திருகோணமலை மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள 162 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வள்ளிக்கேணியில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தங்களது பூர்வீகக் கிராமமான சம்பூரை விடுத்து, வள்ளிக்ணேயில் குடியேற அம்மக்கள் விருப்பம் தெரிவித்ததாக மூதூர் பிரதேச செயலாளர் நடராசா பிரதீபன் தெரிவித்தார்.
சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த 825 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ளனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி, அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடம்பெயர்ந்தவர்களை பல சந்தர்ப்பங்களில் மீளக்குடியமரத்த முனைந்த போதும் அம்முயற்சி கைகூடயிருக்கவில்லை.
இம்மக்கள் தற்போது, வேறு இடங்களில் மீளக்குடியமர விரும்புகின்றார்கள். இந்நிலையில், அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்களுக்கு பொருத்தமான மாற்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதேச செயலாளர் கூறினார்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளக்கந்தை, வீரமாநகர் வடக்கு. வேம்படித்தோட்டம், குறவன்வெட்டுவான், தங்கபுரம், சீதனவெளி ஆகிய இடங்கள் மீள்குடியேற்றத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சீதனவெளியில் ஏற்கனவே 84 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
Post a Comment