சமாஜ்வாடி கட்சி ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று, முலாயம்சிங் யாதவ் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியோ அல்லது பா.ஜனதாவோ ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற முடியாது என்பது தெளிவாகிவிட்டது. எனவே மாற்று அணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
எனவே அடுத்த தேர்தல் முடிவில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மையாகும். எனவே சமாஜ்வாடி போன்ற மக்கள் ஆதரவு கட்சிக்கு நீங்கள் ஓட்டளிக்கவேண்டும்.
நாங்கள் கட்சி தொடங்கும்போது ஊடகங்கள் ஏளனம் செய்தன. இப்போது எனக்கு பிரதமர் பதவி மீது ஆசை என்று கூறுகின்றன. நான் பிரதமர் ஆவது குறித்து உத்தரபிரதேச மாநில மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியின் ஊழலால் நாடு ஏற்கனவே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
அரசின் மோசமான பொருளாதார கொள்கையினால் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. இந்த நிலை மாறி வரவேற்கத்தகுந்த மாற்றம் ஏற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. என் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து இருப்பதே அதற்கு உதாரணமாகும்’’.
இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
பா.ஜனதா மீதும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீதும் அவர் கடும் தாக்குதல் தொடுத்தார். ‘‘உத்தர பிரதேசத்தை மதச்சார்பின்மைக்கு இடமில்லாத குஜராத்தைப் போல் மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’’ என்று கூறிய முலாயம்சிங், நரேந்திரமோடியை ஊடகங்கள் தூக்கிப்பிடித்தாலும் அவருடைய செல்வாக்கு நாளுக்கு நாள் தேய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment