போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 966 பேர் கடந்த மூன்று வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 133 கிலோ நிறையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் சகல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவ்வாறு பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மூன்று வருடங்களில் 358 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் 51334 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல 176718 கிலோ நிறையுடைய கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அச்சம்பவத்துடன் தொடர்புடைய 97 601 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் கொக்கெயின், ஹேஸ் உள்ளிட்ட வெவ்வேறு வகையான 30 கிலோ நிறையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் அவற்றை விற்பனை செய்த மற்றும் பாவனைக்குட்படுத்திய 31 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்து 48 ஆயிரத்து 966 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment