ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்கு தாம் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பொது பல சேனா சூளுரைத்துள்ளது.
சிங்களப் பத்திரிகையான மௌபிம பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நாட்டில் 30 வருடங்களாக நீண்டுகொண்டிருந்த யுத்தத்தை வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டு வந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதான். அதுமட்டுமன்றி இந்நாட்டின் சிங்கள பௌத்தர்களுக்கு உரிய தலைமைத்துவம் வழங்கியதும் அவர்தான்.
சிங்கள மக்களின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான். அவரை விடத் தகுதியானவர் யாரும் தற்போதைக்கு நாட்டில் இல்லை.
இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயற்பட்டு வருகின்றனர். அரசியல் ரீதியாக அவரைத் தோற்கடிப்பதற்கு சதிமுயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அளுத்கம சம்பவம் போன்ற கலவரங்களை உருவாக்கி தமது இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார்.
இதுவரை காலமும் அரசாங்கத்துக்கும் பொது பல சேனாவுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்று இரு தரப்பும் கூறிவரும் நிலையில், ஞானசார தேரரின் இந்தக் கருத்து மூலம் அவர்களுக்கிடையிலான இரகசிய தொடர்பு அம்பலப்பட்டுள்ளது.
சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட அமைப்பே பொது பல சேனா என்பதும் மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டிருப்பதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment