இலங்கையின் அரசியலில் மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா என்பன இந்த செல்வாக்கை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் அளுத்கமையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னரே இந்த செல்வாக்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா தூதுவர் மிச்செய்ல் சிசன், இதில் மிக முக்கிய பாத்திரத்தை கொண்டிருக்கிறார்.
அளுத்கம சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரங்கீனும் ஒன்றாக சேர்ந்து ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
அதேநேரம் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமெரிக்க தூதுவர் சந்தித்தார்.
இதேவேளை நேற்று அளுத்கம சம்பவத்தின் போது பொதுபலசேனாவின் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெருமவை தூதுவர் சந்தித்துள்ளார்.
இதேவேளை மிக முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜீத் பிரேமதாஸவுக்கும் இடையிலான வேறுப்பாடுகளை அமெரிக்கா தற்போது தீர்த்து வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கப்பால், நீண்டகாலமாக இலங்கையின் அரசியலில் முக்கிய ஊடகமாக கருதப்படும் சிரச தொலைக்காட்சி ரணில் விக்ரமசிங்கவின் பேட்டியை ஒளிபரப்பு செய்துள்ளது.
இலங்கையின் பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிரச ஊடகம் அறிவித்துள்ளது.
இவையாவும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கான அடிப்படைகளாக அமைந்துள்ளன.
எனினும் தமது பரம்பரைக்கான ஆட்சியதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கும் ஜனாதிபதியும், அவரின் சகோதரர்களும் ஆட்சி மாற்றத்தை தடுக்க தன்னாலான அனைத்தையும் செய்வர் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே இலங்கையின் அரசியலில் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை, குழப்பநிலைகளை எதிர்பார்க்க முடியும் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment