JUNE 14TH, 2014
வாஷிங்டன்: ஈராக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய உதவி செய்ய தயார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் சதாம் ஆதரவு ஐஎஸ்ஐஎஸ் படை மீது வான்வழி தாக்குதலை எப்போது வேண்டுமானாலும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஈராக் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். ஈராக்கிலும், சிரியாவிலும் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.
அடுத்தடுத்து பல நகரங்களை பிடித்து ஈராக்கில் தீவிரவாதிகளின் கை ஓங்கிவரும் நிலையில், அந்த நாட்டு பிரதமர் நூரி அல் மாலிக்கி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்துடன் ரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இதையடுத்து ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் ஈராக்கிற்கு அமெரிக்கா உதவி செய்யும். ஆனால் பிளவுகளை ஈராக்தான் சீர்செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈராக்கிற்கும் மீண்டும் அமெரிக்க ராணுவத்தை அனுப்ப முடியாது. ஆனால் ஈராக் பாதுகாப்பு படைகளுக்கு உதவி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் ஆகுமாறு அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், ஈராக்கில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் யோசனை அமெரிக்காவுக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்று கூறிவிட மாட்டேன்.
ஈராக்கிலும் சரி, சிரியாவிலும் சரி இந்தத் தீவிரவாதிகள் தங்களுக்கு என்று நிலையான இடத்தை உருவாக்கிவிடக்கூடாது. இது தொடர்பாக ஈராக்கியர்களுடன் கலந்தாலோசனை நடந்து வருகிறது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அங்கு உடனடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பதில் அளித்தார். எனவே ஈராக்கில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment