அளுத்கம இனக்கலவரம் ஒரு சிறிய விடயம் என்று வலியுறுத்தும் அமைச்சர் மேர்வின் சில்வா, அது தொடர்பில் பொலிஸ் மா அதிபரை பதவி விலகச் சொல்வது முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார்.
அளுத்கமவில் நடைபெற்ற இன வன்முறைகளின் போது பொலிசார் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்று ஐ.தே. க நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா,
இது முட்டாள்தனமான கருத்து என்று விமர்சித்துள்ளார். உலகில் பல நாடுகளில் பாரிய இனக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதற்குப் பொறுப்பேற்று அந்நாடுகளின் பொலிஸ் மா அதிபர்களை யாரும் பதவி விலகச் சொல்லி வற்புறுத்தவில்லை.
அந்த சம்பவங்களுடன் ஒப்பிடும் போது அளுத்கமவில் நடைபெற்றது ஒரு சிறு சம்பவம் மட்டுமே. இதற்காக பொலிஸ் மா அதிபரை குற்றம் சாட்டுவது தவறு. அவர் நேர்மையானவர் மட்டுமன்றி திறமையானவரும் கூட. அவரைக் குற்றம் சாட்டுகின்றவர்கள் ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இன வன்முறைகளையும் மறந்துவிடக் கூடாது.
அவற்றுக்குப் பொறுப்பேற்று எந்தவொரு பொலிஸ் மா அதிபரும் பதவியைத் துறந்த முன்னுதாரணங்கள் இல்லை என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
அளுத்கமை இனக்கலவரம் தற்போது அரச மட்டத்து அதிகாரிகளினாலும், அமைச்சர்களினாலும் திசை திருப்பப் பட்டு வருவது அவதானிக்க முடிகிறது . கலவரமே நடைபெறாதது போன்றும், ஏற்பட்ட பிரச்சினைக்குக் கூட முஸ்லிம்களே காரணம் என்பது போன்ற காடைத்தன பேச்சுக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப் படுவதானது கண்டிக்கத்தக்க அம்சமாகும்.
Post a Comment