய நிலையில் பா.ஜ.க. இந்த மூன்று கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு அ.தி.மு.க.வுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமா?
சிலவேளை இந்த மூன்று கட்சிகளையும் பா.ஜ.க. ஒதுக்கிவிடக்கூடும். அ.தி.மு.க விடமுள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்படி மூன்று கட்சியையும் கூட்டணியிலிருந்து ஒதுக்கிவிட்டு அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளக்கூடும்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். அது மட்டுமல்ல, முன்னைய காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அரசுக்கும் ஜெயலலிதாவின் மாநில அரசுக்குமிடையில் சுமுகமான உறவு இருக்கவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற ஒரு குறைபாடு இருந்து வந்தது. குறிப்பாக நிதியுதவி, மின்சாரம், காவிரிநீர் பிரச்சினை என்பவற்றில் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஜெயலலிதா பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வந்தார்.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. ஆட்சியுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவே ஜெயலலிதா விரும்புகிறார். இந்த நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் ‘பொதுநலம்’ மட்டுமல்ல, பெரிய ‘சுயநலமும்’ ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.
அரசியல் ரீதியாக சக்திபடைத்தவராக ஜெயலலிதா இருந்தாலும், அவர் மீது பெங்களூரில் சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கிறார். முன்னைய மத்திய காங்கிரஸ் அரசு இதனை இறுக்கிப்பிடித்து முன்னெடுத்து வந்தது.
எனவே தற்போதைய பா.ஜ.க. ஆட்சியாளருடனும் முரண்டு பிடிக்காமல், ஒத்துழைப்பது போன்ற பாவனையில் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபடுவதற்கான முனைப்புடன் ஜெயலலிதா செயற்பட்டு வருகிறார். இந்த நிலையிலேயே பிரதமரை சந்திக்க புதுடில்லி சென்றபோது மத்திய நிதியமைச்சு அருண் ஜெட்லியை சந்தித்துப் பேசியுள்ளார்.
எனவே தற்போதைய பா.ஜ.க. ஆட்சியாளருடனும் முரண்டு பிடிக்காமல், ஒத்துழைப்பது போன்ற பாவனையில் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபடுவதற்கான முனைப்புடன் ஜெயலலிதா செயற்பட்டு வருகிறார். இந்த நிலையிலேயே பிரதமரை சந்திக்க புதுடில்லி சென்றபோது மத்திய நிதியமைச்சு அருண் ஜெட்லியை சந்தித்துப் பேசியுள்ளார்.
முன்னைய ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரத்தை ஒரு தடவை கூட ஜெயலலிதா சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா புதுடில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தபோது அவரை மத்திய அமைச்சர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமாக குறிப்பிடக்கூடிய அமைச்சர்தான் ரவிசங்கர் பிரசாத். பிரபல வழக்கறிஞரான ரவிசங்கர் பிரசாத் பெங்களூரில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குகளில் ஆஜரானவர். அவ்வாறான ரவிசங்கர் பிரசாத் தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
எனவே, பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று ஜெயலலிதா நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களுடனேயே பா.ஜ.க. அரசுடன் ஜெயலலிதா நெருக்கமான உறவுகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்த நெருக்கம் விஜயகாந்தின் தே.மு.தி.க., வைகோவின் ம.தி.மு.க., ராமதாஸின் பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.
அத்துடன் தி.மு.க.வுக்கும், அதன் அணியிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும்கூட கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை. குறிப்பாக தி.மு.க.முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் தொடர்புடைய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கு இறுக்க மடையக்கூடிய நிலை காணப்படுகிறது.

இந்தத் தோல்வியிலும் துவண்டு போகாமல் அடுத்த கட்ட நடவடிக்கையை தி.மு.க. முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தமது 91ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். கருணாநிதி இந்தளவு உயர்வதற்கு அவரது கடின உழைப்பே காரணமாகும். ஆரம்ப காலத்தில் கட்சிக்காக உழைத்து கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.
மூடநம்பிக்கைகளும், சமூக அடக்குமுறையும், குலபேதம், வர்க்க ஒடுக்கு முறை நிலவிய காலகட்டத்தில் அவற்றை உடைத்தெறிந்து சமூக விடுதலைக்காக போராடிய முன்னோடிகளில் கருணாநிதியும் ஒருவர். பெரியார் ஈ.வே.ராவின் அடியைப் பின்பற்றி அறிஞர் அண்ணாவின் தம்பிகளில் ஒருவராக அவருக்கு தோள் கொடுத்து தமிழரின் சமூக விடுதலைக்காக உழைத்தவர். அதனை தமிழினம் என்றுமே மறக்க முடியாது. அரசியலில் பெரும் சாதனை புரிந்திருந்தாலும் அரசியலுக்கப்பால் தமிழுக்கும், தமிழ் பண்பாடு, கலை, கலாசாரம், தமிழ் மக்களுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். அது வரலாறாக தொகுக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த 91 வயதிலும் தளராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். தெளிவான சிந்தனை, திடமான கொள்கையுடன் தி.மு.க. வை மட்டுமன்றி தமிழர்களை வழிநடத்திச் செல்லும் கருணாநிதி பல்லாண்டுகள் வாழ வேண்டுமென்பதே அவரது அபிமானிகளின் அவா.
நல்லதம்பி நெடுஞ்செழியன்
Post a Comment