முஸ்லிம் மாணவியர் மற்றும் அவர்களின் தாய்மார்கள் தொடர்பில் இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலய அதிபர் விதித்திருந்த பர்தாவுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலமாக ஏராளமான தமிழ், முஸ்லிம் மாணவிகளும் கல்வியைத் தொடர்கின்றனர். எனினும் தற்போதைய அதிபர் பதவியேற்றது தொடக்கம் பாடசாலை வளாகத்தினுள் பௌத்த கலாசாரம் தவிர ஏனைய கலாசாரங்களுக்கு இடமளிக்காத போக்கைப் பின்பற்றுகின்றார்.
இதன் உச்சகட்டமாக முஸ்லிம் மாணவிகள் மற்றும் அவர்களின் தாய்மார் பாடசாலை வளாகத்தினுள் பிரவேசிக்கும் போது தமது பர்தாவை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவொன்றையும் பிறப்பித்திருந்தார்.
மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவின் ஆதரவு தனக்கு இருப்பதால் தன்னை யாரும் அசைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இது தொடர்பாக மாணவியரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கொன்று தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மேல் மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து மாகாண கல்வி அமைச்சு இவ்விடயத்தில் தலையிட்டது. இவ்விடயத்தில் தொடர்ந்தும் பிடிவாதமாக செயற்படும் பட்சத்தில் அதிபர் இடமாற்றம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிபர் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தினுள் பர்தா உடைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment